
கோயில்: நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும்.
அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும்.
நீங்கள் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றும் எனில், ஈடுபடும் செயல்களில் முதலில் சில தடங்கல்கள் ஏற்பாட்டாலும் முடிவில் அந்த இறைவனின் அருளால் அனைத்தும் நன்மையாகவே முடியும்.
கனவில் கோயில் மணியோசையைக் கேட்பதாக உணர்ந்தால், அதற்கும் சில பலன்கள் உண்டு. கோயில் மணியோசை ஒரே சீராக ஒலிப்பது போல் உணர்ந்தால் பிள்ளையில்லா தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும். பணவரவும் அதிகரிக்கும்.
ஆனால் கோயில் மணியோசை சீரற்றதாக ஒலிப்பது போன்று உணர்ந்தால் உங்கள் வாழ்வில் பல சிக்கல்கள் உருவாவதோடு பண விரயமும் ஏற்படும்.
ஆலமரம்: உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், நீங்கள் செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி ஆகும். பொருள் வரவும், உங்களின் சுற்றத்தார் இணக்கமும், பாசமும் உண்டாகும்.
ஆசிர்வாதம்: உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையும், மிகுந்த பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.
ஆரஞ்சு: கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடலில் காயம் உண்டாகலாம். உங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவப்பெயர் ஏற்படக்கூடும்.
இஞ்சி: உங்கள் கனவில் இஞ்சியைக் கண்டால், உங்களுக்கு நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இனிப்பு: ஒருவர் தனது கனவில் இனிப்பான பலகாரங்களைக் காண்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் உங்களின் வருங்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பதற்கான அறிகுறி அதுவாகும்.
இளைப்பு: ஒருவர் தான் உடல் இளைத்து விட்டது போல் கனவு காண்பது, அவரது குடும்பத்தின் நிலை மேன்மையுறும் என்பதற்கான அறிகுறியாகும்.
இரும்பு: இரும்பை கனவில் காண்பவருக்குப் பொதுவாகவே மனோவலிமை அதிகமிருக்கும். ஆனாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். சிலருக்கு கஷ்டங்கள் வந்து நீங்கும். வேறு சிலருக்கு, தரித்திர நிலையை உண்டாக்கும்.
இரும்பைத் தொட்டு கையில் எடுப்பது போல் கனவு காண்பது சிறந்த பலனை தராது.
கன்று ஈன்ற பசு: பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.
நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும். வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.
தோன்றும்…..