ருஷி வாக்கியம் (7) – பக்தி, ஞானம் இரண்டும் வேறுவேறல்ல!

மகரிஷிகள் நாம் உய்வடைவதற்காக கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று மூன்று வழி முறைகளை அளித்துள்ளார்கள். இம்மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுவேறல்ல.

மனிதன் சாஸ்திரம் விதித்த கடமைகளைச் செய்யும் போது அதனை இறைவனுக்கு உகந்ததாகச் செய்கையில் அது கர்ம யோகம் எனப்படுகிறது. இறைவனை வழிபட்டு சரணாகதியைப் பிரார்த்திக்கையில் அது பக்தி யோகம். இறைவனின் உண்மைத் தத்துவத்தை அறியும் வழி ஞான யோகம். இம்மூன்றும் வெவ்வேறல்ல. மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

சாதாரணமாக பக்தி மார்க்கமும் ஞான மார்க்கமும் வேறு வேறு என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு பக்தி, ஞானம் இரண்டைப் பற்றியும் சரியான புரிதல் இல்லை என்று பொருளாகிறது. இது குறித்து பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் சிவ புராணத்தில் பரமசிவனும் கூட விளக்கிக் கூறியுள்ளார்கள்.

சாட்சாத் சிவபிரான் பார்வதி தேவியிடம் கூறும்போது, “பக்திக்கும் ஞானத்திற்கும் வேறுபாடு இல்லை. அவ்விரண்டில் எதனைப் பின்பற்றினாலும் அது சுகத்தையளிக்கும். பக்தியைப் பிடிக்காதவனுக்கு விஞ்ஞானம் கிடைக்காது” என்கிறார். இது ருத்ர சம்ஹிதையில் வருகிறது. இங்கு விஞ்ஞானம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். விஞ்ஞானம் என்றால் பரமாத்மாவின் தத்துவத்தை அனுபவத்தில் உணர்வது. பரமாத்மாவின் தத்துவத்தை படித்தறிந்து கொள்வது ஞானம். அறிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அனுபவிக்கும் நிலைக்கு உயர்வது விஞ்ஞானம்.
ஞானம் என்றால் என்ன? பரமாத்மாவை விட வேறானது எதுவுமில்லை என்ற அறிவு ஞானம் எனப்படுகிறது. பக்தி என்றால் என்ன? பரமாத்மாவைத் தவிர வேறெதுவும் இல்லை என்று அன்போடு வழிபடுவது பக்தி.

இவ்விரண்டிலும் பொதுவாக உள்ள அம்சம் ஒன்றே. பரமாத்மாவைத் தவிர வேறெதுவும் இல்லை என்ற உணர்வு. பக்தன் உலகை ஒதுக்கி விட்டு இறைவனையே தியானம் செய்கிறான். ஞானி கூட ஜகத்தினை ‘மித்யை’ என்று பாவனை செய்து பிரம்மமே ‘சத்தியம்’ என்றுணர்ந்து எப்போதும் விசாரணை செய்கிறான். இருவரும் செய்யும் வேலை ஒன்றுதான்.

