October 16, 2021, 2:40 pm
More

  ARTICLE - SECTIONS

  2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும்? – 5

  5

  images 1 - 1

  வாக்காளர்கள் என்று சொல்லும்போது திமுக விசுவாசிகள் 25%, அதிமுக விசுவாசிகள் 30 சதவிகிதம்பேர் என்ற இந்த கணிசமான மக்கள் அல்லாத பிறரையே குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்னும் சரியாகச் சொல்வதானால் அந்த சுமார் 45 சதவிகிதத்தினரிலும் பாமக, விசிக, பாஜக, புதிய தமிழகம், நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமிய கட்சிகள் போன்றவற்றுக்கான விசுவாசிகள் நீங்கலான மக்களைத்தான் வாக்காளர்கள் என்று சொல்லவேண்டும்.

  சுமார் 10-15 சதவிகிதம் இருக்கும் இவர்கள் எந்தப்பக்கம் ஒரேயடியாகச் சாய்வார்களோ அந்தக் கூட்டணியே வெற்றிபெறும். கூட்டணிகள், தேர்தல் கால ஸ்டண்ட்கள், தேர்தல் அறிக்கைகள், பிரசாரப் போர்கள், வியூகங்கள் எல்லாமே இந்த 10-15 சதவிகிதத்தினரின் மனதை வெல்வதை நோக்கியே முன்னெடுக்கப்படுகின்றன.

  காங்கிரஸும் திமுகவும் ஊடகங்களைக் கையில் வைத்திருப்பதால் எந்தத் தேர்தல் நடந்தாலும் அதில் அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற மாயையை அழுத்தமாக உருவாக்கிவிடுவார்கள். பலமுறை இந்த மாயையானது மக்களால் உடைத்தெறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நரேந்திரமோதி மீதான வெறுப்புப் பிரசாரங்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பட்டியல் இன மக்களிடையே அவர் மீது ஒரு நல்லெண்ணத்தையே உருவாக்கிவந்திருக்கின்றன.

  பாஜகவின் இதுவரையிலான அரசியல் பயணத்தில் நாட்டில் மிக அதிக மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருப்பது நரேந்திர மோதியின் காலத்தில்தான். அவர் மீதான எதிர்மறைப் பிரசாரம் அவருக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுக்கு நிச்சயம் கணிசமான பங்கை ஆற்றியிருக்கிறது. அதோடு பத்தாண்டுகாலமன்மோகன் சிங் ஆட்சி மீதான அதிருப்தியும் சென்ற முறை நரேந்திர மோதிக்கு சாதகமாக அமைந்தது.

  இப்போது அவர் ஐந்தாண்டுகள் அவர் ஆட்சி செய்து முடித்திருக்கிறார். எனவே இந்தத் தேர்தலில் இந்து சக்திகளுக்குக் கிடைக்கும் வெற்றியானது, எதிர்மறைப் பிரசாரப் பலனாலும் அதிருப்தியினாலும் மட்டுமே கிடைப்பதில்லை; அவர்களின் நற்செயல்களின் பலனாகவும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக அமையும்.

  நரேந்திர மோதியைப் பொறுத்தவரை அனைவரையும் அரவணைத்து… அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்குடன் செயல்படும் நேர்மையான, கறாரான தலைவராகவே செயல்பட்டிருக்கிறார். அந்தவகையில் இந்த தேசத்தை ஆள முழு தகுதி உடையவராக அவர் இருக்கிறார். அவரைப் போன்ற தலைவரை தக்கவைத்துக்கொள்ளும் தகுதி மக்களுக்கு இருக்கிறதா..? தேர்தல் ஆலோசகர்களில்  யாருடைய வியூகம் வெல்லப்போகிறது? தற்காப்பு ஆட்டமா… தாறுமாறான ஆட்டமா எது வெல்லப்போகிறது?

  *

  வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதும் பாஜகவுக்கு நல்ல பெயரே இருந்தது. ஆனால், அவரால் அடுத்தமுறை வெல்ல முடிந்திருக்கவில்லை. நரேந்திர மோதிக்கும் இப்போது நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், அவர் ’சரித்திரம்’ இவ்வளவு சீக்கிரம் திரும்பாது என்பதை நிரூபிக்க முடிந்தவர்.

  ராமஜென்ம பூமி விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்துக் கொஞ்சம் அதிகமாகவே காத்துக்கொண்டுவருகிறோம். தீர்ப்பு கிடைத்தால் அடுத்த ஒரு வாரத்துக்குள் கோவிலைக் கட்டி முடித்துவிட முடியும் என்று சொல்லப்படுகிறது (அது சாத்தியமா என்பதைக் கொஞ்சம் பரீட்சித்துக்கூடப் பார்க்கலாமே என்று தோன்றுகிறது).

  காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் பாபர் பெயரிலான கட்டடம் இடிக்கப்பட்டது. அதே காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போதே ராமர் கோவிலும் கட்டப்படும் என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது. போதாத குறையாக காங்கிரஸ்காரர்களும் நாங்கள் கோவில் கட்டித் தருவோம் என்று சொல்லிவருகிறார்கள். எதிர்த்துக் குரல் எழுப்பக்கூடிய சொற்ப இஸ்லாமியர்களை சமாதானப்படுத்த அவர்களால் நிச்சயம் முடியும். அதோடு பாஜக பொதுவாக எதிர் கட்சியாக இருக்கும்போதுதான் இந்துத்துவ விஷயங்களில் கூடுதல் அக்கறையும் காட்டும். இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வாய்ப்பு உண்டு என்று உள் மனதுசொல்கிறது. ஆனால், மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் பாஜகவின் ஆட்சி இருக்கும்போதே அது நடக்கவேண்டும் என்றே  மனம் விரும்புகிறது.

  இப்போது நமக்கு ராமர் கோவிலா தேவை என்று அசட்டு அரசியல் பேசவேண்டாம். கல்விச்சாலைகளும் மருத்துவமனைகளும் தொழிற்சாலைகளும் அல்லவா தேவைஎன்று நவீன ஞானிபோல் பேசவேண்டாம். ஏனென்றால் கோவில் வேண்டும் என்று சொல்லும் இயக்கத்தினர்தான் நம் நாட்டில் மிக அதிக கல்விச்சாலைகளை, மருத்துவமனைகளை சேவை மனப்பான்மையோடு செய்துவருகிறார்கள். உண்மையில் அவர்களுடைய அந்த சமூக சேவைக்கு சமூகம் தரும் மரியாதையாக அங்கீகாரமாக கோவில் கட்டும் பணிகளுக்கு ஆதரவு தருவதே சமூக மனசாட்சியின் முதல் செயலாக இருக்கவேண்டும்.

  இதில் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சல்லிக்கட்டுப் போராட்டம் போல் ராமர் கோவில் இயக்கம் ஃபாசிஸ இயக்கமாக முன்னெடுக்கப்படவில்லை. தமிழகத்தில் சல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது அதை அதுவரை எதிர்த்து வந்த சக்திகள் அனைத்துமே தமது குரலை மவுனித்துக்கொண்டன. அல்லது மாற்றிக்கொண்டன. மக்கள் அதிகாரம் போன்ற இடதுசாரி அமைப்புகள் அதற்கு முன்புவரை சல்லிக்கட்டுப் போராட்டத்தை தேவர் ஜாதி ஆதிக்க விளையாட்டாகவே சொல்லி எதிர்த்துவந்தன. பட்டியல் சாதித் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அதை எதிர்த்து வந்திருந்தனர். நவீனப் பார்வை கொண்ட பலரும் அந்த விளையாட்டில் உயிரிழக்கும் மனிதர்கள் மீதான அக்கறையினால் பல திருத்தங்களைச் சொல்லிவந்தனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் சல்லிக்கட்டை விளையாடியதுமில்லை. ஆதரித்ததுமில்லை. அது இந்துக் கோவில் விழாவாகக் கருதி விலகியே இருந்தனர்.

  ஆனால், சல்லிக்கட்டுப் போராட்டம் அலங்காநல்லூரிலும் மெரினாவிலும் பீடா எதிர்ப்பாகத் தொடங்கி நரேந்திர மோதி எதிர்ப்பாக மாறி இந்திய எதிர்ப்பாக திசைதிருப்பபட்டபோது சல்லிகட்டு மீது விமர்சனங்கள் கொண்டிருந்த தமிழகத்தின் அனைத்து குரல்களும் அடக்கப்பட்டன. இதுவே அப்பட்டமான ஃபாசிஸம். ராமர் கோவில் விஷயத்தில் இந்து ஒற்றுமை என்பது அப்படியான சர்வாதிகாரக் குரலாக ஒருபோதும் ஒலித்ததில்லை.

