spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

- Advertisement -
Jambukeshwara temple thiruvanaikkaval

காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு மட்டுமே. அதையே தியாகம் என்றும் கூறலாம்.

அத்தகைய சிவனடியார்கள் ஈசனிடம் காட்டிய அன்பின் எல்லையை நம்மால் அறிய முடியாது. இதுவே ” தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே ! ” எனும் அருளாளர் வாக்கால் புலனாகிறது.

இத்தகைய சிவனடியார்கள் அன்பில் மட்டுமா சிறந்து விளங்கினர் ? அவர்கள் வாழ்க்கை வரலாறு நமக்கு அன்பின் மகிமையை மட்டுமா விளக்குகிறது ? அன்போடு சேர்த்து ஒழுக்கம், தியாகம், வீரம் என அனைத்தையுமே அல்லவா விளக்குகிறது !

இத்தகைய பெரும் குணங்கள் பலவற்றை நமக்கு தெளிந்த நீர் போல் காட்டும் திருத்தொண்டர்களுள் ஒருவரான ” கோச்செங்கட் சோழர் ” எனும் சிவனடியாரின் பெருமை காண்போம்.

சிவனடியார்கள் இறைவனிடம் காட்டும் அன்பே ” தியாகம் ” என வழங்கப்படுகிறது. அடியார்கள் அறுபத்து மூவரின் அருள் வரலாற்றை அரும்பெரும் காப்பியமாக்கிய பெரியபுராண ஆசிரியர், சிவத்தொண்டர்களின் தியாகத்திற்கு ” வீரம் ” என்ற பெயரைச் சூட்டுகிறார். வாள் எடுத்து, வில் எடுத்து, வேல் எடுத்துச் செய்வதன்று வீரம். தன் புலன்களைத் துறந்து, முக்குணங்களிலிருந்து விடுபட்டு, தன்னையும் துறந்து, பாசத்திலிருந்து நீங்கி, இறைவனுடைய உவப்பு ஒன்றையே கருதிச் செய்யப்படும் தியாகமே வீரம்.

அதைச் செய்தவர்களே சிவனடியார்கள். அத்தகைய அறத்தொண்டையும், மக்கள் நலம் பேணும் பொருட்டு வாளேந்தி புறத்தொண்டையும் ஒருங்கே ஆற்றியவனே இந்த கோச்செங்கட் சோழன்.

புறவின் பொருட்டுத் துலை புகுந்து தியாகம் புரிந்த சிபியின் வழி வந்த சோழர்களுக்கு உரிமையாகிய சோழவள நாட்டிலே, காவிரி நதிக்கரையிலே சந்திர தீர்த்தத்தின் அருகில் ஒரு சோலையுண்டு. அப்பூங்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்கும் சிவலிங்கத்தை ஒரு ** வெள்ளானை தவ உணர்வுடன், தும்பிக்கையில் தண்ணீர் முகந்து, மரங்களை ஆட்டிப் பூங்கொத்துகளை எடுத்துச் சாத்தி வணங்கி வழிபாடு செய்யும். அதனால் அது ” திரு ஆனைக்கா ” எனப் பெயர் பெற்றது.

அங்கு அறிவுடைய ஒரு சிலந்தி, மரத்தின் சருகு இறைவன்மீது உதிராவண்ணம், அன்புடன் தன் வாய் நூலால் பந்தலிட்டது.

ஒரு நாள் எப்போதும்போல் பூசை செய்ய வந்த யானை, இறைவன்மீது இவ்வாறு வாய்நூலால் பந்தலிடுவது அபத்தம் என்று கருதி, அதனை அழித்துவிட்டு வழக்கம்போல் பூசை செய்துவிட்டுச் சென்றது. பின்னர் அங்கு வந்த சிலந்தி பந்தல் அழிபட்டிருப்பதைக் கண்டு வருந்தி மீண்டும் அன்புடன் பந்தலிட்டது. ஆனால் மறுநாள் பூசை செய்ய வந்த யானை மறுபடியும் சிலந்தியின் வாய்நூல் பந்தலை அழித்தது. இவ்வண்ணம் பலமுறை நடந்தது.

