“நானே பத்ரி நாராயணன்”

p17new

நானே பத்ரி நாராயணன்”

(பெரியவாளின் விளையாட்டுப் புதிர்)


கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது 

பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார்.
ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம்
முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின்
கடைசியில் ஒரு மூதாட்டி…பழுத்த பழம் என்பார்களே
அந்த மாதிரி, மகானின் தரிசனத்துக்கு வந்து
கொண்டு இருந்தார்.

அருகில் வந்ததும் வணங்கி எழுந்தார்.

“உனக்கென்ன வேண்டும் கேள்?”
அந்த  மாது பரமபக்தை என்பதை மகான் அறிவார்…

“இனிமேல் எனக்கென்ன தேவை பிரபு?
சதா சர்வகாலமும் உங்களை ஆராதித்துக்
கொண்டு இருந்தாலே போதும்.

“அதுதான் இருக்கே…குறையில்லாம செய்றியே?
இப்போது உனக்கு ஏதாவது ஆசை இருக்கா….
இருந்தா சொல்….?”

பெரியவா இப்படிக் கேட்டதும் மூதாட்டி மௌனம்
சாதித்தார் சில வினாடிகள்.

“சொல்…பரவாயில்லை..என்னால் முடிந்த அளவுக்கு
உதவி பண்றேன்..”

மூதாட்டியின் மௌனம் கலைந்தது.

“எனக்கு ஒரு ஆசை…இந்த உயிர் போறதுக்குள்ளே
ஒரு தடவை பத்ரி நாராயணனைப் பார்க்கணும்”
என்றார் தயங்கித் தயங்கி, மெதுவான குரலில்…

பெரியவா பலமாக சிரித்தார்.

மூதாட்டிக்குப் புரியவில்லை.

“நீதான் எதிரிலேயே பார்த்துண்டு இருக்கிறாயே”

எதிரில் மகான் அல்லவா இருக்கிறார்!

“சந்தேகமா…மேலே பாரு” என்றார்.

பின்னால் இருக்கும் மரம் இலந்தை மரமாக இருந்தது.

“இலந்தை மரத்திற்கு “பத்ரி” மரம் என்று பெயர்…
அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?”

மூதாட்டிக்கு அது புரிய நெடு நேரமாயிற்று.