spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்அமெரிக்காவில் ஒரு ‘தெலுங்கு தோட்டம்’: விஜயவாடா பெண் வித்யா தாடங்கியின் சாதனை!

அமெரிக்காவில் ஒரு ‘தெலுங்கு தோட்டம்’: விஜயவாடா பெண் வித்யா தாடங்கியின் சாதனை!

- Advertisement -
vidya-thadangi
Vidya Tadanki

வித்யா தாடங்கி (Vidya Tadanki) அமெரிக்காவில் வளர்க்கும் தெலுங்கு தோட்டம்

அமெரிக்காவில் உள்ள இர்வின் நகரம் உலகின் தலை சிறந்த கல்விக் கூடங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு நடைபெறும் ‘தெலுங்கு தோட்டம்’ என்பது குழந்தைகளுக்கான சிறு பள்ளி. இந்த தெலுங்கு தோட்டத்திற்கு விதை ஊன்றி நீர் வார்த்து வளர்த்து வருபவர் விஜயவாடாவைச் சேர்ந்த ‘வித்யா தாடங்கி’ என்ற சிறப்பான பெண்மணி. பள்ளி சிறிதானாலும் இங்கு தெலுங்கு மொழி, கல்வி, கலாச்சாரம் பரப்பும் அழகு மிகவும் உயர்ந்ததாக உள்ளது. அதிக நிதி வசதி உடைய பெரிய அமைப்பு மட்டுமே செய்யக் கூடிய பணியை இப்பள்ளி செய்து காட்டுகிறது. இதன் பின்னணியில் வித்யா தாடங்கி யின் பதினெட்டு ஆண்டு கால கடும் உழைப்பு உள்ளது.

வித்யா, விஜயவாடாவைச் சேர்ந்தவர். விஜயவாடா முன்னாள் மேயர் டாக்டர் ஜந்தியால சங்கர் இவர் தந்தையார். தாயார் காமேஸ்வரி முனிசிபல் கார்போரேட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வித்யாவின் தாத்தா ஜந்தியால தட்சிணாமூர்த்தி விஜயவாடா முனிசிபாலிட்டி சேர்மேனாக இருந்தவர்.

நிர்மலா கான்வென்ட் மாணவியான வித்யா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பும், உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பயின்று, ஹைதராபாத் பாரதீய வித்யா பவனில் ஜெர்னலிசமும் பயின்றவர். வெங்கட் தாடங்கி என்பவருடன் திருமணமான பின் சிறிது காலம் கல்கத்தாவில் ஒரு ஆங்கில பத்திரிகையில் துணை ஆசிரியராக வேலை பார்த்தார். 2000ல் கலிபோர்னியாவில் கணவருடன் குடியேறினார்.

“அமெரிக்காவிற்கு வந்த பின் தெலுங்கு மொழியைக் காதால் கேட்காமல் மிகவும் ஏங்கினேன். எப்போதும் தெலுங்கு இலக்கியத்தின் நடுவில் வாழ்ந்தவள் நான். விஜயவாடாவில் ‘உஷஸ்ரீ’ போன்ற இலக்கியவாதிகள் எங்கள் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்தார்கள். சிறு வயது முதல் அவர்களின் உரையாடல், இலக்கிய சர்ச்சைகள் கேட்டு வளர்ந்தேன். அப்படிப்பட்ட என்னை அமெரிக்காவின் புதிய சூழல் ஒரேயடியாக வாட்டியது” என்று நினைவு கூர்கிறார் வித்யா.

Vidya Tadanki
Vidya Tadanki

பின் அமெரிக்காவின் ஜான் ஜோஸ் என்ற நகரின் ஒரு பள்ளியில் ஆங்கில அபிவிருத்தி ஆசிரியராக வேலையில் சேர்ந்தார்.

