சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது பெண் செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் சரிதாநாயர், ஒவ்வொரு நாளும் அவர் புது புது குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று சரிதாநாயர் விசாரணை கமிஷன் முன்பு மீண்டும் ஆஜரானார். அப்போது அவர் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கூறியதால் மின்சாரத்துறை மந்திரி ஆர்யாடன் முகம்மதை 2011–ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் சந்தித்து 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார்.
விசாரணை கமிஷனில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சரிதாநாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மந்திரி ஆர்யாடன் முகம்மது மீது தான் கூறிய குற்றச்சாட்டுக்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும், மேலும் பல பிரமுகர்களுக்கு தான் பணம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ‘பென்டிரைவை’ நீதிபதியிடம் தான் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
கேரளாவில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் சரிதாநாயரின் இந்த குற்றச்சாட்டுகளை எதிர் கட்சிகள் முன்னிறுத்தி போராட்டங்கள் நடத்தி வருவதால் கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.