அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் மே.2ல் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு: ஈ.வி.கே.எஸ்.,

நாகர்கோவில்: சென்னையில் வரும் மே மாதம் 2 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று ஆளுனரை சந்தித்து தமிழகத்தில் உள்ள முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புகார் மனுவாக அளிக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்கா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் மீது ஊழல் புகார்கள் அதிக அளவில் உள்ளன. இவர்கள் மீதான ஊழல் புகார் அடங்கிய பட்டியலை வரும் மே மாதம் 2 ம் தேதி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகச் சென்று தமிழக ஆளுனரை சந்தித்து கொடுக்க உள்ளோம். கொக்கோ கோலாவிற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அனுமதி கொடுத்திருந்தால்தான் அதனை ரத்து செய்ய முடியும். ஆனால் தொழிற் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சட்டசபையில் அனுமதியே கொடுக்கவில்லை என்று அறிவித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரை செய்தியாளர்கள் சொன்ன உடன்தான் அப்படி ஓன்று இருக்கிறதா என்று ஞாபகம் வருகிறது. அந்தக் கட்சியை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.அரசு ஒரு கோமாளி அரசாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடித்தால் அவர்களது படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க காங்கிரஸ் அரசு நடவவடிக்கை எடுத்தது, ஆனால் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க முடியவில்லை. தமிழக அமைச்சர்கள் தினமும் கோவில்களில் உருண்டு புரண்டு, பால்குடம் ஏந்தி ஜெயலலிதா முதல்வர் ஆகவேண்டும் என்று வெளிப்படையாக வழிபாடுகள் செய்வதாக கூறினாலும் அதிமுக வினரை அழைத்துக் கேட்டால் ஜெயலலிதா வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காகதான் இவற்றை எல்லாம் செய்வதாக கூறுகின்றனர். ஆகா ஊழலில் கிடைத்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள்… என்று கூறினார். மேலும் ,மீன்பிடி தடைக் காலத்தில் பாண்டிச்சேரி அரசு 5 ஆயிரம் ரூபாய் மீனவர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசும் 5 ஆயிரம் ரூ வழங்க வேண்டும் என்று கூறினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,