இது கண்ட சிலந்தி சினமுற்றது. ” இறைவனுடைய திருப்பந்தலை அழித்துச் சிவப்பணிக்கு இடர்புரியும் இந்த யானையைக் கொல்ல வேண்டும் ” என்று கருதியது.

வழக்கம்போல் நூலால் பந்தலிட்டு அதில் ஒருபுறம் மறைந்திருந்தது. பூசிக்க வந்த யானை அந்தப் பந்தலை அழிக்கும்போது, சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்தது. அதன் விடத்தின் வேகத்தாலும், கடியால் ஏற்பட்ட வேதனையாலும் துன்புற்ற யானை மண்ணில் வீழ்ந்து புரண்டது. தும்பிக்கையைப் பலமுறை நிலத்தில் அடித்தது. அதனால் தும்பிக்கையுள் சிக்கிய சிலந்தி மாண்டது. சிலந்தி விடத்தால் யானையும் மாண்டது.

இறைவன் அருட்காட்சி தந்து யானைக்கும் சிலந்திக்கும் அருள் புரிந்தார். யானை சிவபதம் உற்றது. இறைவனுக்கு பந்தலிடும் பணியில் அதிகவிருப்பமுடைய சிலந்தி, சோழர்குலத்தில் மன்னனாகப் பிறந்து மேலும் கோவில்கள் பல புரியுமாறு இறைவன் திருவருள் புரிந்தார்.

கருவூரில் வாழ்ந்த சிவகாமியாண்டார் எனும் பக்தர் இறைவனின் பூசைக்காகக் கொண்டு சென்ற மலர் மாலையை பறித்துப் பூமியில் சிதறடித்த யானையை வெட்டிய எறிபத்த நாயனாரிடம் நடந்த தவறுக்குப் பிராயச்சித்தமாகத் தன் சிரசை வெட்டி எறியுமாறு வேண்டிய புகழ்ச்சோழன் பிறந்த குலமாம் சோழர் குலத்தில் இறைவனின் திருவாக்கின்படி அந்தச் சிலந்தி தோன்றும் காலம் நெருங்கியது. சுபதேவன் எனும் சோழமன்னன் கமலவதி எனும் கற்பிட்சிறந்தாளுடன் சோழநாட்டை ஆட்சிபுரிந்துவந்தான். அவன் மக்கட்பேறு இன்மை குறித்து வருந்தினான்.

தில்லையம்பதி சென்று அம்பலவாணரை வேண்டித் தவம் புரிந்தான். சிவபெருமான் திருவருள் செய்தபடி சிலந்தி வந்து கமலவதி வயிற்றில் கருவடைந்தது. கரு வளர்ந்து குழந்தை உதிக்கும் பருவம் வந்தது.

சோதிட வல்லுனர்கள், ” இன்னும் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்குமாயின் இம்மூவுலகையும் ஆளக்கூடியதாய் இருக்கும், ” என்று வாக்குக் கூறினர்.

சோதிடர்கள் கூறியதைக் கேட்ட அரசமாதேவி மகவு ஒரு நாழிகை கழித்துப் பிறப்பதற்கு வழி யாதென்று சிந்தித்தாள். தன் தோழிகளுடன் ஆராய்ந்தாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் காலை மேலாகவும், தலை கீழாகவும் தன்னை அமைக்குமாறு கூறினாள்.

அவ்வண்ணமே அவளைத் தலைகீழாகத் தூக்கிக் கட்டினார்கள். காலம் உணர்ந்தார் கூறிய நேரம் வந்தவுடன் கட்டினை நீக்கி மகவைப் பெற்றெடுத்தாள். இதனால் குழந்தை கண் சிவந்து பிறந்தது.

தாய், ” என் மகன் செங்கணான் ” என்று கூறி அக்குழந்தையை அணைத்து மழிந்தாள். பின் சில நாழிகைகளில் அவள் உயிர் துறந்தாள். தன் உயிர்க்கு இறுதி பயர்க்கும் என்று தெரிந்தும், மகவின் சிறப்பை முன்னிட்டு அளக்க முடியாத வேதனையை தாங்கிப் பிள்ளையைப் பெற்று உயிர் துறந்தாள் எனில், தாயன்பு எத்துனை உயர்ந்தது !

