
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: விநாயக சதுர்த்தியை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் கூட புதிதாக தொடங்கி செய்யலாமா?
பதில்: விநாயக சதுர்த்தி விரதத்தை அனைவரும் செய்யலாம். பொதுவாக விநாயக பூஜை செய்யும் சம்பிரதாயம் இல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டில் பழக்கமில்லை என்றாலும் கூட புதிதாக தொடங்கிச் செய்வதில் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் சர்வ மத சம்மதமானது விநாயக சதுர்த்தி விரதம்.
சில விரதங்களை வீட்டில் பழக்கம் இல்லை என்றால் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. உதாரணத்திற்கு அனந்த பத்மநாப விரத கல்பம் போன்றவற்றை அவர்கள் வீட்டு சம்பிரதாயத்தில் இருந்தால் மட்டுமே தொடர்ந்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் விநாயக சதுர்த்தி விரதம் இதுவரை செய்யாதவர்கள் கூட தெய்வ பக்தி உள்ளவர்கள் கட்டாயம் புதிதாகத் தொடங்கலாம். செய்ய ஆரம்பித்தால் அதுவே சம்பிரதாயமாக மாறும். பின்னர் வரும் தலைமுறையும் தொடரலாம்.
கணபதி வழிபாடு என்பது அனைத்து சம்பிரதாயங்களிலும் பிரதானமானது, முக்கியமானது.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா. தமிழில்: ராஜி ரகுநாதன்