August 3, 2021, 5:27 am
More

  ARTICLE - SECTIONS

  அதிர்ச்சி; அத்திவரதர் தரிசன நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு! இனியாவது இந்த யோசனையை அரசு ஏற்குமா?!

  அறநிலையத்துறையும், அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனே களத்தில் இறங்கி, மேலும் உயிரிழப்புகளும், அவப்பெயரும் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

  athivarathar crowd1 - 1

  காஞ்சிபுரம் அத்திவரதர் உற்ஸவத்தில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

  காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பெண்கள் இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆவடி ஜெயந்தி, ஆந்திரா நாராயனி, சேலம் ஆனந்தன் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உடல் நிலை பாதிக்கப் பட்ட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

  ஒவ்வொரு நாளும் காஞ்சி அத்திவரதர் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்ய வருகின்றனர்.

  அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் சிறிய மண்டபம் என்பதால், அதிக அளவிலான அன்பர்கள் சென்று வர வசதியின்றி, குறுகிய வழி என்பதால் நெரிசல் ஏற்படுகிறது என்கிறார்கள்.

  இதனிடையே, காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் 100 பேர் மயக்கம் என பரவும் செய்தி தவறானது, பக்தர்கள் பீதியடைய வேண்டாம் என்று ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து அவர் கூறிய போது, மருத்துவ முகாம்களில், 18 நாளில் 100 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர் என்று கூறினார்.

  durga stalin athivarathar 1 - 2இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்  ராமஸ்வாமி வெங்கட்ராமன் நிலவரம் குறித்து நம்மிடம் தனது கருத்தைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது…

  கடந்த 1979ம் ஆண்டு அத்திவரதர் எழுந்தருளியபோது இவ்வளவு ஊடக விளம்பரம் இல்லை. ஆனால் இப்போது தொலைகாட்சி சேனல்கள் சமூக வலைதளங்கள் யூடியூப் போன்றவற்றின் மூலமாக இந்த நிகழ்வு கோடிக்கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது. எனவேதான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  திருப்பதி ஏழுமலையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருடம் முழுக்க வருகை தருவதால் அதனை ஒழுங்குபடுத்த பக்தர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கட் தரிசனம் புக் செய்து கொண்டு குறிப்பிட்ட தேதியில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு தக்கபடி திட்டமிட்டு, தரிசனம் செய்கிறார்கள்.

  பொது தரிசனமாக வருபவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் ஷெட் தங்குமிட வசதி செய்து கழிவறை வசதிகள் உணவு வசதிகள் செய்து எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுகிறார்கள். அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் செய்து கொடுக்கிறார்கள்.

  ஆனால் இப்போது 2019ல் அத்திவரதரைக் காண இவ்வளவு பெரிய கூட்டம் இருக்கும் என எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தி விட்டு மினி பஸ் ஷேர் ஆட்டோக்கள் மூலம் கோவில் நுழைவு வரிசையில் கொண்டு விடுகிறார்கள்.

  திடீரென வரும் கூட்டத்தினரை அமர வைத்து டாய்லட் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது சிரமம் தான். ஆனால் பத்து கிமீ தொலைவுக்கு வரிசை; பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை கொடுமையானது. வயதானவர்கள் சிறுவர்கள் பாடு வெகு சிரமம்.

  kanchi athivarathar q3 - 3விஜபி தரிசனம் செய்பவர்கள் நல்ல பாதையில் செல்ல முடியும். பொதுவாக தரிசனம் செய்ய வரும் பாதை கரடு முரடாகத் தான் பல இடங்களில் உள்ளது. குறிப்பிட்ட மழை வெயில் பாதிப்பு இல்லாத ஷெட் பகுதிக்கு வந்து விட்டால் ஒரு மணி நேரத்தில் தரிசனம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

  இப்போது அத்தி வரதர் தரிசனம் கொடுக்கும் நாட்களில் பாதி பகுதி முடிவடைய போகிறது. ஒருமுறை தரிசித்தவர்களே மீண்டும் மீண்டும் இரண்டு முறை நான்கு முறை தரிசனம் செய்தும் உள்ளனர்.

  சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப் பட்டதால் பக்தர்கள் நன்மை அடைந்தார்கள் என கூற முடியாது. இப்போது ஊழல் தான் அதிகம் ஆகும். செல்வாக்கு உள்ளவர்கள் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வர்க்கம், குடும்பத்தினர் மற்றும் பிரபல ரவுடிகள், நாத்திகம் பேசுபவர்கள் பாஸ் வாங்கிக் கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.

  அடுத்த தரிசனத்துக்கு இன்னும் நாற்பது வருடம் ஆகும் என்பதால் இப்போதே பார்த்து விட வேண்டும் என நெரிசல் வரும் போது வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் சாதாரண பக்தர்களுக்கு சொல்லவொண்ணா துன்பம் ஏற்படுகிறது. அடுத்த தரிசனத்தை பலர் பார்க்க வாய்ப்பு இருக்காது.

