இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்

teacher-student திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம் இதேபோல் நடந்துள்ளதால் இது திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது டீச்சர்கள் ஓடிப் போகும் சீஸனோ என்று மலைக்க வைக்கும் வகையில் இருப்பதால், இதே போன்ற கதை அம்சங்களுடன் சினிமாக்களோ, சீரியல்களோ இனி வரலாம் என்ற அளவுக்கு இந்தச் சம்பவங்கள் இப்போது பேசப் படுகின்றன. நெல்லை மாவட்ட சம்பவத்தில் பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவனுடன் இள வயது ஆசிரியை கைகோத்துக் காணாமல் போனார். திண்டுக்கல் சம்பவத்தில், டுட்டோரியல் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் ஆசிரியையுடன் மாயமாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல், முத்தழகுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதாகும் இளம் பெண் செபஸ்டின் சாரதி. இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுடோரியல் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தார். அதே டுடோரியல் பள்ளியில் 18 வயதாகும் சதீஷ் குமார் என்ற மாணவர் படித்து வந்தார். சதீஷ் குமார் கடந்த வருடம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தாராம். இதனால் எப்படியாவது பாஸ் ஆகி விட வேண்டும் என்ற உந்துதலில், டுடோரியல் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். அந்த வகுப்பில் ஆசிரியை செபஸ்டின் சாரதி பாடம் நடத்தும்போது சதீஷ் குமாருக்கு அடிக்கடி பாடத்தில் சந்தேகம் வருமாம். அதனால் அவ்வப்போது எழுந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். இருவருக்கும் இடையே இதனால் தனிப்பட்ட வகையில் பேச்சு வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில், கேள்வி கேட்கும் சதீஷ் குமாரை ஆசிரியைக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. வகுப்பில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கேள்வி பதில் விளையாட்டைத் தொடர, நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இதை அடுத்து, ஆசிரியை மாணவராக இருக்கும் இருவரும், வகுப்பு முடிந்ததும் காதலர்களாக உரு மாறி பல்வேறு இடங்களுக்கும் சுற்றியுள்ளனர். விடுமுறை நாட்களிலும் கூட விடாமல் வெளியே சென்று வரவே இருவரது வீட்டினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இருவரின் நடவடிக்கைகளையும் உளவு பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் காதலிப்பது தெரியவந்துள்ளது. எனவே இரு வீட்டாரும் இருவரையும் தனியே அழைத்து, இது தவறு, இவ்வாறு பழகுவதை நிறுத்திக் கொண்டு, ஒருவரை ஒருவர் மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் பெற்றோர், வீட்டாரின் கண்டிப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, செபஸ்டின் சாரதியும், சதீஷ் குமாரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், செபஸ்டின் சாரதியும் சதீஷ் குமாரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இருவரைக் குறித்தும் ஏற்கெனவே தெரியும் என்பதால், இருவரும் சேர்ந்தே மாயமாகிவிட்டதாகத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரின் பெற்றோரும் இவர்களைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கோதையும், மாணவன் சிவாவும் காணாமல் போய் பீதியைக் கிளப்பிய சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.