வால்க தமில்! வலர்க தமில்நாடு! அவையைக் கலக்கிய பதவிப் பிரமாண அரசியல் முழக்கங்கள்!

மற்ற முழக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வந்தவர்கள், பெரியார் வாழ்க என்ற முழக்கத்துக்கு ஜெய் ஸ்ரீராம் என்ற பதில் முழக்கம் எழுப்பியது நாட்டின் நாடித் துடிப்பை எடை போட்டுக் காட்டியது!

வால்க தமில் வலர்க தமிழ்நாடு என்று எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்கள் தங்களது பதவிப் பிரமாணத்தின் போது வித விதமான அரசியல் முழக்கங்களை எழுப்பினர். கனிமொழி பெரியார் வாழ்க என்று முழக்கமிட்ட போது, யார் பெரியார் என கேட்டுத் தெரிந்து சிரித்த வட நாட்டு எம்பி.,க்கள் உடனே ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதனால் இன்று காலை பதவிப் பிரமாண நிகழ்வின் போது சலசலப்பு ஏற்பட்டது.

17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக இன்று காலை மக்களவையில் பதவி ஏற்றுக் கொண்டனர். நேற்று பதவி ஏற்றுக் கொண்ட பிரதாப் சாரங்கி, ஹர்ஷவர்தன் ஆகியோர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமானம் ஏற்றனர். டாக்டர்.ஜிதேந்தர் சிங் டோகிரி மொழியில் உறுதி ஏற்றுக் கொண்டார். மதுரா எம்.பி. ஹேமமாலினி “ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்” எனக் கூறி மக்களவையில் பதவி ஏற்றுக்கொண்டார்!

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக பதவியேற்றனர். மற்றவர்கள் சம்ஸ்கிருதத்திலும் அவரவர் தாய்மொழியிலும் பதவிப் பிரமாணம் ஏற்றதால், தமிழகத்தைச் சேர்ந்த எம்பி.,க்கள் வேறு வழியின்றி தமிழிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

சில திமுக எம்பிக்கள் பதவியேற்கும்போது, வாழ்க கலைஞர் புகழ் என்றனர். ஓரிருவர்தளபதி வாழ்க என்று ஸ்டாலினையும் வாழ்த்தினர். தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் பெரியார் வாழ்க என்றனர்.

தமிழக எம்பி.,க்கள், தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவையில் நிசப்தம் நிலவியது. அதனை மற்ற எம்பி.க்கள் வரவேற்று ஆமோதித்தனர். ஆனால், தமிழக எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் செய்த முடித்த பின்னர், இறுதியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முழக்கத்தையும் சேர்த்தே முடித்தனர்.

சிலர் தமிழ் வாழ்க.. என்றனர். அப்படி என்றால் என்ன என சில வடமாநில எம்.பி.க்கள் அருகில் இருந்தவர்களிடம் கேட்ட போது, ஜெய் தமிழ் என்று கூறினர். அதன் பின்னர், பெரியார் வாழ்க என்று கூறிய போது, வட மாநில எம்.பி.க்கள், இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். அப்போது, ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற மனிதர் குறித்தும் மகள் வயதுப் பெண்ணை மகளாக ஊருக்குப் போக்குக் காட்டி வளர்த்து மனைவியாக வளைத்துப் போட்ட ஒழுக்கங் கெட்டவர் என்றும், குறிப்பாக இந்துக்களின் புனித தெய்வமான ராமர் படத்துக்கு செருப்பு மாலையிட்டு இந்துக்களின் மன உணர்வுகளைக் காயப் படுத்திய காட்டுமிராண்டி என்றும் விவரம் அறிந்த போது, பதிலுக்கு “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்கி அவையை அதிர வைத்தனர்.

குறிப்பாக, திமுக எம்பி கனிமொழி பதவிப் பிரமாணம் செய்த பிறகு, “பெரியார் வாழ்க” என்றார். அதற்கு பதிலாக, “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தை பாஜக., எம்பி.க்கள் எழுப்பினர். பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். இந்துக்களின் புனித தெய்வம் ராமரின் வழிபாட்டை மட்டும் எதிர்த்தவர். எனவே, பெரியார் வாழ்க என்ற முழக்கம், கண்டிப்பாக பாஜக எம்பிக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற எண்ணமும், அடுத்தவர் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என்ற இங்கிதமும் இருந்திருந்தால், கனிமொழி அவ்வாறு முழக்கம் இடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால் இந்திய மொழிகளில் உரையாடுவதையும் படிப்பதையும் எதிர்த்து விட்டு, கிறிஸ்துவம் பரப்ப வந்தவர்களின் ஆங்கிலத்துக்கு மட்டுமே அடிவருடிகளாய் மாறிப் போன திமுக.,வினர், தமிழ் வாழ்க என்று சொன்ன போது, பாஜக., எம்.பி.க்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

பாஜக.,வினர் ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் அவரவர் மாநில மொழியிலும் பதவிப் பிரமாணம் ஏற்ற போது, தமிழகத்தில் உள்ளவர்களும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது இயல்பானது. ஆனால் எந்த பாஜக., எம்பி.,யும் ஹிந்தி ஜெய் ஹோ என்றோ, டோக்ரா ஜெய் ஹோ என்றோ தங்கள் மொழிக்கு வெற்றி என்றோ முழங்கவில்லை. இயல்பாகச் செல்ல வேண்டிய ஒரு பதவிப் பிரமாண நிகழ்ச்சியை, வேண்டுமென்றே அரசியல் மேடை ஆக்கி, தமிழ் வாழ்க என்று வலியச் சொன்ன போது, வட நாட்டு எம்பி.க்களுக்கு மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை டிவி,க்களில் பார்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கே ஆத்திரம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஒரு தரப்பு மக்களை மட்டும் புண்படுத்திய காட்டுமிராண்டி ஈ.வே.ரா., பெயரை சொன்னபோது, அதற்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷத்தையே வட மாநில எம்.பி.க்கள் முன்வைத்தனர்.

டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி, ஆ.ராச, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் என வரிசையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட போது எந்த சலசலப்பும் இல்லை. ஆனால், கனிமொழி பெரியார் வாழ்க என்ற போது பதிலுக்கு ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கம் எழுப்பப் பட்டது.

பின்னர் தொல் திருமாவளவன், ரவிக்குமார், ஜெயக்குமார் ஆகியோர், அம்பேத்கர் வாழ்க காந்திஜி வாழ்க தந்தை பெரியார் காமராஜர் வாழ்க என சொன்ன போது பெரிதாக ஆரவாரம் எதுவும் இல்லை.

தருமபுரி எம்பி., செந்தில் குமார் -திராவிடம் வெல்க என்றார். இன்னும் சிலர் அவரவர்க்கு தோன்றிய முழக்கங்களை எல்லாம் எழுப்பினர்.

பாரிவேந்தர் தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க என்று பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

எஸ்.ஆர் பார்த்திபன், கௌதம் சிகாமணி உள்ளிட்டோர் தளபதி வாழ்க என்றனர்.

தமிழக எம்பி.,க்கள் அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாலும், அவர்களில் பலருக்கு தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரம் உச்சரிக்க வரவில்லை. பெரும்பாலும் வால்க வால்க தமில் என்றும் தமில்நாடு வால்க என்றும் கூறினர். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பிரித்து மேய்ந்தனர். குறிப்பாக., தென்காசி திமுக., எம்பி., தனுஷ் குமார் தமில் தமில்நாடு என்றது இன்று சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிப் பொருளானது.

இந்த நாடகக் கூத்துகளை எல்லாம் புறம் தள்ளி விட்டு, தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஒரு அதிமுக., எம்.பி.,யான தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் குமார், தாம் சார்ந்த கட்சியான அகில இந்திய அதிமுக., என்பதற்கு உதாரணமாக, வாழ்க புரட்சித் தலைவர் வாழ்க அம்மா என்று கூறியதுடன், வந்தேமாதரம் ஜெய்ஹிந்த் என்ற போது, அவையினர் பெருத்த கரவொலி எழுப்பி அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் வடநாட்டு எம்.பி.க்கள் ஒன்றை தெளிவு படுத்தியுள்ளனர். தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்த போது வரவேற்பு தெரிவித்தும், மற்ற முழக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வந்தவர்கள், பெரியார் வாழ்க என்ற முழக்கத்துக்கு ஜெய் ஸ்ரீராம் என்ற பதில் முழக்கம் எழுப்பியது நாட்டின் நாடித் துடிப்பை எடை போட்டுக் காட்டியது!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...