  இளம் தலைமுறை அடுத்த தரிசனம் காணமுடியும்! வயதானவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாக் கூட்டமும் வயதானவர்கள் ஆகவும் அவருடன் ஒருவர் அனுமதி என்றாலும் பிரச்னை கடினம் தான்.

  இப்போது தினம் ஐந்நூறு பேருக்கு ஐந்நூறு ரூபாய் சகஸ்ரநாம அர்ச்சனை என்ற திட்டத்தில் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் தரிசனம் கிடைக்கும். இது ஒன்று தான் பாஸ் பெற செல்வாக்கு இல்லாதவர்கள் பயன் அடையும் திட்டம். அதுவும் ஆன்லைன் ஓப்பன் ஆனால் உடனே பத்து நிமிஷத்தில் முடிந்து விடும்.

  Kanchipuram Sri Athivarathar Darshan8 - 4தற்போது விஐபி.,கள் அத்தி வரதர் அருகில் இருந்து உள்பக்கமாக தரிசனம் செய்து போகிறார்கள். பதினைந்து அடி தொலைவில் மூன்று வரிசையாக பொது தரிசனம் உள்ளது. வெளியூரில் இருந்து நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள் முதியவர்கள் சிறுவர்கள் பயனடைய சிறப்பான ஏற்பாடுகள் செய்ய முடியும்.

  பல ஆயிரம் அல்லது பல நூறு செலவழித்து வருபவர்கள் இலவச தரிசனம் தான் வேண்டும் என கூறவில்லை. இலவச தரிசனம் மூலம், நீண்ட கால விரயம், காலணிகள் இழப்பு என வீண் விரயம். காலணி பாதுகாப்பு ஒப்படைத்து மீள பெற மணிக்கணக்கில் ஆகி விடும். அப்படிப் பட்ட வெளியூர் பக்தர்களுக்கு திடீரென இருபது நாட்கள் தரிசன ஏற்பாடுகளுக்கு பல லட்சம் செலவு செய்து கட்டிடம் கட்டி நாற்காலிகள் கழிவறை அமைத்துக் கொடுக்க முடியாதுதான்.

  எனவே தினமும் தரிசனத்தில், மூன்று வரிசையில் ஒரு வரிசை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வருபவர்களுக்கு ஓரளவு குறிப்பிட்ட நேரம் திருப்பதி மாதிரி ஒதுக்கீடு செய்ய முடியும். இதன் மூலம் கூட்டம் ஒழுங்கு படுத்த முடியும்.

  தினமும் ஒரு லட்சம் பக்தர்களில் ஒரு இருபதாயிரம் பேர் நூறு ரூபாய் கொடுத்து ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் பதிவு செய்தால் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் ஆதார் மூலம் பதிவு செய்த வெளியூர்வாசிகள்.

  இவர்கள் தரிசனம் செய்ய வரும் போது இரண்டு மூன்று திருமண மண்டபங்களில் அமர வைத்து கோவில் ஏற்பாடு செய்யும் பஸ்கள் மூலம் கியூ வரிசையில் கொண்டு விட வேண்டும். அங்கே சென்றால் ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடித்து விட்டு வெளியே செல்லவும், காலணிகள் ஒப்படைத்து வெளியே சென்றதும் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

  இந்த நூறு ரூபாய் கட்டணத்தில், ரூ.50 அத்திவரதர் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகை வைத்து அடுத்த அத்திவரதர் தரிசனம் வரும் வரை வட்டியுடன் சேர்த்து 2059 தரிசன வசதிகள் செய்ய பயன்படுத்த வேண்டும். அதுவரை வங்கியில் அரசுப் பத்திரமாக, ஒரு முதலீடாக இருக்கட்டும்.

  மீதம் ரூ50, மண்டப வாடகை குடிநீர் அடிப்படை டாய்லட் வசதி மற்றும் மண்டபத்தில் இருந்து தரிசனம் அழைத்துச் செல்ல வாகன வசதி, காலணி பாதுகாப்பு போன்ற செலவினங்களுக்கு.

  இந்த வகையிலான தரிசனம் பெறுபவர்கள் குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் தரிசனம் முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை மண்டபத்தில் இருக்க வேண்டும்.

  இப்படிப்பட்ட வகையில் யோசித்து ஏற்பாடுகள் செய்தால் தினமும் பத்தாயிரம் பேர் கட்டண தரிசனம் செலுத்தி ஆன் லைன் மூலம் அரசியல்வாதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், ரவுடிகள் தலையீடு இல்லாமல் குறிப்பிட்ட இரண்டு மணிநேரத்தில் தரிசனம் உறுதி செய்ய முடியும்.

  எனவே மீதம் உள்ள பதினைந்து நாட்களுக்கு இந்த வகையில் தினமும் பத்தாயிரம் பக்தர்கள் நூறு ரூபாய் கட்டணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!.. என்றார்.

  அறநிலையத்துறையும், அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனே களத்தில் இறங்கி, மேலும் உயிரிழப்புகளும், அவப்பெயரும் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,339FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-