மனித உள்ளத்திற்கு எப்போதும் இரண்டு வித வேலைகள் இருக்கும். ஒன்று ஆலோசனை செய்யும் சக்தி. இன்னொன்று அன்பு செலுத்தும் சக்தி. அன்பு செலுத்தும் சக்தியால் பிரம்மத்தை வழிபடும் போது அது பக்தி எனப்படுகிறது. ஆலோசனை செய்யும் சக்தியால் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை என்றறியும் போது அது ஞானம் எனப்படுகிறது. அதனால் இரண்டும் உண்மையில் ஒன்றே. ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் பிரம்மத்தையே இலக்காகக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஞான மார்க்கதிலிருக்கும் சிலர் பக்தி என்று எதனை நினைக்கிறார்கள் என்றால் பூஜை, புனஸ்காரம், நாம ஜபம், பஜனை… போன்றவற்றை. அவர்கள், “இது வெறும் பக்தி. ஞானமல்ல!” என்று ஒதுக்குகிறார்கள். பூஜை, புனஸ்காரம், நாம ஜபம், பஜனை… இவற்றை ‘கௌண பக்தி’ என்பார்கள். அதாவது குணங்களோடு தொடர்புடையது. இது ஆன்மீக சாதனையின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்வது. பக்தியின் ஆரம்ப நிலையில் ஒரு விக்ரகத்தையோ ஒரு பிரதிமையையோ பூஜித்து போற்றி வணங்கி வழிபடுகிறோம். அது உத்தமமான பராபக்திக்கு இட்டுச் செல்கிறது.
பக்தியில் பலவித நிலைகள் உள்ளன. முதலில் “இறைவன் என்றொருவன் உள்ளான். அவன் மூலம் எனக்கு நன்மை நடக்கும். அவனே எனக்கு ஆதாரம்!“ என்னும் ஒரு நம்பிக்கைக்காக இறைவனை வழிபடும் நிலை. இத்தகைய பக்தர்கள் புண்ணியாத்மாக்கள். அதோடு நின்று விடாமல் இன்னும் நிலை உயர்ந்து இறைவனிடமிருந்து எதையும் கோராமல் இறைவனை சரணடைவதே ஆனந்தம், அவனை வணங்குவதே திருப்தி என்ற எண்ணம் ஏற்பட்டால் அது ‘அவ்யாஜ பக்தி’ எனப்படும் அதனை ‘பராபக்தி’ என்பார்கள். இந்த பராபக்தி நிலையில் இறைவன் விஸ்வமெங்கும் நிறைந்துள்ளான் என்ற பாவனை ஏற்பட்டு எப்போதும் அவனைப் பற்றியே ஆலோசித்து உலகியல் சிந்தனைகளை விட்டுவிடுவதால் அனைத்தும் இறைமயமாகக் காட்சியளிக்கும்.

இந்த பாவனையை அன்னமய்யா, “ஹரி நீ மயமே இந்த்தானு… எதுட்டா எவ்வரூ லேரு. அந்த்தா விஸ்வமயமே!” என்கிறார். “நம் கண்ணெதிரில் எத்தனையோ இல்லை! இருப்பதெல்லாம் ஒன்றே!” என்கிறார். மேலும், “கண்ணில்படும் மக்கள் அனைவரும் விஷ்ணுவின் பாத தீர்த்தமே! கிடைக்கும் ஆகாரமெல்லாம் விஷ்ணுப் பிரசாதமே!” என்கிறார்.

அதனால் உலகில் எதை அடைந்தாலும் இறைவனின் நினைவோடு அனுபவிக்கும் குணம் பக்தியில் காணப்படும். உலகில் தென்படுபவை அனைத்தும் இறை சொரூபங்களைத் தவிர வேறெதுவுமில்லை என்ற பாவனை ஞானத்தில் காணப்படும். எனவே பக்தி, ஞானம் இரண்டும் வேறு வேறல்ல என்பதை அறிய வேண்டும்.

மேலும் பக்தியில் இறைவன் மேல் அன்பு இருக்கும். ஞானத்தில் இறைவன் மேல் அன்பைத் தவிர வேறெதுவும் இருக்காது. ஏனென்றால் இருப்பதெல்லாம் இறைவன் ஒருவனே என்று தெரிந்தபின் அந்த அனுபூதியில் நிரந்தரம் ஆனந்தித்தில் ஆழ்ந்திருப்பவனே ஞானி.

ஆதிசங்கரர், “ஸ்வஸ் ஸ்வரூபமான ஆத்மாவை அனுசந்தானம் செய்வதே பக்தி!” என்கிறார். அதாவது நம் சுய சொரூபமான ஆத்மாவோடு ஒருங்கிணைவது. பாகவதர் பகவானாக யாரை ஆராதிக்கிறாரோ, ஆத்ம ஞானி ஆத்மாவாக அவனையே அறிந்து கொள்கிறார். அதனால்தான் கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில்,
“அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசயஸ்தித:I” – “எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆத்மா நானே!” என்கிறான்.
“அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற தத்துவம் மூலம் ஞானி ஆத்மாவை அறிந்து கொள்கிறான்.