தாயைப் பிரிந்த மகனை சுபதேவன் நன்று வளர்த்தான். தன் மனையாள் அழைத்து மகிழ்ந்த பெயரையே தன் மகனுக்குக் சூட்டினான். கோச்செங்கண்ணர் வேதாகமங்களையும், வில் வேதத்தையும் மேலும் அறிய வெண்டிய அனைத்துக் கலைகளையும் சிறப்பாகக் கற்றுணர்ந்தார்.

உரிய காலத்தில் மகனுக்கு மகுடம் புனைந்தார். பின்னர் சுபதேவர் கானகம் புகுந்து தவம் செய்து, சிவபதம் புகுந்தார். கோச்செங்கட் சோழர் உலகத்தை ஒரு நெறி நிறுத்தி அரசாள்வாராயினர். அவர் முற்பிறப்பின் உணர்வு பெற்றார். சிவபெருமானுக்கு காதலோடு ஆலயங்கள் பல எழுப்பினார்.

கோச்செங்கண்ணர், திருவானைக்காவில் தாம் முதலில் அருள்பெற்ற காரணத்தால் அங்கு வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்கும் சிவமூர்த்திக்கு அழகிய ஆலயம் கட்டிமுடித்தார். முற்பிறவியில் யானை செய்த இடரை நினைத்து அங்கு யானை நுழையமுடியாதபடி வாயில் வைத்து அமைத்தார்.

ஐந்து பூதத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் கருவறை சிறுவாயிலுடன் அமைந்திருப்பது இன்றும் காணப்படுகிறது. மந்திரிகளை ஏவி சோழநாடு முழுவதும் ஆலயங்கள் பல புதுக்கினார். அக்கோயில்கள் தோறும் அமுது படைக்கும் திருவிழாக்களுக்கு நிபந்தங்களும் அமைத்தார்.

கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்கு எழுபது கோவில்களும், திருமாலுக்கு மூன்று கோவில்களும் எழுப்பியதாகத் தெரிகிறது. இவர் செய்த சைவத்தொண்டு ஒரு ஆழ்வார் வாயிலாக நமக்கு தெரியவருவது மிகவும் சிறப்பானதும் மகிழ்வானதுமாகும். ஆம், இதனைத் திருமாலின் அடியாராகிய திருமங்கையாழ்வார் கூறுவது அதிக சிறப்புடையது அல்லவா !

” இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மிங்களே. “

கோச்செங்கட் சோழர் முடிவில் திருத்தில்லை சென்று அம்பலத்தாடும் ஆடலரசனை ஆறுகாலங்களும் வழிபட்டு மகிழ்ந்தார். அங்கு இறைவனைப் பூசிக்கும் அந்தணர்களுக்கும் மாளிகைகள் பல புதுக்கித் தந்தார்.

சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சித பாதத்தில் கலந்து இன்பமெய்தினார். கோச்செங்கட் சோழரின் பெருமையை அடியில் வரும் அப்பர் பெருமான் பாடலின் மூலம் அறியலாம்.

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்க ணானுமாகக்
கலந்தநீர் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர்தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே.

இவ்வரலாற்றில் வரும் ** வெள்ளானை, தேவேந்திரன் பவனி வரும் தேவலோக யானை அன்று. இந்த வெள்ளானையும் சிலந்தியும் இத்தலத்தில் பிறந்த பின்னனி சுவையான ஒன்று. திருக்கயிலையில் சிவகணத்தவருள் மாலியவான், புட்பதந்தன் என்ற இருவர் தமக்குள் சிவத்தொண்டில் தாமேதான் சிறந்தவர் என்று கருதி மாறுபட்டு இறுமாப்படைந்தனர். அதன் காரணமாக சினம் கொண்டு ஒருவருக்கொருவர் சபித்துக்கொண்டனர்.

மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தான். புட்பதந்தன் பதிலுக்கு மாலியவானை சிலந்தியாகுமாறு சபித்தான். ருவரும் இறைவன் ஆணையின்படி இத்திருத்தலத்திலே யானையும் சிலந்தியுமாகப் பிறந்து, சிவபெருமானுடைய திருத்தொண்டிலே ஈடுபட்டு, பழம்பிறப்பின் பகை காரணமாக இப்பிறப்பிலும் மாறுபட்டுப் பகைத்து மாண்டு, முடிவில் வீடு பேறு பெற்றனர்.

