Home அடடே... அப்படியா? தனிமைக்கு இனிமை சேர்க்கும் டெலிகிராஸ் சேவை!

தனிமைக்கு இனிமை சேர்க்கும் டெலிகிராஸ் சேவை!

telecross-service
telecross-service

தனிமைக்கு இனிமை சேர்க்கும் டெலிகிராஸ் சேவை!
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத் –

தனிமைக்கு  இதமான தொலைபேசித் தொண்டு : டெலி கிராஸ் சர்வீஸ்:-

இந்த நவீன உலகத்தில் மக்களை ஒருவரோடொருவர் இணைக்க  எத்தனையோ தகவல் தொலைத் தொடர்பு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் தம் குடும்பத்திலிருந்தும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தன் சமூகத்திலிருந்தும் தொடர்பற்றவர்களாகவே காணப்படுகிறார்கள்.  

இந்த (Social Isolation)  சமுதாயத் தொடர்பின்னை எனப்படும் தனிமையால் ஆண், பெண், ஏழை, பணக்காரர், வேலையில் உள்ளவர், வேலையில்லாதவர், போன்ற வேறுபாடுகளோ,  ஜாதி,  இன, சமூக, கலாசார வேறுபாடுகளோ இன்றி அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு, நவீன யுகம் நமக்களித்துள்ள சாபக்கேடு என்றே தோன்றுகிறது.

தனிமையை விரும்பி வாழும் வயதானவர்கள் மற்றும் தனிமையில் தள்ளப்பட்ட வயதானவர்கள், நடமாட இயலாமல் வீட்டில் முடங்கி வாழும் நிலையில் உள்ளவர்கள் – இது போன்றோருக்கு உதவும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்  ஒரு செயல்முறைத்  திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இதன் மூலம் தனிமையில் வாழும் வயதானவர் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள்,  சமுதாயத் தொடர்பு (Social Connectedness)  பெறுவதை உணர்வதால் அவர்களுடைய மன நலமும் வாழ்க்கை தரமும் உயர வழி பிறக்கிறது.


Network of Volunteers:- ரெட் கிராஸ்  அமைப்பு, தன்னார்வுத் தொண்டர்கள் குழுவின் உதவியோடு தனித்து வாழ்பவர்களுக்கு வெளி உலகத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அன்பான ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் மூலம் அவர்களின் தனிமையை போக்கி ஊக்கமளிக்கிறார்கள்.

Telecross Service:- டெலிக்ராஸ் எனப்படும் இந்த சேவை, தினமும் ஒரு முறை  தொலைபேசித்  தொடர்பு மூலம் வயதான மற்றும் வீட்டில் முடங்கியுள்ளவர்களின்  உடல் மற்றும் மன நலத்தின் பாதுகாப்பை அறிந்து உதவுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த டெலிக்ராஸ் சர்வீஸ் நாற்பதாண்டு கால சேவையை தற்போது கொண்டாடி வருகிறது.

டெலிக்ராஸ் வாலண்டீர்கள் பயிற்சியளிக்கப்பட்டு தேர்ந் தெடுக்கப் படுகிறார்கள். வாலண்டீர்கள் அனுதினமும் அந்த வயதானவர்களுக்கு அனுகூலமான நேரத்தில் தொலைபேசியில்  பேசி அவர்களின் பாதுகாப்பையும்  ஆரோக்யத்தையும் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

telecross-aus

டெலிபோன் அழைப்பு பதிலளிக்கப்படா விட்டால் (if goes unanswered), மீண்டும் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளப் படுகிறார்கள். அப்படியும் பதில் பெற இயலாவிட்டால், முன்பே ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கும் அவசர கால நடவடிக்கை (எமர்ஜென்சி ப்ரோசீஜர்) மூலம் உடனடி உதவி வழங்கப்படுகிறது.

