அய்யா வைகுண்டர் பைபிள் படித்தாரா?! பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரி அமைச்சருக்கு ஏபிவிபி., கடிதம்!

அண்மைய சர்ச்சைக்குள்ளான பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தகவலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், அண்மைய சர்ச்சைக்குள்ளான பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தகவலை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

நெல்லை மாவட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழும் பெரும்பான்மை மக்கள் அய்யா வைகுண்டரை கடவுளின் அவதாரமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்!மேலும் சமூக நீதி, சமதர்ம ஒழுக்க நெறிகளை போதிக்கும் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் அதீத நம்பிக்கையும் பற்றும் கொண்டு அந்த வழியை பின்பற்றி வருகின்றனர்!

தமிழக அரசு சார்பில் வெளியான பத்து பதினொன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் அய்யா வைகுண்டர் குறித்த வரலாற்றுப் பக்கங்கள் இடம்பெற்றுள்ளது! அதில் அய்யா வைகுண்டரைப் பற்றிய கட்டுரையில், அய்யா அவர்கள் சமூக போராளி போலவும் கிறித்துவ மத விவிலியம் (bible) படித்தார் என்றும், உருவமற்ற கடவுளுக்கு உருவம் கொடுப்பது போன்றும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன!

இந்தக் கருத்துகள் முற்றிலும் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. இந்தக் கருத்து அய்யா வைகுண்டரை தெய்வமாக வணங்கும் மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது!

மேலும் சமீப காலமாக வரலாற்று பாட புத்தகங்களில் அன்னிய மத கருத்துக்கள் உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்யும் விதமாக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!

எனவே தமிழக அரசு மக்களின் மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சிறப்பு கவனம் செலுத்தி வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ள அய்யா வைகுண்டர் குறித்த தவறான கருத்துகளையும் உருவப்படத்தையும் உடனே நீக்க வேண்டும்!

ஐயா வைகுண்டரின் உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றது போல பல்வேறு ஒழுக்க நெறிகளை போதிக்கும் அற்புதமான கருத்துக்கள் அகிலத்திரட்டு அம்மானையில் உள்ளது! இந்தக் கருத்துக்களை பாடநூலில் சேர்க்க வேண்டும்!

இவ்வாறு தங்களது  கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் திருநெல்வேலி மாநகர செயலாளர் ஹரி விஷ்ணு கையெழுத்திட்டு இந்தக் கடிதங்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பப்பட்டுள்ளன!

நெல்லை தபால் நிலையத்துக்கு கோஷமிட்டுச் சென்று, இந்தக் கடிதங்கள் அனுப்பப் பட்டன. அப்போது அந்தப் பகுதியில் இருந்த போலீஸார் திடீரென கூடினர். அந்தப் பகுதியே பரபரப்பானது. பின்னர் விவரம் அறிந்த போலீஸார், மாணவர்களை அன்புடன் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வின் போது, ஏபிவிபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், நகர இணைச் செயலாளர் காலான்கரையான், பள்ளிகள் பொறுப்பாளர் ஹரிச்சந்திரன், கல்லூரிச் செயலாளர் சுடலைமுத்து உடன் இருந்தனர்


ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வைத்த கோரிக்கைகளைப் போல், அய்யா வழி அன்பர்களும் அரசுக்கு வைத்து வருகின்றனர்.

சாமித்தோப்பில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பாலஜனாதிபதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அய்யா வைகுண்ட சுவாமி பற்றி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ்-1, ப்ளஸ்- 2 பாடத் திட்டங்களில் தவறாகக் கூறப்பட்டுள்ளது. அது அய்யாவழி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அய்யா வைகுண்ட சுவாமி மனிதனாக பிறந்து இறைவனாக அவதாரம் எடுத்தவர். அவருக்கு உருவ வழிபாடு கிடையாது. ஆனால், ஏதோ ஒரு படத்தை வைத்து பாடப் புத்தகத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கி விட்டு அகிலதிரட்டு ஆகம நூலின்படி கருத்துகளை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். தற்போது பாடப் புத்தகத்தில் உள்ள படத்தையும் நீக்க வேண்டும். இதை ஒருமாத காலத்துக்குள் சரி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அய்யா வழி மக்களையும் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைத்தப்படும்” என்றார்.

அதே போல், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டசாமிகள் பற்றி இடம்பெற்றுள்ள தவறான கருத்துக்களை, நீக்க வேண்டும் என்று அய்யாவழி மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யா வழி -அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திரன், வைகுண்ட சாமிக்கு மனித உருவம் கொடுக்கப்பட்டுள்ளதையும், பாடத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் தங்கள் இயக்கத்திற்கு எதிரானது எனவும் கூறினார். இதனை நீக்கவிட்டால் வரும் 30ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...