இவ்வரலாற்றில் நாம் ஈசனார் உயிர்களிடம் கொண்டுள்ள அளவில்லாத அன்பைக் காணலாம். இறைவனின் அன்பில் பேதமில்லை என்பதை உணரலாம். மனிதனாயினும் விலங்காயினும் இறைவனுக்கு ஒன்றே என்பதை இவ்வரலாறு நன்று உணர்த்துகிறது.

அது மட்டுமா ? ஒரு தாய் தன் மகவுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யக்கூடியவள் என்பதை எத்துனை தெளிவாக விளக்குகிறது இவ்வரலாறு ! சோதிடர்கள் கூறியதைக் கேட்ட அரசமாதேவி, மகவு ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இம்மூவுலகையும் ஆளக்கூடியதாய் இருக்கும் என்பதற்காக தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்திருந்தும், உயிரைத் துச்சமாக மதித்து எத்தகைய ஒரு சிவத்தொண்டனை இவ்வுலகிற்கு வழங்கியிருக்கிறாள் ! நினைக்கும்போதே மனம் நெகிழ்கிறது.

இவ்வரலாற்றைப் படிக்கும்போது அனைவருக்கும் பொதுவாக ஒரு கேள்வி எழலாம். சாபத்தின் காரணமாகப் பூவுலகில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்த சிவகங்கள் இருவருமே தம் வழியே ஈசனுக்குத் தொண்டு செய்தனர், அப்படியிருக்க யானைக்கு மட்டும் சிவபதம் அளித்த ஈசன் சிலந்திக்கு முக்தியளிக்காமல் மற்றோர் பிறப்பை அருளியது ஏன் ?

இறைவன் அருளே வடிவானவன். ஆயினும் எந்த ஒரு உயிராயினும், அது சிவகனமாக இருந்தாலும், செய்த தவறுக்கான பலனை அடைந்தே தீரவேண்டும். மனதால் தீங்கு நினைத்தாலும், தண்டனை உண்டு. இவ்வரலாற்றில் முதலில் யானையைக் கொல்ல சிலந்தியே முற்பட்டதனால், அதற்கு மீண்டும் ஒரு பிறப்பு வந்தது. அப்பிறப்பும் மேலானதாகவே எய்தியது என்பது இறைவனின் அருளைக் காட்டுகிறது.

வாய் நூலால் பந்தலிட்ட புண்ணியத்துக்கு மன்னனாகப் பிறந்து உலகம் முழுவதும் புரக்கும் பெரும்பேறு சிலந்திக்கு உண்டாகியது என்றால், ஆலயப் பணியின் பெருமையை இதனால் நன்கு உணரலாம். 

” வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னையுயர்
கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே. ” 

இது ராமலிங்கர் வாக்கு. அருளும் அன்பும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டன அல்ல. திருத்தொண்டர்கள், தாம் பெற்ற ஊன் கெட்டு, உயிர்கெட்டு இறைவடிவாகவே நின்றவர்கள். அவர்கள் பெருமானின் திருவுருவமாகவே ஆனவர்கள். நூலால் பந்தலிட்ட சிவபுண்ணியம் அரச பதவியைத் தருமாயின், கல்லால் ஆலயம் எழுப்பிய தருமசீலர்களுக்கு எத்துனை பெரிய பதம் கிடைக்கும். நாம் கோச்செங்கட் சோழன் போல் கற்கோவிலோ, மாணிக்கவாசகர் போல் சொற்கோவிலோ, பூசலர் போல் உட்கோவிலோ கட்டவேண்டிய அவசியம் இல்லை.

மனதால் இறைவனை நினைத்தாலே போதும், அதுவும் முடியாவிடில் நாவால் அவன் நாமம் செப்பினால் போதும். அதுவும் கூட முடியாவிடில் ஏனையோரிடம் பகைமை பாராட்டாமல் அன்பு செய்தால் மட்டுமே கூடப் போதும்

ஏனெனில் அன்பே சிவம் ! அன்பே அரி ! என்பதை உணர்க.

  • ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe