பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”
(பெரியவரின் நுணுக்கமான பார்வை)
சொன்னவர்-டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி
–நன்றி தென்றல் மாத இதழ் 2013
சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது,
“நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன்.
“நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார்.
நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.
“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன்
. “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.
மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார்.
“இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன்.
“அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார்.
“பார்த்தேன்” என்றேன்.
“அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார். பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இப்படிப் பல அனுபவங்கள்.
டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆய்வு, பயிற்றல், கருத்தரங்கு எனப் பல வேலைகளில் இடையின்றி ஈடுபட்டிருப்பவரைத் தென்றலுக்காக அரவிந்த் சுவாமிநாதன் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலிருந்து…