இன்னுமொரு அழகான பாவனையில் பார்த்தால், இறைவனை ‘மம’ என்று எண்ணினால் பக்தி. ‘அஹம்’ என்று எண்ணினால் ஞானம். இதைப் புரிந்து கொண்டால் போதும்.

‘மம’ என்றால் “என்னுடைய” என்று பொருள். பகவான் என்னுடையவன் என்று நினைத்து அன்போடு வணங்கினால் அது பக்தி. ‘அஹம்’ என்றால் ‘நான்’ என்று பொருள். நான் என்னும் சைதன்யமே பகவான் என்று அறிந்து கொண்டால் அது ஞானம். அதனால் ‘மம’ என்று நினைக்க வேண்டும். ‘அஹம்’ என்று உணர வேண்டும். ‘அஹம்’ என்பது நினைப்பதற்கல்ல. உணருவதற்கு! முதலில் இறைவன் என்னுடையவன் என்ற நினைப்பு வந்தால்தான் அடுத்து ‘அஹம்’ என்ற புரிதல் வரும்.

அதனால் பக்தியில்லாமல் ஞானம் வராது. ஞானம் கிட்டியபிறகு பக்தி அன்பு வடிவில் ஞானியிடம் மிகுந்திருக்கும். எல்லா இடத்திலும் இறைவனின் இருப்பை உணர்ந்து அனுபவித்தபடி, அவனைத் தவிர வேறில்லை என்ற ஸ்புரணை ஏற்படுவது ஞானத்தில் காணப்படும் குணம்.

ஞானம், பக்தி இரண்டும் வேறுவேறல்ல என்று அறிவதற்கு பாகவதத்தில் பிரகல்லாத சரித்திரம் நமக்கு நேரடியான உதாரணம். பிரகல்லாதன் ஞானபக்தன்.

கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில், “ஆர்தோ ஜிக்ஞாசுரர்த்தார்தீ ஞானீச பரதர்ஷபI” என்று பக்தர்களில் ஞானியைக் குறிப்பிடுகிறான். அதாவது பக்தர்களில் சிறந்த பக்தர் ஞான பக்தர் என்கிறான். அதாவது ஞானி இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு இறைவனைத் தவிர வேறு இல்லை என்று ‘ஈசாவாஸ்யமிதம் சர்வம்’ என்ற பாவனையில் இருப்பாராதலால் அத்தகைய ஞான பக்தி மிகச் சிறந்தது என்று கூறுகிறான்.

இறைவனிடம் பக்தியோடிருப்பவன் பெரிய அறிவாளியாகவோ படித்தவனாகவோ இல்லாவிட்டாலும் கூட இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டால் அவனுக்கு இறைவன் பணிந்து தன்னைத்தானே தந்தருளுவான் என்று பாகவதத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரக கதைகளும் கூறுகின்றன. சிவ புராணத்தில் சிவ லீலைகளும் கூறுகின்றன.

பார்வதி தேவியிடம் சிவபிரான் கூறுகிறார், “பக்தி கொண்டவன் மிகத் தாழ்ந்த குலத்தவனாக இருந்தாலும் அவனே எனக்குப் பிரியமானவன். அவன் வீட்டுக்கு நான் செல்வேன். அவன் கொடுப்பதை ஏற்பேன்” என்று.

எனவே பக்தனுக்கு எப்படிப்பட்ட உடலிருந்தாலும், இறைவனை சர்வாத்மாவாக, எந்தக் காரணமுமின்றி, எந்தக் கோரிக்கையுமில்லாமல் சரணடைந்தால் அது உத்தம பக்தி எனப்படும். கோரிக்கைகளோடு இறைவனை அணுகினால் அது சாதாரண பக்தி எனப்படும்.

உத்தம பக்திக்கும் உத்தம ஞானத்திற்கும் எப்படிபட்ட வேறுபாடும் இல்லை என்ற விஷயத்தை உத்தவ கீதையில் பரமாத்மா தெரிவிக்கிறான். சிவ புராணத்தில் பரமேஸ்வரனும் தெரிவிக்கிறார்.

அப்படிபட்ட ஞான ரூபமான பக்திக்கும், பக்தியோடு கூடிய ஞானத்திற்கும் வந்தனம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...