இத்தகைய உடனடி கவனிப்பு மூலம் பல வயதானவர்களை காப்பாற்ற முடிந்திருப்பதாக டெலி கிராஸ் சேவை நிறுவனம் தெரிவிகிறது.  குளியலறையில் வழுக்கி விழுந்தவர்கள், மயக்கமடைந்தவர்கள்,  சில சமயம் தூக்கத்திலேயே இறந்தவர்களைக் கூட தாம் கண்டு,  தகுந்த நடவடிக்கை எடுக்க  உதவியதாக தன்னார்வுத் தொண்டர்கள்  மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய தொண்டில் தாம் ஈடுபட்டிருப்பது தமக்குப் பெருமையாக இருப்பதாகவும், அன்றாட வேலை பளுவிலிருந்து ஒரு மாறுதலை அளிப்பதாகவும் சீனியர் சிடிசனுக்கு உதவியளிப்பது தேசத் தொண்டின் ஒரு பகுதி என்ற பொறுப்பினை உணர்த்துவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 

இதன் மூலம் தனிமையில்  வாழும் அல்லது வாடும் வாடிக்கை யாளர்களுக்கும்,  அவர்களைப் பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கும் மன அமைதி கிடைக்கிறது.  இதனால், தனித்து வாழ்ந்து பழகிவிட்ட வயதானவர்கள் மற்றும் நடமாட இயலாதவர்கள்,  முடிந்தவரை தங்கள் சுதந்திரத்தை  இழக்காமல் தனித்து வாழ வழி கிடைக்கிறது. இத்தகைய அத்தியாவசியமான மற்றும் நம்பகமான சேவையைப் பெற்றுப் பயனடையும் வயதானவர்கள், முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் நிலையிலிருந்து தவிர்க்கப்படுகிறார்கள்.

telecross

தாங்களே விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த தனிமை, காலப் போக்கில் பல வயதானவர்களுக்கு ஒரு வெறுமையை ஏற்படுத்தி விடுகிறது. ஆனாலும் வேறு வழியின்றி வீம்பாக பலர் தம் பெரிய மாளிகையிலோ அல்லது ஒற்றை அறையிலோ வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அத்தகையோருக்கு  தோழமையோடு கூடிய தொலை பேசி அழைப்பு ஆறுதலளிப்பதில் ஆச்சர்ய மில்லை. உண்மையைக் கூறவேண்டுமென்றால், அந்த அழைப்புக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

டெலிக்ராஸ் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்றாலும் உடல் உபாதையால் நடமாட இயலாத இளைஞர்களும் இதில் அடங்குவர்.  இந்த டெலிக்ராஸ் சேவையை  தார்காலிகமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் சில நாட்கள் ஓய்வில் தனியாக வீட்டில் இருப்பவர்களோ  அல்லது கேர் டேக்கர் எனப்படும் சம்பளம் பெறும் உதவியாளர் விடுப்பில் சென்ற போதோ கூட டெலிக்ராஸ் வாலெண்டீர்களின் அழைப்பின் உதவியை பெற்று பயனடையலாம்.  

இதனை பெற விரும்புபவர்கள் தாங்களாகவோ அல்லது உறவினர், நண்பர், மருத்துவர் மூலமாகவோ டெலிக்ராசை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளளலாம்.  

டெலிக்ராஸ் வாலண்டீர்கள் பயிற்சிக்கு மனு செய்த பின் அவர்களுடைய உண்மையான முகவரியை, காவல்துறை சோதனை மூலம் டெலிக்ராஸ் உறுதி செய்து கொள்கிறது. தரமான வாலண்டீர்களையே ஏற்றுக் கொள்கிறது.  இவர்கள் தினமும் தாங்கள் வேலைக்குக் கிளம்பும் முன்போ அல்லது வாடிக்கையாளர்கள் குறுப்பிட்ட நேரத்திலோ ஒரு சிறிய தொலைபேசித் தொடர்பு மூலம் அவர்களுடன் நட்பாகப் பேச வேண்டும். இவர்கள் தங்கள் உண்மையான பெயரையோ முகவரியையோ தனிமையில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கத் தேவையில்லை.

