Home இலக்கியம் கட்டுரைகள் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு!

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு!

kriya-ramakrishnan-ksr
kriya ramakrishnan ksr

இன்று அதிகாலை 5 மணிக்கு நண்பர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவருடைய பதிப்பகம் ராயப்பேட்டை ஸ்வாகத் ஓட்டல் அருகே உள்ள மாடியில் இருந்தபோது. அதாவது 1980லிருந்து நட்புடனும் அன்புடனும் நண்பர் திலீப் குமாருடன் அங்கு இயங்கினார்.

நேற்று தான் மூன்றாவது பதிப்பு அகராதி கிடைக்கப் பெற்றேன். இன்று அவர் மறைவு. உ.வே.சா போல் தனது பதிப்பு பணியில் திறம்பட இயங்கினார். தமிழகத்திற்கு அவர் அளித்த இலக்கிய படைப்பு  பணிகள் ஏராளம். நல்லவர்களுக்கு எல்லாத் தளத்திலும் இப்படி சோதனை வருகிறது என்ன சொல்ல. நல்லது செய்தால் நல்லது வரும் என்றால் அந்த கணக்கு தப்புதே. யாரே யாரே, அயோக்கியர்களை உச்சத்தில் வைத்து மக்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். ராமகிருஷ்ணன் போன்ற அமைதியான ஆளுமைகளை நாம் சரியாக கொண்டாடவில்லை. இந்தநிலையில் ஆழ்ந்த இரங்கல் தான் சொல்ல முடியும். 

தொற்று நோயிலும் அகராதிகள் தொகுக்கும் பணிகளை செய்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். தொற்று அவரை படாதபாடு படுத்தியிருக்கிறது. நல்ல நண்பர் எப்போதும் அழைத்துப் பேசுவார். அவரின் இறப்பு செய்தியைக் கேட்டவுடன் வெறுமையாக ஆனேன்.

தினமணியில் வெளிவந்த என்னுடைய 500க்கு மேலான கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட வேண்டும் என்று விரும்பினார்..என் வாழ்வில் அது ஒரு நல்ல அங்கீகாரம் என்று நினைத்தேன்.அது நிறைவேறாமல் போனது வருத்தமளிக்கிறது.

க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.காம்யுவின் ‘ அன்னியன்’, சார்த்தரின் ‘ மீள முடியுமா?’, ழாக் ப்ரவரின் ‘ சொற்கள்’ என எத்தனை படைப்புகள் தமிழ் வாசகனுக்குள் புதிய பரிமாணத்தைஉண்டாக்கின. ஐராவதம் மகாதேவன்,சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். அசோகமித்திரன்,  ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களை செம்மையாக பதிப்பித்த வரலாறு க்ரியாவுக்கு உண்டு. ஒரு படைப்பை செம்மைப்படுத்தி மேம்படுத்துவதில் கடும் உழைப்பையும் கவனத்தையும் அவர் மேற்கொண்டார்

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்கொடை! 

 20-1-2019 – சென்னை புத்தகக் கண்காட்சியின்  கடைசி நாள்.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களைச்  சந்தித்து  பல விஷயங்களைப்  பேச  வாய்ப்புக்  கிடைத்தது. ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேஸ்  ஆங்கிலபுத்தகத்தை  தமிழில் பதிப்பித்துள்ளதாகக்  கூறி  என்னிடம்  வழங்கினார்.

க்ரியா  தமிழ்  அகராதி   2020ல் அடுத்த பதிப்பை புதுப் பொலிவுடன்  கொண்டு வர இருக்கிறோம் என்றார்.  பதிப்புப் பணிக்கான  நபர்கள்  கிடைப்பதில்  உள்ள  சிரமங்களையும்  மிகுந்த  ஆதங்கத்துடன்  எடுத்துரைத்தார்.  ராமகிருஷ்ணனின் தனி மனித  நிர்வாக உழைப்பிலேயே  க்ரியா  தமிழ்  அகராதியை  கொண்டு  வந்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்க  விசயமாகும்.

ஜனவரி 1992 இதன் முதல் பதிப்பு(அன்றைய விலை ரூ200/) வந்தவுடன் வாங்கி பொங்கல் பரிசாக  ஈழத்தில் இருந்த அன்பு சகா #பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் இது அற்புதமான பணி. க்ரியா பதிப்பகத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார் 

க்ரியா  தமிழ்  அகராதி தமிழ்க்கு கிடைத்த அரிய அருட்க்கொடை!

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version