புது தில்லி:
இஷ்ரத் ஜகான் என்கவுண்டர் விவகாரத்தில், இரண்டாவதாகத் தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை யார் தயாரித்திருப்பர் என்பது உங்களுக்கே தெரியும் என்று, உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார்.
குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், ஒரு ‘தற்கொலைப்படை பயங்கரவாதி’ என்று அமெரிக்காவில் இருந்தபடி மும்பை நீதிமன்றத்தில் விடியோ கான்பிரன்ஸிங்கில் வாக்குமூலம் அளித்த டேவிட் ஹெட்லி கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்து, இஷ்ரத் ஜகான் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்தரத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு திருத்தி, இரண்டாவது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.பிள்ளை கடந்த வாரம் கூறியிருந்தார். இது, அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.வி.எஸ்.மணி நேற்று அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவலில் இஷ்ரத் ஜகான் வழக்கில், திருத்தப்பட்ட, இரண்டாவது மனுவை தாக்கல் செய்யுமாறு அப்போதைய காங்கிரஸ் அரசு எனக்கு உத்தரவிட்டது. அந்த நிர்ப்பந்தத்தால், அந்த மனுவில் நான் கையெழுத்திட்டு தாக்கல் செய்தேன். அந்த மனுவை நானும் தயாரிக்கவில்லை, அப்போதைய உள்துறை செயலாளரும் தயாரிக்கவில்லை. பிறகு யார் தயாரித்திருப்பார் என்பது உங்களுக்கே தெரியும். இதில் அரசியல் தலையீடு இருந்தது என்று நம்ப இடமிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இத்தகைய பரபரப்பான திருப்பங்களால், போலி என்கவுண்டர் என்று போலியாக ஒரு நிகழ்வை உருவாக்கி செய்தியாக்கிய விவகாரத்தில், இப்போது பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இருப்பினும், இஷ்ரத் ஜஹான் வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் திருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சிதம்பரம், முதல் பிரமாணப் பத்திரத்தில் தவறு இருப்பதாக தனக்குத் தெரியவந்த பிறகு, உள்துறைச் செயலர், உளவுத்துறையின் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இரண்டாவது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது உள்துறைச் செயலராக இருந்த ஜி.கே.பிள்ளை தற்போது இந்த விஷயத்தில் தன்னை விலக்கிக் கொள்வது அதிருப்தி அளிப்பதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.