அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
யார் எந்த தடையினை ஏற்படுத்தினாலும் அ.ம.மு.க. தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் ஆகியவற்றினை மீறி தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றோம். அ.ம.மு.க. மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வரும் 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 27-ந்தேதி முதல் 20 நாட்கள் தொடர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகின்ற 25-ந்தேதி அ.ம.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கும் விஷயத்தில் நீதிமன்றமும் நல்ல முடிவை தராவிட்டால் மக்கள் மன்றத்தை சந்திக்க உள்ளோம்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தனித்தனி சின்னத்தில் நின்றாலும், மக்கள் அ.ம.மு.க. வேட்பாளர்களின் சின்னத்தினை தேடிப்பிடித்து வாக்களித்து வெற்றியைத் தருவார்கள் என்றார்.