சந்தப் பா கொண்டு தெய்வத்தமிழைச் சொந்தமாக்கிய திருமழிசைப் பிரான்!

திருமழிசைபிரான்  திருநட்சத்திரம்: தை – மகம் திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளினார்.

திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்), நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்).திருமழிசையாழ்வார் பெருமாளின் ஐந்து நிலைகளில் (பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி & அர்ச்சை) அந்தர்யாமி நிலையை விரும்பி பாடுபவர். அதேபோல் கிடந்து சேவை சாதிக்கும் எம்பெருமான் மீது காதல் கொண்டதனால் பெரும்பாலும் சயன திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருமழிசைபிரானும் ஆராவமுதாழ்வாரும்:
ஆழ்வார்களில் திருமழிசையாழ்வாருக்கு மட்டுமே பிரான் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதேபோல் பெருமான்களுள் ஆராவமுதனுக்கு மட்டுமே ஆழ்வார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!
(திருச்சந்தவிருத்தம்)

இப்பாசுரம் கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் ஆராவமுதனைப் பற்றியது.

இராமவதாரத்தின்போது சீதையைத் தேடியலைந்தும் நடந்த உன் திருவடிகளில் நொந்தவோ — வலி உண்டானதோ? எனத் தொடங்கி, பேசு வாழி கேசனே — (எதனால் நீ இப்படிக் கிடக்கிறாய் என்பதைப்) பேசுவாயாக! என முடிக்கிறார்.

திருக்குடந்தை ஆராவமுதப் பெருமான், திருமழிசை ஆழ்வாரின் “எழுந்திருந்து பேசு ” என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழுந்து அத்திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) (உத்தான சயனம்) அருள் பாலிக்கிறான்.

ஆராவமுதன் தன் சயனக் கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.

ஆழ்வாரும் ஆராவமுதனும் பரஸ்பரம் அன்பு பாராட்டி தங்கள் பெயரின் கடைசி பகுதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். அதாவது ஆராவமுதப் பிரான், திருமழிசையாழ்வார் என்று உள்ள தங்கள் பெயர்களை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசைப் பிரான் என்றும் மாற்றிக்கொண்டனர். பிரான் என்றால் அளப்பரிய உதவி செய்பவன் என்று பொருள்.

  • ஹேமந்த் ஸ்ரீ க்ருஷ்ணா. SRV
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...