மயிலாப்பூரில் வயதான குருக்களின் பூணூலை அறுத்த 6 ‘காட்டுமிராண்டிகள்’ கைது

viswanatha-gurukkal-complaint-policeசென்னை: சென்னையில், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் வயதான குருக்களிடமும் பெரியவரிடமும் வீரம் காட்டி பூணூலை அறுத்துச் சென்ற காட்டுமிராண்டிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாத குருக்கள் (76) தனது மகன் சண்முக குருக்கள் பூஜை செய்யும் மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவிலை நோக்கிச் சென்றார். நேற்று இரவு 7.30 மணி அளவில் மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 மோட்டார் பைக்குகளில் வந்த காட்டுமிராண்டிகள் 6 பேர் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை திடீரெனத் தாக்கியுள்ளனர். காட்டுமிராண்டிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து தடுமாறிய விஸ்வநாத குருக்களின் தோளில் கிடந்த பூணூலையும் அறுத்து எறிந்து, தந்தை பெரியார் வாழ்க என கோஷமிட்ட படி அந்தக் காட்டுமிராண்டிகள் வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து, விஸ்வநாத குருக்கள் மயிலாப்பூர் போலீஸில் தனது மகன் மங்களம் குருக்களுடன் சென்று புகார் அளித்தார். இதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுபோல், சென்னை மேற்கு மாம்பலத்தில் சந்தானகோபால் (69) என்ற வயதான பெரியவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் பூணூலையும் காட்டுமிராண்டிகள் சிலர் அறுத்துள்ளனர். இவர் அங்குள்ள பெருமாள் கோவிலில் பஜனை பாடுபவர். இவர் நேற்று இரவு 8.40 மணியளவில் அந்தச் சாலையில் நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு காட்டுமிராண்டி கும்பல் அவரது பூணூலை அறுத்து தப்பியது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் விஸ்வநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன் உள்ளிட்ட 6 காட்டுமிராண்டிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாகப் பேசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலியறுக்கும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பிலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திராவிடர் கழகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார். இது குறித்து கருத்துக் கூறிய தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா, இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக, பூணூல் அறுப்பு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடந்த இந்த பூணூல் அறுப்பு விவகாரம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.