
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: ராஜராஜேஸ்வரி தேவியின் அலங்கார சிறப்பு என்ன? அம்மனின் கையில் கரும்பு எதனால் உள்ளது?
பதில்: ராஜராஜேஸ்வரி என்ற சொல்லில் விசேஷமான சக்தி உள்ளது. லலிதா மஹா திரிபுரசுந்தரி, மகா காமேஸ்வரி, காமாட்சி என்று எந்த ஜகதம்பாளை அழைக்கிறோமோ அந்த தேவியே ராஜராஜேஸ்வரி.
“ராஜராஜேஸ்வரி ராஜ்ய தாயினி ராஜ்ய வல்லபா ராஜத்க்ருபா ராஜபீட நிவேசித நிஜாஸ்ரிதா” என்று படிக்கிறோம்.
ராஜராஜேஸ்வரி என்ற சொல் சம்பூர்ணமான பராசக்தியை குறிக்கிறது.
சர்வ ஜகத்திற்கும் இவள் மகாராணி. எல்லைகளற்ற விஸ்வத்தில் அனேக லோகங்கள் உள்ளன. அந்தந்த லோகங்களுக்கு அவற்றை பரிபாலிக்கும் ராஜாக்கள் உள்ளார்கள். உதாரணத்திற்கு திக்பாலகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லோகம் உள்ளது. கிழக்கு திசைக்கு அதிபதியான இந்திரன் சொர்க்கத்தை பரிபாலிப்பவன்.
அதேபோல் அக்னி லோகத்திற்கு அக்னி, எமலோகத்திற்கு எமன்… இவ்வாறு திக் பாலகர்களுக்கு அவரவர் லோகங்கள் உள்ளன. லோக பாலகர்கள் அனைவரும் நம் பூலோகத்தை ஆட்சி செய்கிறார்கள். இவ்வாறு கூறப்படும் லோகங்கள் சிலவே நமக்குத் தெரியும். நம் சொற்களுக்கு எட்டாத லோகங்கள் எத்தனையோ உள்ளன.
லோக பாலகர்களுக்கு ராஜாக்கள் என்று பெயர். அந்த லோக பாலகர்கள் அனைவரையும் பரிபாலிக்கும் மற்றும் சிலர் உள்ளார்கள். அவர்களை பிரம்மா விஷ்ணு ருத்ரர் என்கிறோம். இவர்கள் ராஜ ராஜாக்கள். ராஜாக்களான லோக பாலகர்களுக்கும் ராஜராஜாக்களான பிரம்மா விஷ்ணு ருத்ரனுக்கும் கூட யார் ஈஸ்வரியோ அவளே ராஜராஜேஸ்வரி.இது ராஜராஜேஸ்வரி என்ற சொல்லின் உட்பொருள்.
அம்பாளின் காருண்யமும் அவளுடைய மிக உயர்ந்த நிலையும் ராஜராஜேஸ்வரி என்ற நாமத்தில் விளங்குகிறது.
இன்னுமொரு உட்பொருளை கவனித்தால், ராஜா என்றால் பிரகாசிப்பவள் என்றும் ஆனந்தத்தை அளிப்பவன் என்றும் பொருள். அவ்வாறு சிருஷ்டியில் பிரகாசித்தபடி ஆனந்தத்தை அளிப்பது எதுவோ அதனையே ராஜா என்ற பெயரால் அழைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு… சூரியன், சந்திரன், அக்னி, ஜோதிர் மண்டலங்கள்… இவையனைத்தும் ராஜாக்கள். ஏனென்றால் ஒளி பொருந்தி உள்ளன. அவற்றால் நமக்கு போஷணை கிடைக்கிறது. அவை நமக்கு ஆனந்தத்தை அளிக்கின்றன.
இவற்றுக்கு பிரகாசத்தை அளிக்கும் தேவதைகள் உள்ளார்கள். அவர்கள் ராஜராஜாக்கள். அவர்கள் அனைவருக்கும் பிரகாசம் அளிக்கும் சுயம்பிரகாச சொரூபிணியே ஜெகதாம்பாள்.
நம் பார்வைக்கு சூரியன் சுயம்பிரகாச ஸ்வரூபன். ஆனால் அந்த சூரியனுக்குக் கூட ஒளியை அளிப்பவள் தேவி. அதனால் நமக்கு ஆனந்தத்தையும் ஒளியையும் அளிக்கும் சுயம் பிரகாசம் எது என்று எண்ணுகிறோமோ அவர்கள் அனைவரும் ராஜராஜாக்கள். அவர்களுக்குக் கூட ஒளியை அளிக்கும் உண்மையான சுயம்பிரகாச ஸ்வரூபம் ஜெகதாம்பாள்.
ஒளிக்கும் ஆனந்தத்திற்கும் மூலப்பொருளாக சர்வ லோகத்தையும் பரிபாலிப்பவளாக இருப்பவள் என்று பொருள்.
கரும்பு வில்லைக் கையில் பிடித்திருப்பதன் உட்பொருள் என்ன என்றால்… கரும்புவில் என்பது மனதுக்கு குறியீடு.
“மனோரூபேக்ஷு கோதண்டா பஞ்ச தன்மாத்ர சாயகா” என்று படிக்கிறோம்.
இந்த உலக விவகாரம் அனைத்தும் மனதோடு தொடர்புடையவை. மனது, சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் என்னும் விஷயங்களோடு அனுபந்தம் ஏற்படுத்திக் கொண்டு தனக்கு பிடித்த விஷயங்கள் மீது விருப்பமும் பிடிக்காத விஷயங்கள் மீது வெறுப்பும் கொண்டிருக்கும்.
அதனால் ராகம், துவேஷம் எனப்படும் விருப்பு, வெறுப்பு இரண்டையும் பாசம், அங்குசம் என்பதாக மேல் இரண்டு கரங்களில் பிடித்துக்கொண்டு, சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் என்னும் பஞ்ச தன்மாத்திரைகளை ஐந்து பாணங்களாகப் பிடித்து, அவற்றை இணைக்கும் மனதை கரும்பு வில்லாகப் பிடித்துள்ளாள்.
இதில் உள்ள உட்பொருள் என்னவென்றால் பிரபஞ்சம் அனைத்தும் இந்த நான்கு கைகளால் நடக்கும் விளையாட்டே! நம் மனம் உலகிலுள்ள சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் இவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது.
அவற்றால் விருப்பும் வெறுப்பும் ஏற்படுகிறது. நம் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. இப்படிப்பட்ட இந்த நான்கால் ஆன நம் வாழ்க்கை எந்த சைதன்யத்தின் கரங்களில் உள்ளதோ அந்த சைதன்யமே ஜெகதாம்பாள். சைதன்ய ஸ்வரூபிணி அவளே என்பதை உணர்த்துவதற்காக இந்த நான்கையும் தரித்துள்ளாள்.
கரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும். அதற்காகத்தான் இந்த விளக்கம்.