ராசிபுரம் குழந்தை விற்பனை… நர்ஸ் அமுதா, கணவர் கைது! விசாரணை பயத்தில் மேலும் பலர்!

அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பலருக்கும் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவரிடம் பகல் முழுதும் இன்று போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப் பட்டனர்.

விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, குழந்தை விற்பனை தொடர்பில் பேரம் பேசிய ஆடியோ, இணைய தளங்களில் வைரலானது. இதை அடுத்து அமுதா தம்பதியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாயின.

அமுதாவுடன் ஒரு நபர் பேரம் பேச… அதில், குழந்தை கருப்பா இருந்தா ஒரு விலை, வெள்ளையா இருந்தா ஒரு விலை, குழந்தை ஆரோக்கியமா வேணுமா, நிறமா வேணுமா? குழந்தை கொழுகொழுன்னு வேணுமா அதுக்கு ஒருவிலை, ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய், பெண் குழந்தை என்றால் ரூ. 3 லட்சம், கோர்ட்டுக்கு போனா நடக்காது, வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்தது போல் சர்ட்டிபிகேட் வரும், அல்லது மருத்துவமனைல வெச்சி பிரசவம் பார்த்தது போல் சர்டிபிகேட் கிடைக்கும்… எல்லாத்துக்கும் ஒரு ரேட் இருக்கு… என்று அவா் பேசும் தகவல்களும் த்வனியும் அந்த ஆடியோவைக் கேட்டவர்களின் மனதை பதைபதைக்கச் செய்தது.

மேலும், உங்களுக்கு குழந்தை பிறந்து போலவே சான்றிதழ் எழுதி அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி தருகிறேன்.. அதற்கு தனியாக ரூ.70 ஆயிரம் கொடுத்தா போதும் அரசு அலுவலகத்தில் அந்த குழந்தை உங்களுக்கு பிறந்தது போலவே எல்லா சர்ட்டிபிகேட்டும் வரும்… எல்லாம் ஒரு மாதத்துக்குள்ள நான் வாங்கித் தரேன்… என்றெல்லாம் பேசுகிறார் அமுதா.

இந்த ஆடியோ பதிவு தமிழகத்தையே கலக்கிய நிலையில், இது தொடா்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி. அருளரசு அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டாா். இந்த விசாரணையில் தான் 3 குழந்தைகளை அவ்வாறு விற்பனை செய்ததாக அமுதா ஒப்புக்கொண்டாராம். சேலம் ஓமலூரில் விதிமுறைப்படி ஒரு குழந்தையை தத்துக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், கொல்லிமலையில் 2 பெண் குழந்தைகளை யாரிடம் விற்றனர் என்பது தொடர்பாக அமுதா மற்றும் கணவர் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அடுத்து, அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்தது தொடா்பாகவும், லஞ்சம் கொடுக்கப்பட்ட விதம், நபர்கள் என சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த விசாரணைகளுக்குப் பின் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் இருவரையும் மாவட்ட எஸ்.பி. அருளரசு கைது செய்துள்ளார். இவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணை தொடர்பில், மேலும் பல்வேறு விவரங்களை காவல்துறை வெளியிடும் என்று கூறப் படுகிறது.

அமுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் பரவலாக குழந்தைக் கடத்தலும், குழந்தை விற்பனையும் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பலருக்கும் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...