Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: நட்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்!

சுபாஷிதம்: நட்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

ஸ்லோகம்:
இச்சேத்யேன ஸ்திராம் மைத்ரீம் த்ரீணி தத்ர ந காரயேத்!
வாக்வாதம் அர்தசம்பந்தம் தத் பத்னீபரிபாஷணம் !!

பொருள்: நிலையான நட்பை விரும்புபவர்கள் நண்பர்களோடு இந்த மூன்று செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வாக்குவாதம், பணம் கொடுக்கல் வாங்கல்கள், நண்பனின் மனைவியிடம் அனாவசிய பேச்சுகள்.

விளக்கம்: நண்பர்களை சம்பாதிப்பது என்பது ஒரு கலை. அந்த நட்பை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சற்று கடினமான பணி. இரு நண்பர்கள் இடையே நட்பு கெடாமல் இருக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த வேண்டியவை மூன்று உள்ளன. அவை குறித்து விவரிக்கும் புகழ்பெற்ற செய்யுள் இது. சண்டைக்கு இந்த மூன்றும் காரணங்கள். ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறது.

இரண்டு பேரின் அபிப்பிராயங்கள் வேறுவேறாக இருக்கும் போது வரும் வாக்குவாதங்கள் சிறு காற்று பெரும் புயலானது போல நட்பைக் கெடுத்து விடும். நண்பர்களிடையே வாக்குவாதங்கள் இருக்கக்கூடாது. உரையாடல்கள் இருக்கலாம்.

அடுத்து பணம். பண விஷயத்தில் கொடுக்கல் வாங்கல் எப்போதுமே இருவர் இடையே சண்டை மூட்ட கூடியது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரிந்து போவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். அதற்குக் காரணம் இதுதான்.

‘மாதா புத்ர விரோதாய ஹிரண்யாய நமோநம:’

தாய்க்கும் தனயனுக்கும் இடையே பகையை ஏற்படுத்தும் பணமே! உனக்கு நமஸ்காரம்! என்கிறார் ஒரு கவிஞர். ஆனால் நண்பர்களிடையே இருக்கவேண்டிய குணங்களில் கொடுக்கல்-வாங்கல் கட்டாயம் இருக்கும்.

ஏனென்றால் நண்பனின் தேவைக்கேற்ப பண உதவி செய்ய வேண்டும். அது கூட முறையாக, கவனத்தோடு, எழுத்துப்பூர்வமான நடைமுறையோடு விளங்க வேண்டும். அது விரோதத்தை வளர்க்காது. அடுத்து கடைசியாக பெண்கள் பற்றி குறிப்பிடுகிறார் சுபாஷிதக்காரர்.

நண்பனின் மனைவி மனம் வருந்தும்படி பேசுவது விரோதத்திற்கு வழிகோலும் என்று எச்சரிக்கிறார்.

அவளுக்கு தன் கணவன் மீதும் நண்பன் மீதும் கௌரவத்தை வளர்க்கும் உரையாடலை வரவேற்கலாம். ஆனால் அனாவசிய விஷயங்கள் பற்றிப் பேசுவது பகைக்கு காரணம் ஆகும் என்பது இந்த செய்யுளின் தாத்பரியம்.

இந்த மூன்றிலும் கவனத்தோடு இருந்து ஆபத்துகளில் சிக்காமல் நட்பை வாழ்நாள் முழுவதும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version