நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?
பதில்: சாதாரணமாக இறைவழிபாட்டிற்கு என்ன நியமங்கள் இருக்க வேண்டுமோ அவை அம்பிகையின் வழிபாட்டிற்கும் தேவை. முக்கியமாக தெய்வ வழிபாட்டிற்கு தேவையானது சதாசாரம். நல்ல நடத்தை இருப்பவரே பூஜை செய்ய அருகதை உடையவர்.
பரம்பரையாக குடும்ப சம்பிரதாயப்படி எந்த நல்ல ஆசாரங்கள் கூறப்பட்டனவோ அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். லலிதா சஹஸ்ரநாமத்தில் ‘சதாசார ப்ரவர்த்திகா’ என்று படிக்கிறோம்.
பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழுந்து, குளித்து, சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானங்கள், நித்திய, நைமித்திக செயல்களைப் புரிவது, தேவ, பித்ரு ஆராதனைகள் போன்றவற்றை செய்பவருக்கே அம்பிகையை வழிபட தகுதி உண்டு.
பித்ரு தேவதையின் வழிபாடுகளைச் செய்யாதவர்களும் பாரம்பரியமாக வரக்கூடிய வழிபாடுகளை செய்யாதவர்களும் அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமாக மாட்டார்கள். அது மட்டுமன்று. நல்ல குணங்கள் இருப்பது முக்கியமான தகுதி.
லலிதா சகஸ்ரநாமத்தில் ‘மைத்ர்யாதி வாசனாலப்யா’ என்கிறோம். மைத்ரி, முதித, கருணை, உபேக்ஷை என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும்.
அதாவது நம்மோடு சமமானவர்களோடு நட்பு, நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்த்து மகிழ்ச்சி, நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் மீது கருணை, நம்மை வெறுப்பவர் களிடம் உபேக்ஷை அதாவது உதாசீனம் இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர யார் மீதும் விபரீத எண்ணங்கள் கொண்டிருக்கக் கூடாது.
அதோடு ‘தர்மாதாரா தனாத்யக்ஷா’ என்று கூறியுள்ளதுபோல், தர்மத்தோடு கூடிய வாழ்க்கை வாழவேண்டும். ‘பாவனா கம்யா’ அம்பிகையை நினைத்து வாழ வேண்டும். இவை நியமங்கள்.
பிரத்தியேகமாக சக்தி ஆராதனை செய்பவர்களுக்கு பெண்களிடம் காமப் பார்வை இருக்கக்கூடாது. பெண்களை ஜகன்மாதா என்ற எண்ணத்தோடு, ஜகன்மாதாவின் களையோடு விளங்குகிறாள் என்று பார்வையோடு நோக்க வேண்டும். இது அம்பிகை வழிபாட்டில் மிக முக்கியமான நியமம்.
அதுமட்டுமின்றி பெண்களை எந்த விதமாகவும் துன்புறுத்தக் கூடாது. தாழ்வாக பார்க்கக்கூடாது.
‘சுவாசின்யர்ச்சன ப்ரீதா’ என்று கூறியுள்ளது போல் ‘குமாரி’ யாக இருக்கும் போதிலிருந்து முதுமை நிலை வரை பெண்களை பல வடிவங்களில் இந்த ஒன்பது நாட்களும் வழிபடுகிறோம்.
பெண்களிடமே அம்பிகையின் களை இருக்கும் என்பதால் பெண்ணை ஜகன்மாதா என்ற எண்ணத்தோடு பார்ப்பதென்பது முக்கியமான ‘சாக்தேய’ நியமம்.
அதனால் அம்பிகை உபாசகர்கள் ஸ்த்ரீயை மாத்ரு திருஷ்டியோடு பார்க்க வேண்டுமென்பது பிரதானமான நியமம். இந்த நியமங்களைக் கடைபிடித்து அம்பிகையை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.