மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் வழக்கறிஞர் இல்லாமல் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.
இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.