மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை மாதம் 5-ம் தேதி வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் இருந்தது என கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் வைகோ மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜரான வைகோ, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசே காரணம். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு சர்வதேச போர் குற்றவாளி. நான் இந்திய அரசு மீது வெறுப்புணர்வையோ, காழ்ப்புணர்வையோ ஏற்படுத்தும் விதமாக பேசவில்லை.
இந்திய அரசு தனது கொள்கையை தான் மாற்றவேண்டும் என்று கூறினேன். அத்துடன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன்,நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிகாட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதற்கு என் மீது பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்து பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது” எனக் வைகோ கூறினார்.
அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் வழக்கின் தீர்ப்பை ஜூலை 5-ம் தேதி வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.