  ராமர் கோவில் கட்டப்படுவதென்பது ராமர் கோவிலோடு நிற்கவேண்டிய ஒரு விஷயம் அல்ல. அது இந்தியர்கள் தமது கடந்த கால இந்துப் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்ந்து நாளைய இந்தியாவை அதன் ஒளியில் வடிவமைத்துக்கொள்வதற்கான உந்துதலாக அமையவேண்டிய விஷயம். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் அந்த ராமர் கோவிலின் முதல் கல்லை எடுத்துவைத்து பூஜை செய்து தொடங்கியவர் என்பது இந்து சமூகத்தின் ஜாதி நல்லிணக்க மண்டபத்தின் அஸ்திவாரத்தை இடுவதாக அமையவேண்டும். ஷியா பிரிவினர் அந்த இடத்தை ராமர் கோவிலுக்கு வழங்குவதென்பது மத நல்லிணக்கத்தின் நவீன காலத் தொடக்கப் புள்ளியாக அமையவேண்டும்.

  தமிழகத்தில் சல்லிக் கட்டு எழுச்சி என்பது தமிழ் உணர்வின் மறுமலர்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழ்ப் பொன்னுலகம் என்ற அபாய அரசியல் அதன் பின்னால் இருக்கிறது. அது களையப்பட்டு உண்மையான இந்து தமிழ் பாரம்பரியமாக அது மீட்டெடுக்கப்படவேண்டும். இந்திய தேசியத்துடன் இணைந்த தமிழ் தேசியமாக அது வலுப்பெற வேண்டும்.

  தமிழர்களுக்குத் தனி அடையாளம் உண்டு… அது இந்து அடையாளம் அல்ல; தமிழர்களுக்குத்தனி தேசியம் உண்டு; அது பாரத தேசியம் அல்ல என்ற வாதங்களில் ஒரு எல்லைவரையில் மட்டுமே உண்மை உண்டு. சரியாகச் சொல்வதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து பிராந்திய தேசியங்களுமே தமக்கென தனி அடையாளத்தைக் கொண்டவையே.

  பாரதம் – இந்தியா என்ற தேசத்தின் அடிப்படையே பல்வேறு தேசியங்கள் ஒன்று கூடி ஒரே குடையின் கீழ் வாழ்வதுதான். அந்த விஷயமானது இந்து தேசியத்தின் ஆதாரமான இந்து தரிசனத்தில் தன் வேர்களைக் கொண்டிருக்கிறது. அந்த இந்து தரிசனம் என்பது பல்வேறு வாழ்க்கைப் பார்வைகள், பல்வேறு சடங்குகள், பல்வேறு குலங்கள் இவற்றைத் தன்னுள் கொண்டது.

  எனவே  தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமே தனியானவர்கள் என்று சொல்வது வேடிக்கையானது. இந்தியாவில் இந்து மதத்தில் அனைவருமே தனித்தன்மை கொண்டவர்களே. அந்தத் தனித்தன்மையைத் தாண்டிய பொதுத்தன்மை ஒன்று அதே ஆதி காலத்தில் இருந்தே இருந்துவந்திருக்கிறது. அதுவே நம் கலாசாரம்.

  ராமரையும் விநாயகரையும் சிவனையும் அந்த இணைப்புச் சரடாக முன்வைப்பதென்பது தனித்தன்மையை அங்கீகரிக்கும் பொதுத்தன்மையை வலுப்படுத்தும் செயல்பாடே. ஏனென்றால் இதற்கு மாற்றாக இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ பொதுத்தன்மை என்பது தனித்தன்மைகளை அழித்தொழிக்கும் ஒற்றை அதிகாரமையமே.

  ராமர் கோவில் என்பது அந்த ஒற்றைப்படைக்கு எதிரான செயல்பாடு. ராமர்கோவிலுக்கு பழனி முருகன் கோவிலில் பூசை செய்து அனுப்பப்படும் செங்கல் என்பது பிராந்தியத் தனித்தன்மையை அரவணைக்கும் பொதுத்தன்மையின் அடையாளம். சொற்ப அடிப்படைவாதிகளின் அராஜகத்துக்காக பெரும்பான்மையின்நியாயம் விட்டுக்கொடுக்கப்படாது என்பதை உணர்த்தும் எளிய செயல். எனவே பொருளாதார வளர்ச்சியின் பாதையில் நாம் வெற்றி நடைபோடும் அதே நேரம் கலாசார மறுமலர்ச்சியையும் நாம் அடையவேண்டும்.

  நமது அடையாளமே நாம்.

  நமது வெற்றி என்பது நமது வேர்களில் இருந்து கிளைத்தெழுந்த தண்டில் இருந்து கிளைத்துப் பிரியும் கிளையில் பூவாகிப் பிஞ்சாகிக் காய்க்கும் கனியாக இருக்கவேண்டும்.

  இந்தத் தேர்தலில் ஒருவர் அளிக்கும் வாக்கானது இதைத் சாதித்துத் தரமுடிந்த கட்சிக்கு வலுச் சேர்ப்பதாக இருக்கவேண்டும்.

  *

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,141FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,559FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-