இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.
ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே ரமலான் நோன்பின் சிறப்பாகும்.
நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன?
நீர்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்: ரமலான் நோன்பு இருப்பவர்கள் தினமும் நோன்பு முடிந்தவுடன் பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த ஜூஸ்-ஐ அருந்த வேண்டும். அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை கலக்காத தயிரை உண்பது நல்லது. அது உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமநிலையாக வைத்துக்கொள்ள உதவும்.
நோன்பு தொடங்குவதற்கு முன் அதிகாலை உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை உட்க்கொள்ள வேண்டும். கோதுமை ரொட்டி, ஓட்ஸ், தானிய வகைகள், கஞ்சி ஆகிவற்றை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் உப்பு இல்லாத சீஸ், முட்டை மற்றும் பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உண்பது நல்லது.
மேலும், பதப்படுத்தப்பட்ட ஜுஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறிகள் நிறைந்த வெஜிடெபிள் சாலட் உண்பது நல்லது.
பேரிச்சை பழம் எனப்படும் சூப்பர் ஃபுட்- ஐ தினமும் மாலை நோன்பு முடிக்கும் போது உட்கொள்வது நல்லது. இந்த சூப்பர்ஃபுட் உங்கள் உடலுக்கு ஃபைபர், சர்க்கரை மற்றும் மெக்னீசியம் ஆகிவற்றை தேவையான அளவு அளிக்கக்கூடியது. அத்துடன் ஆலிவ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்துகொள்வது நல்லது. அவை ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை கடைபிடிக்க உதவும்.