புதுடெல்லியில் இன்று நடைபெறும் 12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தைப் போல், மோசமான ஆடுகளம், சொத்த பிட்ச் அல்ல. பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும்.
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் முற்றிலும் இளமையும், துடிப்பும் கொண்ட வீரர்களைக் கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்தமண்ணில் புரட்டி எடுத்து முதல் வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ரிஷப்பந்த் ‘பவர் ஹிட்டிங் ஷாட்கள்’ மும்பை வீரர்களை அதிர்ச்சி அடையவைத்தது. 27 பந்துகளில் 78 ரன்களை குவித்து ரிஷப்பந்த் அசத்தினார். தொடக்க வீரர்களாக களமிறங்கும் ஷிகர் தவண், பிரித்வி ஷா அருமையாக தொடக்கத்தை அளிக்கக்கூடியவர்கள். அடுத்து களமிறங்கும் ஸ்ரேயாஸ் அய்யர், கோலின் இன்ங்க்ராம், கீமோ பால், ஹனுமா விஹாரி ஆகியோரின் அதிரடியும் காத்திருக்கிறது. ஆகவே பேட்டிங்கில் சிஎஸ்கே அணிக்கு எந்தவிதத்திலும் குறையாத அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிறது.
இவை அனைத்தையும்விட டெல்லி கேபிடல் அணிக்கு தங்களின் சொந்த மண்ணில் போட்டி நடப்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இருப்பதும் மிகப்பெரிய பலமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ராயுடு, வாட்ஸன், ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி, ரவிந்திர ஜடேஜா, பிராவோ என அச்சுறுத்தும் பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகப்பெரிய பலம்.