தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: இடம் தேர்வு செய்ய மத்தியக் குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய, மத்திய அரசின் 5 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்தனர். தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ் – AIMS) அமைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அனுப்பும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிபட்டி, ஈரோடு – பெருந்துறை மற்றும் மதுரையை அடுத்த தோப்பூர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. இந்நிலையில் இடத்தைத் தேர்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலர் தாய்த்ரி பாண்டா தலைமையில், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் ஜெ. பாலசந்தர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டிடக் கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்புச் செயலாளர் எல். சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழு நேற்று கோவை வந்தது. இந்தக் குழு முதலில் ஈரோடு- பெருந்துறையில் ஆய்வு செய்தது. பின்னர் தோப்பூர், புதுக்கோட்டை, செங்கிப்பட்டி ஆகிய இடங்களிலும் பார்வையிடுகிறது. மதுரை தோப்பூரில் இன்று ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு, வரும் 25-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இடத்தைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறது.