Home துணுக்குகள் கல்லாமை இருளகற்றும் கடமைக்கான நாளின்று!

கல்லாமை இருளகற்றும் கடமைக்கான நாளின்று!

WorldLiteracyDay
WorldLiteracyDay

கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

இறைவனின் படைப்பில் மனித குலத்திற்கே உரிய பல பண்புகளில் கல்வியறிதலும் ஒன்று. எழுதுதல், வாசித்தல் முதலியன கல்வியறிதலில் அடங்குகிறது.

யுனெஸ்கோ நிறுவனம் செப்டம்பர் 8-ம் தேதியை உலக கல்வியறிதல் தினமாக அறிவித்துள்ளது. கல்வியின் சிறப்பை விளக்கவும், கல்வியானது கடைக்கோடி மனிதனையும் சென்றடையவும் கல்வியறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கல்வி அறிவுடையவர்கள் தம்மால் முயன்ற அளவு கல்லாதோர்க்கு கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். முன்பெல்லாம் வங்கிகளிலும், தபால் அலுவலகங் களிலும் பாமர மக்களுக்கு உதவுவதற்கென்றே பலர் இருப்பர்.

இந்தியாவில் கல்வியறிவில் கடவுள் நேசிக்கும் நிலமாகக் கருதப்படும் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அதே சமயத்தில் ஞானிகளின் பூமியாகப் போற்றப்படும் பீகார் மாநிலத்தில் கல்வியறிவு சதவீதம் குறைவாக உள்ளது என்பது வருத்தமளிக்கும் விஷயம்.

ஒளவையாரின் வாக்கான “கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” – என்பதற்கு இணங்க, நாம் கற்றுக் கொண்ட விஷயங்கள், நம் உள்ளங்கையில் கொண்ட மண்ணளவு, கற்க வேண்டியது உலகைப் போன்ற பிரம்மாண்ட அளவுடையது என்பதனை நாம் ஒவ்வொரு கணமும் உணர வேண்டும். இந்த உணர்வு நம்மில் எழுந்தால் மட்டுமே, நாம் மேலும் மேலும் கற்க முயற்சி செய்வோம். எதில் தன்னிறைவு அடைந்தாலும், கற்றலில் மட்டும் தன்னிறைவு அடைந்து விடவே கூடாது; முடியாது!

நாம் ஒன்றைக் கற்கும் போதும், பிறருக்குக் கற்பிக்கும் போதும் நாலடியார் பாடலான
“கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து” – என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப் பார்த்தால் இதிலும் நோய், நொடிகள் அதிகம். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும் – என்பதை நடைமுறையில் கைக்கொள்ள வேண்டும்!

கல்லாமை இருள் அகற்ற, கல்வியறிவு என்னும் விளக்கை ஏற்ற வேண்டும். படிப்பறிவில்லாத மக்களின் அறியாமை இருள் அகற்றி நல்ல பாரதம் உருவாக்க கற்றோர்க்கே கடமை அதிகம் உண்டு

இன்றுதான் கண் தான நாளும் அனுசரிக்கப்படுகிறது.
அறிவுக் கண்ணை திறக்க முற்படுவதுடன், நம் வாழ் நாட்களுக்குப் பிறகு நம் கண்களை தானமாக கொடுக்க அருகிலுள்ள கண் வங்கிகளில் பதிவு செய்து, பார்வையற்றோர்க்கு விழித் திறன் கிடைக்கவும் செய்யலாம்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version