- சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு
- வருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.
- அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
- வெளிநாட்டு கிளைகளின் வருவாய்க்கு முறையாக வரி செலுத்தவில்லை என்கிறது வருமான வரித்துறை.
- சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் ஆய்வு, நிறுவனங்களின் இயக்குநர்களிடம் விசாரணை.
- திண்பண்டங்களை பெருமளவு ஏற்றுமதி செய்யும் கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு!

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு கிளைகளின் வருமானத்தை சரவணபவன் மறைத்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் (grand sweets) மற்றும் ஹாட் பிரட்ஸ் ( Hot Breads) ஆகிய உணவகங்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரை அடுத்து, 4 உணவகங்கள் தொடர்பான இடங்களில், வியாழக்கிழமை இன்று காலை வருமான வரிச் சோதனை நடந்தது. சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் கார்ப்பரேட் அலுவலகம், கேகே நகரில் உள்ள சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வீடு, அவரது மனைவி மற்றும் மகன், முதன்மை செயல் அதிகாரி கணபதி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சரவண பவன் உணவகத்திற்கு சென்னையில் 25 கிளைகள் உள்பட இந்தியாவில் 56 கிளைகள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளிலும் 36 கிளைகள் உள்ளன. சரவணபவன் உணவகத்தில் வெளிநாட்டு பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் வெளிநாட்டு உணவகக் கிளைகளில் இருந்து வரும் வருவாயை மறைத்து முறைக்கேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாறு காந்தி நகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் தலைமையகத்திலும், உரிமையாளர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 22 கிளைகளும், புதுச்சேரியில் 4 கிளைகளையும் அமைத்து இயங்கி வரும் ஹாட் பிரட்ஸ் பேக்கரியின் அடையாறு காந்தி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ஹாட் பிரட்ஸ் உரிமையாளர் மகாதேவனின் சென்னையில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது.
தியாகராய நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் தலைமையகத்திலும் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிக்கியுள்ள ஆவணங்களை வருமானவரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கணக்கில் காட்டாத பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெறுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை, வெள்ளிக்கிழமை மாலை வரை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.