Home சுய முன்னேற்றம் சுபாஷிதம்: கருமமே கண்ணாயினார்!

சுபாஷிதம்: கருமமே கண்ணாயினார்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
கருமமே கண்ணாயினார்!

செய்யுள்:
க்வசித் ப்ருத்வீசய்யா க்வசிதபி ச பர்யங்கசயன:
க்வசித்சாகாஹாரீ க்வசிதபி ச சால்யோதனருசி: !
க்வசித் கந்தாதாரீ க்வசிதபி ச திவ்யாம்பரதர:
மனஸ்வீ கார்யார்தீ ந கணயதி து:கம் ந ச சுகம் !!
— பர்த்ருஹரி.

பொருள்:
செயலைச் செய்து முடிப்பதற்கு காரிய சாதனையில் ஈடுபடுபவன் சுக, துக்கங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஓரொருமுறை கட்டாந்தரையில் படுத்து உறங்குவான். பின்னர் ஒருமுறை சுகமான மஞ்சத்தில் சயனித்திருப்பான்.

அதேபோல் உணவு கிடைக்காவிட்டால் பச்சைக் காய்கறியைத் தின்று பசியாறுவான். பிறிதொருமுறை விருந்துண்டு மகிழ்வான். இல்லாதபோது கிழிந்த ஆடையை அணிவான். கிடைத்தபோது உயர்ந்த உடைகளை உடுத்துவான். நினைத்ததை செய்து முடிப்பதிலேயே குறியாக இருப்பான்.

விளக்கம்:
செய்யும் பணியில் ஊன்றியிருப்பவர் கருமமே கண்ணாயிருப்பார். சூழ்நிலைக்கேற்ப பொறுத்துப் போகும் சகிப்புத் தன்மை கொண்டிருப்பார். சுகங்களுக்கு அடிமையாக மாட்டார் என்ற செய்தியை அளிக்கும் பர்த்ருஹரியின் உயர்ந்த சுலோகம் இது.

சுகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் எங்கேயும் எந்தச் சூழலிலும் வாழக்கூடிய உடல், மனத் திட்பம் ஒரு செயலை சாதிக்க நினைப்பவனுக்கு அவசியம் தேவை.

ஏதாவது ஆபத்தான சூழ்நிலையில் உதவிக்கு செல்பவர்களுக்கும், காவல்துறையினருக்கும், படை வீரராகச் சேரும் விருப்பம் உள்ளவர் களுக்கும் இது போன்ற இயல்புகள் இருக்க வேண்டும். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை நம்பிக்கையோடு, சிரத்தையாக சக்தி வஞ்சனையின்றி செய்தால் வெற்றி பெற முடியும்.

செயல் புரியும்போது எதிர்ப் படும் துன்பங்களை முன்பே யூகிக்க இயலாது. குழுவாகச் சேர்ந்து தீர்த்த யாத்திரைக்குச் செல்லும் போது வீட்டில் இருக்கும் சௌகரியங்கள் அங்கு கிடைக்காது. மெத்தையில் படுத்தால் ஒழிய எனக்கு தூக்கம் வராது. ஏசி இல்லாவிட்டால் படுக்கமாட்டேன் போன்ற சொற்களை சிலர் சொல்லக் கேட்போம்.

பொறுத்துப் போகும் மனப்பான்மை காரிய சாதனைக்கு மிகவும் முக்கியம். பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டி வரலாம். வெறும் தரையில் உறங்க வேண்டி வரலாம். இப்படிப்பட்ட வாழ்வு முறை பழக்கமாக வேண்டும் என்றால் சிறு வயதிலிருந்தே பயிற்சி தேவை. ஆர்எஸ்எஸ், என்சிசி, என்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பதில் பெயர் பெற்றவை.

தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version