தனிப்பட்ட (personal)  விஷயங்களைக் கூட பகிர்ந்து கொள்ள அனுமதி இல்லை. ஏனெனில் சில சமயங்களில் தனிமையில் சிக்கியுள்ள சில வயதானவர்கள், வாலண்டீர்களின் தொலைபேசி அன்பால் கவரப்பட்டு, காரை எடுத்துக் கொண்டு  வீடு  தேடி  வந்து  அன்புத்  தொல்லைக்கு  ஆளாக்கும்  அபாயம்  உள்ளது.   பொதுவான வார்த்தைப் பரிமாற்றம், (Exchange of few words),  மற்றும் இன்று ‘வானிலை எப்படி இருக்கிறது?’ என்பது போன்ற சில சொற்களுடன் தங்கள் உரையாடலை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.

TeleCHAT:- டெலிசாட் என்ற மற்றொரு சர்வீசையும் செஞ்சிலுவைச் சங்கம்  அமைத்துக் கொடுக்கிறது. இதன் மூலம் வாரம் ஒருமுறை, அதிகம் வெளி உலகோடு தொடர்பின்றி வாழும் மக்களை அழைத்து உரையாடுகிறார்கள் டெலிசாட் வாலண்டீர்கள். அதற்குத் தோதாக வாடிக்கையாளர்களின் விருப்பம், பொழுது போக்கு, மற்றும் தொடர்பு கொள்ளும் தன்மை இவற்றுக்கு பொருத்தமான தன்னார்வு தொண்டர்களை தேர்ந்தெடுத்து அளிக்கிறார்கள்.  வாரம் ஒரு முறை சுமார் பதினைந்து நிமிடங்கள் ஒருவருக்கொருவர் பொறுமையாக பேசி கேட்டுக் கொள்வதால் தனிமையில் வாழ்பவர்கள் தாங்களும் சமூகத்தில் ஒரு அங்கமே என்றும் தாமும் உலகத்திற்கு ஒரு பொருட்டுதான் என்றும் உணர்ந்து மன அமைதி பெறுகிறார்கள்.  தொடர்ந்து, ரெகுலராக ஒரே வாலண்டீருடன் பேசும்போது, தோழமை, அன்பு, நட்பு போன்றவற்றை பெற்று அத்தனிமை இதயம் பேரின்பம் கொள்கிறது.

இவ்விரண்டு சேவைகளையும்  இது போன்ற மேலும் பல தொண்டுகளையும்  இலவசமாக அளிக்கிறது செஞ்சிலுவை.

சுதந்திரமாக வாழ்ந்து பழகிய வயதானவர்கள் தனிமையாக மிகக் குறுகிய சமுதாய இணைப்போடு வாழ நேர்கையில் இத்தகைய இதமான வார்த்தைகள் அளிக்கும் ஆறுதல் அபாரம்!!  (மேலிருந்து அழைப்பு வரும்வரை இந்த தாற்காலிக அழைப்பு தரும் ஆனந்தம் அலாதிதான்!!!)

தொழில் நுட்பம் வளர வளர  அவசர யுகத்தில் வாழும் மக்கள், தனிமையை உணர்வது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அதே தொழில் நுட்பத்தின் உதவியோடு, அவர்களுக்கு ஆறுதலளித்து ஒன்று சேர்க்க முடியும் என்பதை பல்லாண்டுகளாக சேவைப் பணி புரிந்து வரும் செஞ்சிலுவை சங்கம் நிரூபித்துள்ளது.  கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாயமாய் மறைந்து போன இக்காலக் கட்டத்தில், இத்தகைய சேவை வயதானவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.   ஆஸ்திரேலியாவில்  மக அதிக அளவில் பயன்பெறப்படும் இச்சேவை அனைத்து நாடுகளுக்கும் விரைவில் பரவிப் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய சிறப்பு பெற்ற டெலி கிராஸ்  அமைப்பின் தாய்மை அமைப்பான செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) தோன்றிய விதம் மிகவும் சுவையானதும் உருக்கமானதுமாகும். அதனைப் பற்றி சிறிது பார்ப்போம்:-

