spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்காதல் கவிதை எழுத... காதலித்துத்தான் ஆக வேண்டுமா?

காதல் கவிதை எழுத… காதலித்துத்தான் ஆக வேண்டுமா?

- Advertisement -
Sujatha Tamil writer

அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்.

கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? –

பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.

sujatha leftt

கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?

பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.

பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.

கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –

பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.

கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –

பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?

பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.

கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?

பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.

கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!

பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!

கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ?

பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.

கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?

பதில்: சரிதான்… துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?

கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?

பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.

கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?

பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.

கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?

பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.

கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?

பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’

கேள்வி: அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?

பதில்: ‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe