தமிழகம் உட்பட 97 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது! இதை அடுத்து, தமிழக தேர்தல் குறித்து பிரசாரம் எதுவும் நேரிலோ, தனிப்பட்ட வகையிலோ, சமூகத் தளங்கள் வாயிலாகவோ, தொலைபேசி, கைபேசி வாயிலாகவோ பிரசாரம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப் பட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள், ஏப்.18 அன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களின் சூறாவளி தேர்தல் பயணங்கள் முடிவு பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் துவக்கத்தில் இருந்தே கிறிஸ்துவ அமைப்புகள், சர்ச்சுகள், பாதிரியார்கள் பலரும் மத ரீதியான ஆதரவினை திமுக., கூட்டணிக்குக் கொடுப்பதாகவும், மோடி எதிர்ப்பு என்ற வகையிலும் கருத்துகளை வெளிப்படுத்தியதால், இந்து இயக்கங்களும் கோபத்துடன் களத்தில் இறங்கின. அதேபோல், இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளின் ஆதாவை திமுக., பெற்றதும், தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட பிரசாரங்களில் திமுக.,வின் இந்து விரோதப்போக்கும் இந்து இயக்கங்களிடையே தங்களுக்கான வாக்கு வங்கி குறித்து பிரசாரம் செய்ய உந்துதலாக இருந்தது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, சில இடங்களில் மத ரீதியாக ஒருங்கிணைந்து, பிரசாரம் செய்ய வரவேண்டாம் என பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22ஆம் தேதி சேலத்தில் இருந்து தொடங்கினார். ஊர்கள் தோறும் வேனில் சென்று மக்களை சந்தித்தார்.

திறந்த வேன், காதில் மாட்டிக் கொள்ளும் மைக் என ஹைடெக் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி, அதிக தொலைவு வேனில் சென்று பிரசாரம் செய்த சாதனையைப் படைத்தார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அவர், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார்.

பிரசாரத்தின் இறுதி நாளான இன்று அவர் சேலத்தில் தெருத் தெருவாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தொடங்கி, சேலத்திலேயே பிரசார பயணத்தை நிறைவு செய்தார் எடப்பாடியார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 20ஆம் தேதி தமது தந்தையின் சொந்த ஊரான திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தொகுதிகள் தோறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு கோரினார்.

பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். முதல்வர் எடப்பாடியைப் போல், திருவாரூரில் தொடங்கி திருவாரூரிலேயே பிரசாரத்தை நிறைவு செய்தார்.

இந்தத் தேர்தலில் எடப்பாடியாரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதல்களை அதிகம் மேற்கொண்டனர்.

இவர்களைப் போல், தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று தூத்துக்குடி தொகுதியில் உள்ள கோவில்பட்டியில் தமது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் தொடங்கி, அதிலேயே பிரசாரத்தை நிறைவு செய்தார்.


பாமக., நிறுவனர் ராமதாஸ், விழுப்புரத்தில் பிரசாரத்தை தொடங்கி தமது மகன் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

இன்னும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோரும் இன்று தங்களது சூறாவளிப் பிரசாரங்களை நிறைவு செய்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...