“அது ஒரு விசித்திரமான வேலை. அமெரிக்காவில் வசித்தாலும் ஆங்கிலம் துளியும் வராத சைனா, ஸ்பெயின், கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு அந்த மொழியைச் ஓரளவு கற்றுத் தந்து அனுப்புவதே என் வேலை. அப்போது என் வகுப்பறைக்கு யாராவது தெலுங்கு மொழி பேசும் மாணவர்கள் வருவார்களா என்று ஆவலோடு எதிர்பார்ப்பேன். ஆனால் யாரும் வர மாட்டார்கள். ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் வராது என்ற பிரச்னையே இல்லை. ஏனென்றால் வீட்டில் பெற்றோர் ஆங்கிலத்திலேயே உரையாடினர். பெற்றோர் இருவரும் உத்தியோகத்திற்குச் சென்று விடுவதால் பிள்ளைகள் அனைவரும் அநேகமாக ‘டே கேர்’ சென்டர்களிலேயே வளருகிறார்கள். அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பின் கூட வீட்டிலோ வெளியிலோ தெலுங்கு மொழி பேச வேண்டிய தேவை ஏற்படாததால் அவர்களுக்கு ‘அம்மா, அப்பா’ போன்ற சொற்கள் கூட தெரிவதில்லை. இந்த சூழ்நிலையில் இவர்களின் தாய் மொழி புயலில் அகப்பட்ட தீபம் போன்றதாகி விட்டது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே ஒரு சிறிய தெலுங்குப் பள்ளி தொடங்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். சிறந்த சரித்திர, இலக்கிய வரலாறு கொண்ட தெலுங்கு மொழியின் வாரிசுகளாக என் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். என் இரண்டு குழந்தைகளையும் நம் பாரத நாட்டு கலாச்சாரம் குறையாமல் வளர்க்க நினைத்தேன். அதனையே அமெரிக்காவில் உள்ள மற்ற இந்திய குழந்தைகளுக்கும் வழங்க விரும்பினேன்” என்கிறார் வித்யா.

அதன் விளைவே இந்த தெலுங்கு தோட்டம். இர்வின் நகருக்கு இடம் மாறியதும், நேரத்தை வீணடிக்காமல் 2002ல் ‘தெலுகு தோட்ட’ என்ற பெயரில் சிறிய பள்ளியை ஆரம்பித்தார்.

“என் இரு பிள்ளைகளோடு என் சகோதரரின் இரு பிள்ளைகள் மற்றும் நண்பர்களின் பிள்ளைகள் என்று ஏழு மாணவர்களோடு தொடங்கியது எங்கள் பள்ளி” என்கிறார் வித்யா.

Vidya Tadanki

பள்ளி தொடங்குவதென்றால் விளையாட்டா, என்ன? அதுவும் அமெரிக்காவில். இடம் கிடைக்க வேண்டாமா? தன் வீட்டு காரேஜையே வண்ண மயம் செய்து பிள்ளைகளை தெலுங்கு வகுப்பிற்கு வரவேற்றார் வித்யா. ஜான் ஜோன்ஸ் பள்ளியில் அவர் பெற்ற பயிற்சி, முற்றிலும் தெலுங்கு மொழி பேசி அறியாத பிள்ளைகளைப் பயில்விக்க உதவியது. தற்சமயம் சுமார் 500 பிள்ளைகள் தெலுங்கு தோட்டம் மூலம் வெற்றி பெற்று வெளிவந்துள்ளார்கள்.

தெலுங்கு மொழி பேச, எழுத படிக்க, சொல்லித் தருவதோடு அவர்களுக்கு ஸ்லோகங்கள், செய்யுட்கள், பாடல்கள், நாடகங்கள் முதலியவற்றை முறையான தெலுங்கில் பயில்விப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் வித்யா. நவீன சினிமா பாடல்களுக்கு குழந்தைகள் நடனம் ஆடுவதை வித்யா அனுமதிப்பதில்லை.

“பாடலையும் ஆடலையும் மொழியைக் கற்றுத் தருவதற்கு ஒரு துணையாக கையாள்கிறேனே தவிர கையை காலை ஆட்டி உதைத்து சினிமா பாடல்களுக்கு ஆடுவதை நான் விரும்புவதில்லை. எங்கள் நிகழ்ச்சிகளில் பிள்ளைகள் அவர்களே பாடி ஆடுகிறார்கள். நம் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப் பட வேண்டும் என்பது தெலுங்கு தோட்டத்தின் முக்கிய நோக்கம்” என்கிறார் வித்யா.

