மின்விசிறி கப்பில் மறைத்துவைத்த நகைகளையும் லவட்டிக் கொண்டுபோன திருடர்கள்

புதுச்சேரி: திருட்டு பயம் அதிகம் என்பதால், வீட்டின் பீரோ உள்ளிட்ட இடங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணி, யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மின் விசிறியின் கப்பைக் கழற்றி அதனுள் நகைகளை வைத்துவிட்டுப் போயும், அதையும் திருடர்கள் கண்டறிந்து சுமார் 85 பவுன்நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டனர். புதுச்சேரி சண்முகாபுரம், அண்ணாவீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர் காரைக்காலில் புதுவை அரசின் கால்நடைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி வேல்முருகன் குடும்பத்துடன் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, மின்விசிறிகளில் உள்ள கப்புகளைத் திறந்து அதனுள் போட்டு, டேப் சுற்றி ஒளித்து வைத்துள்ளார். நகைகள் அதில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க டேப் போட்டு ஒட்டினாராம். இந்நிலையில், திருப்பதியில் இருந்து நேற்று காலை வீடு திரும்பிய வேல்முருகன், தன் வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போயுள்ளார். பின்னர் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும், நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்தபோது, அவற்றின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்ததைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீடு முழுவதும் நகைகளைத் தேடிய திருடர்கள், அனைத்து மின்விசிறியிலும் டேப்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகப்பட்டு அவற்றைப் பிரித்து பார்த்து நகைகளைத் திருடியிருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு 85 பவுன் நகைகள் திருடப் பட்டிருப்பதாக வேல்முருகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்களும் போலீஸார்ம், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். என்னதான் பாதுகாப்பு என்ற பெயரில் நகைகளை பத்திரப்படுத்தி வைத்தாலும் அதையும் மோப்பம் பிடித்து திருடிச் சென்ற திருடர்களைக் குறித்தும் இந்தத் திருட்டு குறித்தும் புதுச்சேரியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.