4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருந்தது.
இதற்கிடையே சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானர். இந்த நிலையில் 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 29 ஆம் தேதியாகும். 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2 ஆம் தேதி இறுதி நாளாகும். மே 19 ஆம் வாக்குப்பதிவும், 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.