இங்கு தெலுங்கு மொழி மட்டுமின்றி, இந்திய பண்பாடும் கற்றுத் தரப்படுகிறது. முதலில் வாரத்தில் ஒரு பேட்ச் என்று ஆரம்பித்து தற்போது தனி ஒருவராக வாரத்தில் ஐந்து பேட்ச்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.

தெலுங்கு மொழி சுத்தமாகத் தெரியாத அவர்களுக்கு எவ்விதம் மொழியை சொல்லிக் கொடுப்பது? மூளையைக் குடைந்து வழி கண்டுபிடித்தார் வித்யா. பாடல்களையும் நாடங்களையும் தனக்குத் துணையாக்கிக் கொண்டார். தான் கற்பிக்க எண்ணிய பாடங்களை தெலுங்கு கவிதைகள், செய்யுட்கள் மற்றும் ஸ்லோகங்களோடு தொடங்கினார்.

“அது, அப்போதே பிறந்த குழந்தைக்கு ஆவக்காய் ஊறுகாய் ஊட்டுவதை போன்றது. ஆனால் வேறு வழி இல்லை. சிறந்த உச்சரிப்பிற்கு செய்யுட்களும் ஸ்லோகங்களுமே ஆதாரம். ஒரு முறை அவை மனப்பாடம் ஆகி விட்டால் சொற்களைத் தனியாக உச்சரிக்கச் சொல்லித் தர வேண்டிய தேவை இருக்காது. அதன் பின் தினமும் உரையாடல் மற்றும் சின்னச் சின்ன நாடகங்கள் என்று வகுப்பு சுவையாகத் தொடர்கிறது. இதற்காக தினமும் நான் புதுப்புது நாடகங்கள் எழுத வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல. அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஆங்கில நாடகங்களை தெலுங்கு சூழ்நிலைக்கு மாற்றி எழுதி நடிக்க வைக்கிறேன். உதாரணத்திற்கு, ‘ஜான் அன்ட் தி பீன் ஸ்டாக்’ என்பது ‘ராமனின் அவரைக்காய் பந்தல்’ என்று மாறியது. அவற்றோடு கூட சரளமாக எழுத்துக் கூட்டி படிக்கவும் கற்றுத் தருகிறேன். இந்த பயிற்சிக்கு மூலம் நான் கற்றுத் தரும் கவிதைகளும் நாடகங்களுமே” என்று விளக்குகிறார் வித்யா.

“எப்படி என்றால், உரையாடல், பாடல், பாவனைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தது தானே நாடகம்? எனவே மாணவர்களின் ஒவ்வொரு உரையாடலிலும், அசைவிலும் சிறந்த முன்னேற்றம் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். அவ்விதம் நாங்கள் முதல் முறையாக ‘ரேடியோ புஸ்தக மகாசபை’ என்ற நாடகம் நடத்தினோம், அதற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்தது. அது முதல் மாணவர்களின் வருகை அதிகரித்தது” என்கிறார் வித்யா.

தெலுங்கு தோட்டத்திற்கு ஐந்து வயது முதல் இன்டர் படிக்கும் பிள்ளைகள் வரை வருகிறார்கள். ஓராண்டிற்கு 25 முதல் 30 மாணவர்கள் சேருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் சுமாராக 5௦௦ மாணவர்களுக்கு மேல் இந்த பள்ளியில் தெலுங்கு கற்றுள்ளார்கள். அவர்களுக்கு பாஷை சொல்லிக் கொடுத்து மொழிக்கு செய்யும் சேவை ஒரு புறம் இருக்க, நவராத்திரி பாடல்கள், துருவன், பிரகல்லாதன், ஸ்ரீ கிருஷ்ணா துலாபாரம், ருக்மிணி கல்யாணம், கவி போத்தனா எழுதிய கஜேந்திர மோட்சம், தங்குடூரி பிரகாசம் பந்துலு பற்றிய விவரம் போன்ற புகழ் பெற்ற கவிதை நாடகங்களை தன் பள்ளி பாட நூல்களாக இணைத்துள்ளார் வித்யா. எட்டு அற்புதமான பழைய தெலுங்கு நாடகங்களுக்கு மறு பிறவி கொடுத்துள்ளார் வித்யா.

தெலுங்கு தோட்டத்தின் இன்னுமொரு சாதனையாக அவர் நினைப்பது அமெரிக்க தேசீய கொடியை வடிவமைத்த ‘பெட்ஸி ரோஸ்’ என்பவர் மீதும், இந்திய தேசீயக் கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா என்பவர் மீதும் பாட்டு இயற்றி பிள்ளைகள் நடனம் ஆடிய நிகழ்ச்சி. ஓவ்வொரு ஆண்டு விழாவின் போதும் தெலுங்கு தோட்டத்தில் படித்த பாடல்களுக்கு குழந்தைகள் ஆடிக் காட்டி பாராட்டு பெறுகிறார்கள். ஆண்டு முடிவில் தேர்வு நடத்தி சர்டிபிகேட் அளிக்கிறார் வித்யா.

தன் மாணவர்களைக் கொண்டு “தப்பித்துக் கொண்ட பசு”, “மிருதங்க ஒலி” என்ற தெலுங்கு நூல்களை எழுதச் செய்து வெளியிட்டுள்ளார் வித்யா. மேலும் இவரிடம் தெலுங்கு கற்ற ஒரு பெண் எழுத்தாளராகவும் மாறியுள்ளார். அவள் எழுதிய ‘பங்காரு மனசு’ என்ற சிறுகதை, ஒரு ஆன்லைன் இலக்கிய பத்திரிக்கை நடத்திய போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளது.

நாடகங்கள் மட்டுமல்ல. விஜயவாடா செல்லும் போதெல்லாம் நம் பண்டிகைகள் தொடர்பான சம்பிரதாய பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள் போன்றவற்றை மிகவும் முயற்சி எடுத்து சேகரிக்கிறார் வித்யா. அவற்றுக்கு புகழ்பெற்ற சங்கீத வித்வான்கள் மூலம் ‘பாணி’ ஏற்படுத்துகிறார். அவற்றையே தன் மாணவனர்களுக்குக் கற்றுத் தந்து விழாவில் பங்கேற்கச் செய்கிறார். அவை தற்போது ‘தெலுகுதோட டாட்காம்’ என்ற வெப்சைட்டிலும் யுட்யூப் களிலும் காணக் கிடைக்கின்றன.

“இவை எதுவும் எளிதாக நிறைவேறி விடவில்லை. அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு தெலுங்கு மொழி கற்றுத் தர வேண்டியதன் அவசியத்தைப் பெற்றோருக்கு உணர்த்துவதற்கே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. பாடங்கள் முடிந்த பின் மேடையில் அவர்களை நடிக்க வைப்பதற்குத் தேவையான காஸ்டியூம் மற்றும் செட்டிங்குகள் கிடைப்பதற்கும் பெரும் பாடு. அவற்றை இந்தியாவிலிருந்து வரவழைக்கலாம் என்றால் அதிலும் ஏக சிரமம். எனவே அவற்றையும் நான் இங்கேயே தயாரிக்கிறேன். முதலில் இங்கு ஏற்கெனவே புகழ் பெற்றிருந்த தெலுங்கு சங்கங்கள் நடத்தும் விழாக்களில் எங்கள் மாணவர்களின் பங்கேற்பு இருந்தது. ஆனால் அவர்களால் அதற்கு பதிநைந்து நிமிடங்கள் கூட ஒதுக்க இயலவில்லை. அப்படியே கொடுத்தாலும் பாதி ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இவர்களை மேடைக்கு அழைத்தார்கள். சிறு குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே நாங்களே எங்களால் முடிந்த அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கினோம். அதிலும் எங்கள் மாணவர்கள் முழுத் திறமையையும் காட்டி அனைவரையும் கவர்ந்துள்ளார்கள். தற்போது எங்கள் பள்ளிக்கு உலகளாவிய தெலுங்கு மொழி பேசும் மக்களின் பேராதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் வித்யா.

“UNESCO வரைமுறைப்படி இளம் தலைமுறையினருக்கு தங்கள் தாய் மொழி தெரியாவிடில் அந்த மொழி இறக்கும் மொழியாக அறிவிக்கப்படுகிறது. அந்த மாதிரி ஒரு நிலை என் தாய் மொழிக்கு வராமலிருப்பதற்காக என்னாலான தொண்டினைச் செய்கிறேன்” என்கிறார் வித்யா.

‘Italian language of the East’ என்று தெலுங்கு மொழி புகழப்படுகிறது. நம் பாரதியாரும் ‘சுந்தரத் தெலுக்கு என்று போற்றியுள்ளார். தெலுங்கு மொழியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு உயிர் எழுத்துடன் முடிவதே அதன் அழகிய ஒலிக்கு காரணம்.

‘ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள். புதிய ஆத்மாவைப் பெற்றுக் கொள்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏற்றாற்போல் அமெரிக்காவில் வளரும் இந்தியக் குழந்தைகள் தம் தாய் மொழியைப் பயின்று தேர்ச்சி பெற மிகவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். மொழியின் மூலம் நம் நாட்டின் கலாச்சாரா பண்பாட்டோடு சிறந்த முறையில் இணைந்திருக்க முடியும் என்பது திண்ணம்.

அண்மையில் ‘அவனி காவ்ய’ என்ற பெயரில் மட்பாண்டம் மற்றும் பீங்கானில் பல வித பொருட்களும் பொம்மைகளும் செய்து தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தியும் அவற்றை கண்காட்சியில் வைத்தும் மகிழ்ச்சி அடைகிறார் வித்யா.

அதுமட்டுமின்றி, சனாதன தர்மத்தை நன்கறிய ஶ்ரீகுருப்யோ நமஹ என்ற வாட்ஸப் குரூப் தொடங்கினார். அதன் மூலம் ஆன்மீக அன்பர்களை ஒன்று திரட்டி ஆன்மீக உரைகளின் ஆடியோ கேசட்டுகளைக் கேட்பது, கேள்வி பதில் தயாரிப்பது உலகெங்கும் உள்ள குரூப் மெம்பர்களோடு கலந்துரையாடி ஐயம் தீர்த்துக் கொள்வது… என்று வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பொழுதை ஆன்மீக சாதனைக்கு செலவழிக்கும் சிறந்த பெண்மணி வித்யா தாடங்கி.

தற்போது குருஞானம் டாட் ஆர்க் என்ற இணையதளம் தொடங்கி 42 நாட்கள் ராஜமுந்திரியில் தொடர்ந்து நடந்த பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மாவின் பாகவத சொற்பொழிவுகளை சிடி மூலம் ஸ்ரீகுருப்யோ நமஹா குழவினர் கேட்டனர். விளக்கிக் கொள்ளும் விதமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான கேள்விகளோடும் பதில்களோடும் ஆடியோ கான்பெரன்ஸ் நடத்தினர். அது முழுமையடைந்து ‘ஶ்ரீசண்முக முரளி பாகவத மகரந்தம்’ என்ற மிகப் பெரிய நூலை மூன்று பாகங்களாக தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்கள்.

மாணவர்களுக்கு தெலுங்கு மொழி கற்றக் கொடுத்துக் கொண்டே ஆன்மீகத்தில் தானும் முன்னேறி அனைவரையும் இணைத்துக்கொண்டு உயர்த்தும் இவருடைய சாதனைகள் மிக அதிகம்.

நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்து சாதனை படைத்து வரும் இந்த ஆதர்சப் பெண்மணியைப் போற்றி வணங்குவோம்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe