போலி நெய்.. வெண்ணெய்! ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’!

இந்த வெண்ணெய் உணவில் சேர்த்து உண்பதற்காக தயாரிக்கப் படவில்லை; நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரம்  அபிஷேகம் செய்வதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது

போலி வெண்ணை தயாரித்து, அதில் ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துக்கு சப்ளை செய்தார்களாம்..! அதிகாரிகள் கேட்ட போது, ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துக்குத்தானே கொடுத்தோம்… சாப்பிடவா கொடுத்தோமென்று அலட்சியமாக பதில் கூறினார்களாம்… இதனைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் இந்து சமுதாயம் இருப்பது வேதனைக்குரியது என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ஊத்துக்குளி வெண்ணை என்ற பெயரில் ஒரு சொட்டு பால்பொருள் கூட கலக்காமல் வனஸ்பதியை பாமாயிலுடன் கலந்து போலியாக வெண்ணை தயாரித்து வந்த ஒரு கும்பல், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், சென்னையில் சிக்கியுள்ளது. வீடு வீடாக அதிகாரிகள் சென்று பார்த்த போது, இப்படி குடிசைத் தொழில் போல் வெண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது.  கலப்பட உணவுப் பொருள் சட்டப்படி, இவற்றின் மீது அவசியம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்!

வெண்ணைக்கு பேர் போன ஊத்துக்குளி வெண்ணெய் என்ற பெயரைப் பயன்படுத்தி, சென்னையில் போலியாக வெண்ணை உற்பத்தி செய்து வந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த சில காலத்துக்கு முன்பே… ஆலயங்களில் நெய் தீபம் என்ற பெயரில் மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு, அதை ஆலயங்களில் இறைவன் சந்நிதியில் ஏற்ற வற்புறுத்தப் பட்டார்கள். ஆனால், இந்த நெய் விளக்கு கடை ஏலம் எடுப்பதிலும் கடை போடுவதிலும் கடும் போட்டி எழும். அப்போது ஏலத் தொகைக்கு ஏற்ப லாபம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாயிருந்த பலர், தரமற்ற நெய்யை வாங்கி பயன்படுத்தினர். பின்னாளில் கோயில்களில் விளக்கு ஏற்றப் பயன்படும் நெய் குறித்த தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்நிலையில், வெண்ணெய் என்ற பெயரில் ஒரு கலப்பட தாக்குதல் இந்து சமூகத்தின் மீது நிகழ்ந்துள்ளது. சைதாப்பேட்டை காவேரி நகரில் உள்ள வீடுகளில் போலியாக வெண்ணை தயாரிக்கப்பட்டு கோவில்களுக்கும், மளிகைக் கடைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள வெண்ணை தயாரிக்கும் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். வெண்ணைக்கு பெயர் பெற்ற ஊத்துக்குளி பகுதியில் தயாரிக்கப்படுவது போல் போலியாக லேபிள் ஒட்டி, டப்பாக்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணை டப்பாக்களை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது.

இந்த வெண்ணை ஆலைகளில் ஒரு சொட்டு பால் பொருள் கூட கலக்காமல்  தரம் குறைந்த பாமாயிலுடன், மட்ட ரகமான வனஸ்பதியை கலந்து அதில் கடுகு எண்ணையை சிறிதளவு சேர்த்து சுட வைத்து, அதனை சுத்தமான நெய் என்று லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

இந்த லேபிள்களில், மங்கையரின் மகத்தான தீர்வு! அறுசுவைகளில் மேலும் ஒரு சுவை..! என்றெல்லாம் குறிப்பிட்டு மக்களை வாங்கத் தூண்டுகின்றனர். இந்தக் கலப்பட வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால் பயன்படுத்துவோருக்கு எளிதில் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இது போன்று வெண்ணெய், நெய் தயாரித்து கோவில் நிர்வாகங்களை பெருமளவில் ஏமாற்றியுள்ளது இந்த கலப்பட கும்பல். ஹிந்துக்கள் புனிதமாகக் கருதி மேற்கொள்ளும் ஹோமங்களில் இத்தகைய குறைந்த விலை நெய் டப்பாக்கள் வழங்கப் படுகின்றன. மேலும், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழங்கப்படும் வெண்ணெய் சாற்று உத்ஸவம், அபிஷேகம் போன்றவற்றுக்கு இங்குள்ள நெய், வெண்ணெய் அளிக்கப் படுவதாக, இந்த சோதனைகளில் போது அங்குள்ளவர்கள் அசால்ட்டாகக் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் சோதனையின் போது ஒருவர், இந்த வெண்ணெய் உணவில் சேர்த்து உண்பதற்காக தயாரிக்கப் படவில்லை; நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரம்  அபிஷேகம் செய்வதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது என்று கூறியுள்ளார்.

இது பக்தர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ஆஞ்சநேயர் கோயில்களில் குறிப்பாக அசோக் பில்லர் ஆஞ்சநேயர் கோயில், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோயில்களில் சாற்றப் படும் வெண்ணெய் அதன் பின்னர் பிரசாதமாக அன்பர்களுக்கு வழங்கப் படுகிறது. மேலும், வெண்ணெய் பிரசாதமாக ஏழைகளுக்கு அளிக்கப் படுகிறது. இவற்றை அவர்கள் உணவுப் பொருளாகத்தான் சேர்த்துக் கொள்கின்றனர். வெண்ணெயை உருக்கி நெய்யாக்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், அபிஷேகத்துக்காக, அலங்காரத்துக்காகத்தான் கொடுத்தோம், உணவுக்காக அல்ல என்று அலட்சியாமாகவும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் இந்த வியாபாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது என்கின்றனர் ஆலய அன்பர்கள்.

ஒரே நாளில் 12 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 300 கிலோ எடையுள்ள போலி வெண்ணை டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்து விநாயகர் சதூர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளில் வெண்ணை பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற கலப்பட வெண்ணையை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர் என்று சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே இது விவகாரத்தில் கோயிலுக்குச் செல்லும் ஆன்மிக அன்பர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். கூடுமானவரை, வீட்டில் தயாரித்த நெய் கொண்டே விளக்குகளை கோயில்களிலும் ஏற்ற வேண்டும். தூய வெண்ணெய் வாங்கி அவற்றைக் காய்ச்சி, நெய்யாக கோயில்களுக்கு எடுத்துச் செல்லலாம்; அதை விடுத்து கோயில்களில் விற்பனை ஸ்டால்களில் வைத்திருக்கும் நெய்யை வாங்குவது மிகத் தவறு என்கின்றனர்!

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...