தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் அமைப்பு நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை!

தஞ்சாவூர் பெருவுடையார் திருக் கோவிலில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் அமைப்பான வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “தஞ்சை பெருவுடையார் கோவிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நடத்தப்படும், 2 நாள் நிகழ்ச்சிக்கு, கோவில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. பழம் பெருமையும், பாரம்பரியமும் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கை.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 2017ல் யமுனை நதிக்கரையில் நதியை மாசுபடுத்தி நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்! எனவே, இதனை அவசர வழக்காக விசாரிப்பதோடு, வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது வாழும் கலை அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தியான நிகழ்ச்சியை மட்டுமே அங்கு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது! கோவில் பிராகாரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதைக் கேட்ட நீதிபதிகள் தியான நிகழ்ச்சி எனில் அதற்கு மண்டபங்களை அணுகியிருக்கலாமே? பாரம்பரிய கோவிலினுள் நடத்த என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியதுடன், பந்தல்களை அகற்றினால் எங்கு தியான நிகழ்ச்சியை நடத்துவீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு வாழும் கலை அமைப்பு வழக்கறிஞர் கோவிலின் மூலையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நடத்திக் கொள்ளப்படும் என்றனர். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், கோவில்களில் தீ விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலை பாதுகாப்பது அவசியம் எனக் கூறி, வாழும் கலை அமைப்பின் ஆன்மிக நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள், கூடாரங்களை முழுமையாக அகற்ற வேண்டும், அதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.