நெல்லை வேளாண் அதிகாரியை பெண்ணுடன் இருத்தி படம்பிடித்து மடக்க முயற்சி!

muthukkumarasamyசென்னை: நெல்லை வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை பெண் பிரச்னையில் சிக்கவைக்க முயற்சி நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. முத்துக்குமாரசாமியை அடித்துத் துன்புறுத்திய அதிமுக பிரமுகர்கள் சிலர், ஒரு பெண்ணுடன் அவரை சேர்த்து வைத்து மொபைல்போனில் படம் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்தினால் அவமானத்துக்கு பயந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் நியமன விவகாரத்தில் முத்துக்குமாரசாமியை அமைச்சரின் உதவியாளரும், தலைமை பொறியாளரும் இன்னும் சில அதிமுக பிரமுகர்களும் அவரை மிரட்டியுள்ளனர். திருநெல்வேல்யில் உள்ள பாலபாக்யா நகரில் ஒரு வீடு மற்றும் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீடு என இரு இடங்களுக்கு முத்துக்குமார சாமியை அழைத்துச் சென்று மிரட்டினராம். பாலபாக்யா நகரில் உள்ள வீட்டில் வைத்து, முத்துக்குமார சாமியைத் தாக்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்த பிரச்னை தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நெல்லை வந்த சிறப்பு புலனாய்வு அதிகாரி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், விசாரணையைத் தொடங்கியுள்ளார். அப்போது, முத்துக்குமாரசாமியை நெல்லையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பெண்ணை வைத்து நாடகமாடி தவறாக செல்போன் மூலம் படம் எடுத்து மிரட்டினராம். இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்னையில் தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று முத்துக்குமாரசாமி மனவேதனை அடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.