aus-red-cross

Red Cross: – செஞ்சிலுவை சங்கம்;- 1859 ல் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Jean-Henri Dunant என்பவர் தன் வியாபாரத்தை அல்ஜீரியாவில் விரிவுபடுத்த எண்ணி, பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனை சந்திக்க விரும்பினார். 1830 முதல் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா, பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.  ஆனால் அச்சமயத்தில் ஸால்பெரினோ (Solferino) என்ற இடத்தில் ஆஸ்திரியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் நெப்போலியன் பங்கு கொண்டிருண்டிருந்தார்.  அவரைத் தேடி அங்கு சென்ற ஹென்றி டுனான்ட் (Dunant)  போர்க்களத்தில் தான் கண்ட காட்சிகளால் மனமுடைந்து போனார். 

1828, மே மாதம் 8 ம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் பிறந்த டுனான்ட், சிறு வயது முதலே பெற்றோர்களால் பொதுச் சேவையிலும் தான தர்மத்திலும் விருப்பமுடையவராக வளர்க்கப் பட்டிருந்தார். ஆஸ்ட்ரோ-சார்டினியன் யுத்தம் ( ‘Austro-Sardinian War’) என்றழைக்கப்பட்ட Battle of Solferino வில் யுத்தத்திற்குப் பின் அங்கு கிடந்த இறந்தவர்களையும், காயமுற்றவர்களையும்  கண்டு கண் கலங்கினார், டுனான்ட்.  இரு தரப்பிலுமாக சுமார் நாற்பதாயிரம்  பேர் அங்கு கை கால் முறிந்து அடிபட்டு கிடந்தனர். அவர்கள் எல்லாரும் ஈவிரக்கமின்றி இழுத்து வரப் பட்டு அருகிலிருந்த தேவாலயத்தில் போடப்பட்டனர்.  மருத்துவ உதவி இன்றி அவர்கள் துடித்து கதறிய காட்சி டுனாண்டின்  இதயத்தைப் பிழிந்தது.  

ஸால்பெரினோ  போர்க்களத்தின்  அருகிலிருந்த கிராம மக்களை ஒன்று  திரட்டி, தன்னால் இயன்ற வரை கைக்காசை செலவு செய்து அவர்களுக்கு சிகிச்சை செய்ய முயன்றார்.  தீவிரமாக முயன்று பிரஞ்சு படையால் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த ஆஸ்திரியாவின் டாக்டர்களை விடுவித்தார்.

தன் ஊருக்குத்  திரும்பிய பின்னும் அப்போர்க்கள காட்சி அவர் மனதை விட்டு அகலவில்லை. 1862 ல் “A Memory of Solferino” – ‘ஸால்பெரினோ போரின் நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதி 1600 காப்பிகள் அச்சடித்து தன் சொந்த செலவில் அதனை ஐரோப்பாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.  அப்புத்தகத்தில் 1859 ல் தான் பார்க்க நேர்ந்த உருக்கமான  நிகழ்சிகளை விரிவாக விளக்கியதோடல்லாமல், போரில் காயமடைந்தோருக்கு, அவர் எப்பிரிவைச் சேர்ந்தவராக இருப்பினும் முதலுதவி செய்வதற்கான ஒரு தன்னார்வு தொண்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார். அதோடு கூட,  போர்க்களத்தில் அத்தகைய மருத்துவ உதவிக் குழுவினருக்கும், அவர்களுடைய போர்க்கள மருத்துவ முகாமுக்கும்  அகில உலகத் தலைவர்கள் பாதுகாப்பிற்கு உத்தவராதம் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  மேலும் தானே நேரில் பயணித்து பல தலைவர்களை சந்தித்து தன் கருத்துகளுக்கு ஆதரவு தேடினார்.  தலைவர்களிடையே  இப்புத்தகம் மிகுந்த பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றது.

