தமிழர்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஆந்திர காவல் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். . காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்கிறது. இதே போல் தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். – என்றார்.