spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சிதம்பரம் கோவிலின் மரபு இது தானா? - அன்று மாமன்னருக்கே மறுப்பு!இன்று பட்டாசு அதிபருக்கு சிறப்பு!

சிதம்பரம் கோவிலின் மரபு இது தானா? – அன்று மாமன்னருக்கே மறுப்பு!இன்று பட்டாசு அதிபருக்கு சிறப்பு!

- Advertisement -

சிதம்பரம் கோவிலின் ராஜசபை என்பது அதன் ஆயிரங்கால் மண்டபம் ஆகும். அங்கு நடராஜ பெருமானின் தரிசனமும், சோழ மன்னர்களின் முடிசூடலும் நடப்பதுதான் மரபு. ஆனால், தற்போது, சிவகாசி பட்டாசு அதிபர் வீட்டு திருமணம் சிதம்பரம் கோவிலின் ராஜசபையில் நிகழ்ந்துள்ளது.

கூற்றுவ நாயனார் எனும் மாமன்னன் ராஜசபையில் முடிசூட விரும்பிய போது, ‘சோழ மன்னருக்கு அல்லாமல் வேறு எவருக்கும் அனுமதி இல்லை’ என தில்லைவாழ் அந்தணர்கள் வீரமாக மறுத்தார்கள் என்று பெரியபுராணத்தில் போற்றப்படும் இடம் இதுவாகும். ஆனால், தற்போது பணம் இருக்கிறது என்பதற்காக பட்டாசு அதிபரின் திருமணம் இங்கு நடந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு!

சைவ சமயத்தின் தலைநகரமும், சோழ மன்னர்களின் ஆன்மீக தலைமையிடமும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும். அப்பர், சுந்தரர்,சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு இரண்டு நாட்கள் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆரூத்ரா தரிசன விழாக்களின் போது, சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். அங்கு லட்சார்ச்சனை, மகா அபிஷேகம்,திருவாபரண அலங்காரம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இன்னொரு முதன்மை நிகழ்வு சோழ மன்னர் முடிசூடல் ஆகும். “சோழர்கள் தவிர வேறு யாருக்கும் அங்கு முடிசூடுவதில்லை” என்பது இக்கோவிலின் வீரமரபு ஆகும். கூற்றுவநாயனார் எனும் களப்பிர மன்னர் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி, தனக்கு முடிசூடுமாறு உத்தரவிட்டபோது, உயிருக்கு அஞ்சாமல் ‘சோழனை தவிர வேறு எவருக்கும் முடிசூட மாட்டோம்” என தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்தனர். இதனை பெரியபுராணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது!

மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்

பிச்சாவரம் மன்னர் பரம்பரை

சோழர் பரம்பரை வழியில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடுவது வழக்கம். முடிசூட்டு விழாவின் போது, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பொற்கூரையில் இருக்கும் “பஞ்சாட்சரப் படியில்” பிச்சாவரம் மன்னர் பரம்பரையினரை அமரவைத்து,நடராஜருக்கும் அபிஷேகம் செய்யும் வலம்புரி சங்கால் “திருஅபிஷேகம்” செய்தபிறகு, ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று ஆத்தி மாலை சூடி புலிக்கொடி கொடுத்து தில்லைவாழ் அந்தணர்கள் பிச்சாவரம் மன்னருக்கு முடிசூட்டுவார்கள்.

1943 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையை சேர்ந்த மகாராஜா ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு நடைபெற்ற முடிசூட்டு விழா குறித்து 21.8.1943 இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் “தில்லை பொது தீட்சிதர் அவர்களால் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும் பட்டாபிசேகமும் நிறைவேறின” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ சமய நம்பிக்கையை விட பணம் மேலானது அல்ல

சோழர் “குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி” என்று பெரியபுராணத்தில் போற்றப்பட்ட இடத்தில், நட்சத்திர விடுதி போன்று திருமணத்திற்கு அனுமதி அளிப்பது சிதம்பரம் கோவில் மரபுக்கு எதிரானதாகும்.

மேலும், ஆண்டுக்கு இரண்டு முறை நடராஜ பெருமான் வீற்றிருக்கும் ஆயிரங்கால் மண்டபம் திருமண மேடையாக ஆக்கப்படுவது சைவ சமய ஆன்மீக நம்பிக்கைக்கு தீங்கு செய்யும் செயல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe