பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற நாகராஜ், அதிமுக.,வில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார்.

அவர் அழைத்தபடி மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். அந்தப் படத்தை காண்பித்து மாணவியிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்றதும் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர். பின்னர் மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர்.

இதனிடையே மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் நாகராஜ் என்பவர் அதிமுக., பொறுப்பில் இருந்தவர். இவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக, உடனே ஜாமீனில் அவர் விடுதலை செய்யப் பட்டார்.

இந்த வழக்கில் மணிவண்ணன், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு ஆகியோரை கடந்த வாரம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி பின்னர் கைது செய்தனர்.

முன்னதாக, பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, பெண்ணினம் கசக்கப் படுவதையும். நசுக்கப் படுவதையும்..  துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும, சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அரசு மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பார் நாகராஜ் அதிமுக.,வில் இருந்து நீக்கப் பட்டிருப்பதாகவும், அவருடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அதிமுக .,தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...