வரலாற்றுச் சிறப்பு மிக்க இடஒதுக்கீட்டு மசோதா: நிறைவேறியதன் பின்னணி!

கடந்த நான்கரை ஆண்டுகளாக, மோடி அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் ராகுல், அரவிந்த் கேஜ்ரிவால் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்!

இன்று மோடி அப்படி ஒரு செயலைச் செய்தபோது, அவர்கள் அனைவருமே அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க மசோதா என்னவென்றால்… அதுதான் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா!

இந்த மசோதா நிறைவேறியதன் பின்னணியை அறிந்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்!

இதுவரை இருந்தவர்கள் செய்யத் துணியாத பலவற்றை துணிந்து செய்து வருகிறார் பிரதமர் மோடி. நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் மோடியின் நடவடிக்கைகள் துவக்கத்தில் பெரும் விமர்சனத்தை சந்தித்தாலும், பின்னர் அதன் பயனைக் கருதி ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்…

அப்படித்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர்களுக்கும் இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை செய்து காட்டியுள்ளார் பிரதமர் மோடி.

சொல்லப் போனால், அரசியல்வாதிகள் எவரும் பேசவே தயங்கும் ஒரு விஷயம் இது. காரணம், ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்ற அச்சம்.

ஆனால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் பிரதமர் மோடிஎடுத்த நடவடிக்கையை, தேர்தலை மனதில் வைத்துதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அப்படி என்றால், இதுவரை ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தலை மனதில் கொண்டு இதனைச் செய்யத் தோன்றவில்லையா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த மோடி, இந்தியாவில், எங்கேயாவது எப்போதாவது தேர்தல்கள் நடந்துகொண்டே தான் இருக்கும். இது மிகப் பெரிய ஜனநாயக நாடு. நான் மூன்று மாதம் முன்னர் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்தால் கூட, மோடி மத்தியப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டுதான் இவ்வாறு செய்கிறார் என்று சொல்வார்கள். அதற்காக இடஒதுக்கீட்டை கொண்டு வராமல் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, ஜன.8 ஆம் தேதி செவ்வாய் அன்று மக்களவையில் இந்த மசோதா மிகப் பெரும்பான்மை எம்பி.,க்களின் ஆதரவில் நிறைவேறியது. தொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதி புதன்கிழமை அன்று, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டது. இதிலும், பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா நிறைவேற கடந்து வந்த பாதை மிகக் கடினமானதுதான். !

அரசியல் சாசன (124 வது திருத்தம்) மசோதா 2019′ என அழைக்கப்படும் இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் கொண்டு வந்தார்.

செவ்வாய்க்கிழமை மக்களவையில் பெரும் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. அப்போது, மகாராஷ்டிராவில் சோலாபூரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பிரதமர், ‛‛மாநிலங்களவையிலும் இதே போன்ற ஆதரவு மசோதாவுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். சிலருக்கு அநீ்தி இழைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். வாய்ப்புகளிலும் கூட அனைத்திலும் சமத்துவம் இருக்க வேண்டும்’ என்றார்.

மசோதாவை நிபுணர் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் கட்சி பிரச்னை செய்தது. வழக்கம் போல், காங்கிரஸின் கோரிக்கையை திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரித்தன.

இந்த மசோதா ஏழைகளின் நலனுக்கானது. எனவேதான் இந்த மசோதாவை நிறைவேற்ற விடக்கூடாது என்று எதிர்க் கட்சிகள் செயல்படுகின்ற என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டினார்.

அதேநேரம், ஆக்ராவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, ‛‛தேர்தலுக்கு முன் மசோதாவை ஏன் நிறைவேற்றுகிறீர்கள் என சிலர் கேட்கின்றனர். நீங்களே சொல்லுங்கள்… நம்நாட்டில், எங்காவது, எப்போதாவது தேர்தல் நடக்காமல் இருந்ததுண்டா. பிறகு எப்போது தான் இடஒதுக்கீட்டை கொண்டு வருவது. அதனால்தான், மத்திய பொதுத் தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

எதிர்பார்த்தது போலவே, இந்த மசோதாவானது எதிர்க்கட்சிகளுக்கு உள்ளேயே பிரிவினை இருப்பதை காட்டிக் கொடுத்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க மறுத்தன.

இந்நிலையில் டுவீட்டரில் பதிவிட்ட மோடி, ‛‛ஒவ்வொரு ஏழையும், எந்த ஜாதி, பிரிவாக இருந்தாலும் அவர் கௌரவமான வாழ்க்கை வாழ வேண்டும். அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் சாசனம் அனுமதிக்காததால், இந்தப் புதிய இடஒதுக்கீட்டை கொண்டு வர, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. அதையும் மோடி செய்து காட்டிவிட்டார்.

இந்த மசோதாவால் பெரும்பாலான ராஜபுத்திரர்கள் (தாகூர்கள்), ஜாட்கள், மராத்தாஸ், பூமிகார், காபு கம்மவர், பிராமணர் என பொதுப் பிரிவில் உள்ள அனைவரும் பலன் பெறுவார்கள். அதேபோல், மற்ற மதங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கும் இந்த மசோதா பயன் அளிக்கும்.

இந்த மசோதா நிறைவேறிய பின்னர், மோடி தனது டிவிட்டர் பதிவில், இட ஒதுக்கீடு மசோதா மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதத்தின் போது எம்.பி.,க்கள் தங்கள் புத்திசாலித்தனமான கருத்துகளை வெளிப்படுத்தினர். மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி.

இது இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தவும், இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிக்கவும் உத்வேகமாக அமையும். வலுவான இந்தியாவை உருவாக்க நினைத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி… என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல… மோடிக்கும் கிடைத்த மிகப் பெரும் வெற்றிதான்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.