பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தலைவன் மௌலானா மசூத் அசார், சிறுநீரக புற்று காரணமாக மரணம் அடைந்திருப்பதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்தது ஜெய்ஷி இ மொஹம்மத் அமைப்பு. அதன் தலைவன் 50 வயதான மசூத் அசார் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்த தகவல் படி, இது உறுதிசெய்யப்படாத தகவலாக உலா வருகிறது.

சிறுநீரக புற்று நோய் காரணமாக டயலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப் படுகிறது. அதற்காக ராவல்பிண்டியில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மௌலானா மசூத் அசார், இந்தியாவில் மேற்கொண்ட தற்கொலைப் படைத் தாக்குதலை அடுத்து இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற ஐஎஸ்ஐ உளவுத் தகவலை அடுத்து தெற்கு பாகிஸ்தானில் ரகசியமாக மாற்றப் பட்டார் என்று ஒரு தகவல் வெளியானது.

ஆனால், பாலாகோட் பயங்கரவாத முகாம் மீதான தாக்குதலின் போதே, மசூத் அசார் கொல்லப் பட்டிருக்கலாம் என்று கருதப் பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு வெளியிட்ட தகவலில், மசூத் அசார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியில் வருவதில்லை என்றும், அவர் டயலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வதால், வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் என்றும் தகவல்களைத் தெரிவித்தது. மேலும், அவர் தான் தாக்குதல் தொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா அளித்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அது கூறியது.இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார் நேற்று (மார்ச்-2) மரணமடைந்து விட்டதாக உளவுத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆயினும் இந்தத் தகவலை பாகிஸ்தான் தரப்பில் எவரும் உறுதி செய்யவில்லை!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பகல்பூரில் பிறந்தவன் மௌலானா மசூத் அசார். இவன் பின்னாளில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஆனான். இந்தியா மீது பல்வேறு மறைமுக தாக்குதல்களை நடத்தினான். பல்வேறு தாக்குதல்களிலும் மசூத் அசாரின் பின்னணி இருந்த நிலையில், இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெகுகாலமாக இந்தியா வற்புறுத்தி வருகிறது. ஆனால், இப்படி ஒரு நபர் தன் நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது.

நாடாளுமன்றத்தின் மீதான தாக்குடல், மும்பை தாக்குதல், பதான்கோட், புல்வாமா என பல்வேறு தாக்குதல்களிலும் மூளையாக இருந்து செயல்பட்டவன். நூற்றுக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் குடித்தவன். ஆனால், இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மற்ற நாடுகள் ஐ.நா.வில் முயன்ற போதும், சீனா மட்டும் தனது வீட்டோ பவரை வைத்து அவ்வாறு அறிவிக்கப்படாமல் தவிர்த்து வந்தது.

ஆனால், அண்மைய புல்வாமா தாக்குதலை அடுத்து சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து பாகிஸ்தானை கண்டிக்க, வேறு வழியின்றி பாகிஸ்தான் தத்தளிக்கும் நிலைக்குப் போனது. அது நாள் வரை மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என்று மறுத்து வந்த பாகிஸ்தான், இந்தியா மேற்கொண்ட துல்லியத் தாக்குதலில், ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத பயிற்சி முகாம் பெரும் சேதமடைந்த நிலையில், பலர் கொல்லப் பட்ட நிலையில், மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியது. இந்நிலையில், அவன் உயிரிழந்திருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பொய் சொல்லி வருவதாகவும், பாலாகோட் தாக்குதலின் போதே மசூத் அசார் கொல்லப் பட்டுவிட்டதாகவும், ஆனால் அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ கண்காணிப்பில் இருந்து உயிரிழந்துவிட்டார் என்று உலகுக்குத் தெரிவிக்க அவ்வாறு பாகிஸ்தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தியாவையும் உலகையும் திசை திருப்ப மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவலை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ., பரப்பலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அடுத்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் மசூத் அசாரை நிறுத்தி, அவனைத் தங்கள் நாட்டுக்கு விசாரணைக்கு அனுப்புமாறு கோரக் கூடும் என்றும், இந்தியாவின் அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் இவ்வாறு பொய் கூறக் கூடும் என்றும், மசூத் அசாரை தங்கள் பாதுகாப்பிலேயே வைத்திருக்க ஐஎஸ்ஐ மேற்கொள்ளும் நடவடிக்கையாக இது இருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், இரு வருடங்களுக்கு முன்னர் இதே போல் காட்டுத் தீயில் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக ஒரு தகவலை ஐஎஸ்ஐ பரப்பி விட்டது நினைவு கூரத் தக்கது.

எனினும் பாகிஸ்தான் உறுதிப் படுத்தினால் மட்டுமே மசூத் அசார் மரணம் குறித்த முடிவான விவரங்கள் தெரியவரும்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...