அதிமுக மற்றும் திமுக ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால் அந்த இரு கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :-
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அளவுக்கு அதிகமாக பண வினியோகம் அதிகமாக இருப்பதாகக் கூறி, அத்தொகுதியின் வாக்குப்பதிவு மே 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பண வினியோகம் அதிக அளவில் நடைபெற்றதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை தவிர, இந்த நடவடிக்கையால் வேறு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்படவிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் ரூ.6.75 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதன் தாக்கத்தை தணிக்கும் வகையில் அங்கு ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதால் அரவக்குறிச்சி தொகுதியின் களநிலை எந்த வகையிலும் மாறப்போவதில்லை. மாறாக ஒரு வாரம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் கிடைத்துள்ள கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி அதிமுகவும், திமுகவும் இன்னும் அதிகமாக பணம் வினியோகிக்கும்.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், திமுக வேட்பாளரும் ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் வினியோகித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஒரு குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருந்தால் அந்த குடும்பத்திற்கு ஓர் இரு சக்கர ஊர்தி வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பிலும், திமுக சார்பிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் தருவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(பி) பிரிவின் படியும் ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கத் தக்க குற்றம் ஆகும். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுத்த இரு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்து விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தேர்தலை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். இது தான் எதிர்காலத்தில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்கும். ஆனால், இதை செய்ய ஆணையம் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பார்த்தால், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் தான் ஓட்டுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர், திமுக தலைவர் கலைஞர் போட்டியிடும் திருவாரூர், ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த உண்மை தெரியும். எனவே, தமிழகத்தில் பண வினியோகம் நடைபெற்ற 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்க வேண்டும்.
பண வினியோகம் நடந்த 234 தொகுதிகளிலும் தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் தேர்தல் அதிகாரிகள் வரை ஆளுங்கட்சிக்கும், திமுகவுக்கும் ஆதரவாக செயல்பட்டதால் அவர்களை மாற்றி விட்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அத்துடன், தொகுதி தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை நியமித்து, முழுக்க முழுக்க துணை ராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தி நியாயமான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.