சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்,   பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இது கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கமே. பேச்சுவார்த்தை தொடரும். ஹோட்டல்களில் சந்திப்பதற்கு பதிலாக இல்லத்தில் சந்தித்தோம். எது நல்லதென்று நீங்களே சொல்லுங்கள் என்று கூறினார்.

இதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், வெகு விரைவில் நல்ல செய்தி வரும் திமுக, காங் அல்லாத பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. அதிக இடங்களில் வெல்வதே இலக்கு என்று கூறினார்.

முன்னதாக நேற்று, நள்ளிரவைக் கடந்தும் பாஜக., அதிமுக., கூட்டணிப் பேச்சுவார்த்தை  நடந்தது. இதில், இரு தரப்பும் தங்களது நிலைப்பாடை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு, முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப் பட வுள்ள நிலையில், எல்லா கட்சிகளும் ஒரு புறம் தீவிரமான பிரச்சாரத்திலும் மற்றொரு புறம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும் இறங்கியுள்ளன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வீட்டில் நேற்று இரவு சென்னை வந்த பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இதில் அதிமுக தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ள, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் ஆகியோரும் கலந்து கொண்டர்.

பேச்சுவார்த்தையின் போது பாஜக.,வுக்கு 8 இடங்கள்தான் ஒதுக்க இயலும் என அதிமுக தரப்பில் பேசப்பட்டது. ஆனால் இது எங்களுக்குப் போதாது என்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு சில எம்பி தொகுதிகள் தேவை என்றும் பாஜக கோரிக்கை வைத்தது. எனவே குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என்று பாஜக கோரியது.

இதற்கு அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப் பட்டது. எனவே பேச்சுவார்த்தை மேலும் நீடித்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையே முடிவு செய்யப் படாததால், மீண்டும் கூடிப் பேசுவது எனவும் அப்போது எண்ணிக்கை முடிவு காணப்பட்டு, தொகுதிகளை அடையாளம் காண வேண்டும் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இன்று அல்லது நாளை பாஜக-அதிமுக ஒன்றுகூடி மீண்டும் ஆலோசனை நடத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், உடன் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும் கேட்பதை தர முடியாவிட்டாலும் ஓரளவு பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாக கணிசமான சீட்டுகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...