1863, பிப்  9 அன்று ஜெனீவாவில் ‘Committee of Five’ என்ற ஐவர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதில் டுனாண்டைத்  தவிர  மேலும் நான்கு பேர் உறுப்பினர்களாக சேந்தனார்.  “இத்தகைய மருத்துவ உதவி போர்க்களத்தில் சாத்தியமா?”  என்பது பற்றி ஆராய்ந்து அதனை செயல்படுத்த இக்கமிட்டியின் தலைவர்கள் முன்வந்தனர்.  எட்டு நாட்கள் கழித்து இதன் பெயரை இவர்கள், “International Committee for Relief to the Wounded” என்று பெயரிட்டனர்.  1876 ல் இதன் பெயர் “இன்டர்நேஷனல் கமிட்டி ஆப் ரெட் கிராஸ்” – “International Committee of Red Cross (ICRC) என்று மாற்றப்பட்டது.

தொடர்ந்து இவ்வமைப்புக்கு ஆதரவு தேடுவதில் ஈடுபட்ட டுனான்ட்,  தன் சொந்த வியாபாரத்தை கவனிக்க நேரமின்றி திவாலாகிப் போனார். இவருடன் சேர்ந்து ஐவர் குழுவில் அங்கத்தினராக இருந்த  ஒரு வழக்கறிஞர், டுனாண்டை 

இவ்வமைப்பிலிருந்து விலக்கி விட்டு தானே அதன் தலைவராக அறிவித்துக் கொண்டார். அப்போது முதல் டுனான்ட், ஜெனீவாவை  விட்டு நீங்கி, பாரிசில் உள்ள ஒரு சிறு ஊரில் வறுமையிலும் நோயிலும் வசிக்கலானார்.  பின்னாளில் ஒரு பத்திரிக்கையாளர் இவரை அடையாளம் கண்டு இவரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை மூலம் மீண்டும் இவர் பெருமையை உலகம் உணர்ந்தது.  அதன் பின்  1901 ல் அமைதிக்கான முதல் நோபல் பரிசு, டுனான்ட்டுக்கும், பிரான்சைச் சேர்ந்த அகிம்சாவாதியான பிரெடெரிக் பாசி என்பவருக்கும் இணைந்து  வழங்கப்பட்டது. மீண்டும் டுனான்ட்  ஜெனீவா கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  ஆனால் அதன் பின் ஒன்பது ஆண்டுகளே உயிர் வாழ்ந்த டுனான்ட், 1910, அக்டோபர்  30 ல் தன் 82 ஆம் வயதில் காலமானார்.  ஹென்றி டுனான்ட்,  தான் பெற்ற நோபல் பரிசின் தொகையை ஏழைகளுக்கான மருத்துவ மனையில் படுக்கைகள் வாங்குவதற்கும், ஏற்கெனவே வியாபாரத்தில் தான் அடைந்த கடனை அடைக்கவும் செலவழித்தார்.  

ராணுவத்திற்கு  மட்டுமின்றி கடற்படைக்கும் தங்கள் சேவையை விரித்த செஞ்சிலுவை சங்கத்தில் ஆரம்பத்ததில் 36 நாடுகளே அங்கத்தினர்களாக இருந்தனர். ஆனால் இவ்வமைப்பு, தற்போது உலகளாவிய தன்னார்வு தொண்டமைப்பாக விரிந்து பரந்துள்ளது.   தங்கள் சேவை எங்கு தேவையோ அங்கு தங்கு தடையின்றி சென்று உழைக்கும் தன்னார்வுத் தொண்டர்களுக்கு நன்றி கூறும் நாளாக அகில உலக ரெட் க்ராஸ் நாள்,  டுனாண்டின்  பிறந்த நாளான மே 8 தேதியன்று  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

மிகப் பெரிய செயல்கள் மிகச் சிறிய தீப் பொறியால்தான் உருவாக்கப்படுகின்றன.  அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் அபாரம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version