May 14, 2021, 7:23 pm Friday
More

  கார்த்திகை மாத வன போஜனமும், மகாதேவ அஷ்டமியும்!

  இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து மகிழ்வார்கள். வன தேவதைகளை வணங்கி நடத்தப்படும் பூஜை இது.

  vaikkam-mahadevashtami
  vaikkam-mahadevashtami

  கட்டுரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
  (ஆசிரியர், கலைமகள் மாத இதழ்)

  வன போஜனம் என்னும் நிகழ்வு நெல்லை மாவட்ட கிராமங்களில் கார்த்திகை மாதம் ஏதாவது ஓர் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுவது உண்டு. இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து மகிழ்வார்கள். வன தேவதைகளை வணங்கி நடத்தப்படும் பூஜை இது.

  சில கோவில்களில் துளசி மற்றும் வில்வ மரத்திற்கும் பூஜைகள் நடைபெறுவது உண்டு. திருப்பதியிலும் வேங்கடேசப் பெருமான் இப்பூஜையைக் காணுகிறார்.

  சென்னை மயிலாப்பூரில் மந்தைவெளியில் வனபோஜன மண்டபம் கபாலீஸ்வரர் கோவிலுக்காக இருந்ததுண்டு. இப்போது இந்த மண்டபம் ராமகிருஷ்ணா மடம் அருகில் கோவில் நிர்வாகத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இந்த மண்டபத்தில் கபாலியும் கற்பகவல்லி யும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். சித்ரான்னங்கள் படைத்து பக்தர்களுக்குப் பிரசாதமும் வழங்கப்படும்.

  தொண்டைமண்டலத்திலும் வன போஜனம் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆழ்வார்கள் திருநட்சத்திரத்தை ஒட்டியும், ஸ்ரீ ராமானுஜர் திரு நட்சத்திரத்தை ஒட்டியும் இந்த வைபவம் நடைபெறுவதுண்டு. காடுகள் காக்கப்பட்டால் தான் மழைப்பொழிவு ஏற்பட்டு மக்கள் சுபிட்சம் அடைவார்கள் என்ற உயரிய நோக்கில் கொண்டாடப்படும் விழா இது.

  ஆதிசங்கரர் ஏழை ஒருவருக்கு நெல்லிக்கனி வழங்கி சொர்ண மழை அருளியதை அறிவோம். வில்வம் சிவபெருமானுக்கு ஏற்ற தாகும். வில்வம் லக்ஷ்மி தாயாருக்கும் உகந்ததாகும். வில்வ மூலம் பூஜை செய்து முக்தி டைந்தவர்களையும் அறிவோம்.

  அதேபோன்று துலாபாரத் தட்டில் துளசியை வைத்து ருக்மணி செய்த அற்புதத்தையும் அறிவோம். எனவேதான் கார்த்திகை ஞாயிறன்று வில்வம், துளசி, நெல்லி ஆகிய விருட்ஷங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு ஊரில் உள்ளோருக்கு பொது போஜனம் வழங்குகிறார்கள்.ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாள். சூரிய ஒளியில்தான் விருட்ஷங்கள் தழைக்க முடியும். எனவேதான் இந்த நாளைத் தேர்வு செய்தார்கள்.

  vaikkam mahadevartemple
  vaikkam mahadevartemple

  கீழாம்பூர் வடக்குத்தெரு விநாயகர் கோவிலில் இந் நிகழ்வை நான் பார்த்து இருப்பதோடு ஊர் மக்கள் கூடி தயார் செய்யும் போஜன விருந்திலும் கலந்து கொண்டிருக்கிறேன்.வன போஜனம் போன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில், மகாதேவா அஷ்டமி சிவன் கோவில்களிலும் பிள்ளையார் கோவில் களிலும் நடைபெறுவதுண்டு.

  அஷ்டமி நாட்களில் பைரவருக்கும் பூஜைகள் நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மிகச் சிறப்பான முறையில் பைரவருக்கு நடத்தப் படுவதுண்டு. காக்கும் கடவுளாய் தண்ணீர் தேவதையாய் பைரவர் பாராட்டப்படுகிறார். பைரவருக்கு நைவேத்தியங்கள் படைத்து உண்ணுகிற வழக்கம் ஆதி நாள் தொட்டு இருந்து வருகிறது.

  எனது நண்பர் ஆட்சி லிங்கம் அவர்கள் இவ்வாண்டு அச்சரப்பாக்கத்தில் மகாதேவாஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் செய்து பொது போஜனம் வைபவத்தை நடத்துகிறார் .

  8-12-2020 அன்று இவ்வாண்டு மகாதேவா அஷ்டமி வருகிறது. இந்நாளை கால பைரவாஷ்டமி என்றும் அழைப்பார்கள். சிவபெருமானை எண்ணி கீழாம்பூர் தெற்குத் தெரு பெருமாள் கோவிலில் அஷ்டமித் திருவிழா நடந்ததுண்டு!

  வைணவ தலத்தில் சிவ வழிபாடு எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் நடைபெறுவது சிறப்பாகும். டீலர் சுப்பையா ஐயர் அவர்களும், கல்யாண சுந்தரம் ஐயர் அவர்களும் பால் பாயாசத்தை மிகப் பிரமாதமாக தெற்குத் தெரு பெருமாள் கோவில் வளாகத்திற்கு உள்ளே தயார் செய்யும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

  சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நான் பார்த்து ரசித்திருக்கிறேன். எனது சித்தப்பா அய்யாசாமி முன்னின்று இந்நிகழ்வுகளை நடத்துவார்.ஊரிலுள்ள பெரியவர்கள் பெண்மணிகள் காய்கறிகளை நறுக்கி உணவு சமைப்பார்கள். தெருவே சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் விழாவாக இது இருந்தது.

  அதேபோன்று கீழாம்பூர் வடக்கு தெருவிலும் பெருமாள் கோவிலில் அஷ்டமி வைபவம் நடைபெறுவதுண்டு. ஒரு வீட்டில் அவியல், ஒரு வீட்டில் சாம்பார், ஒரு வீட்டில் ரசம் இப்படி பதார்த்தங்கள் செய்து பொதுவில் அன்னம் வைத்து இறைவனுக்கு நேவேத்தியம் செய்து பின்னர் தெரு போஜனம் நடைபெறுவதுண்டு!

  கேரளாவில் உள்ள வைக்கம் சிவன் கோவிலில் மகா தேவாஷ்டமி மிக சிறப்பாக நடைபெறும்.கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் புலிக்கால் முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்தார். வியாக்ர பாதர் மேடை வைக்கம் சிவன் கோவில் தென்கிழக்கு மூலையில் உள்ளது. இங்குதான் புலிக்கால் முனிவர் என்கிற வியாக்ர பாதருக்கு சிவபெருமான் காட்சி தந்தார் என்பதால் இவ்விடத்திலேயே இன்றும் திருவிழா நடைபெற்று பக்தர்களுக்கு உணவு படைக்கப்படுகிறது. உணவு உண்டபின் அந்த இலையை எடுக்காமல் அதன்மேல் படுத்து பிரதட்சிணம் செய்யும் சில பக்தர்கள் உண்டு.

  வயிற்றுவலி நீங்குவதற்காக இப்படிப்பட்ட பிரார்த்தனைகள் இருந்ததாக அறியப்படுகிறது. சிவனைப் போன்று சிவனடியார்களுக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்த்தவே நம்முடைய உடலை சாப்பிட்ட இலை மீது கடத்தி வழிபாடு செய்கிறோம். ஆணவம் அகன்று போகிறது.

  கரன் என்ற சிவபக்தன் மூன்று லிங்கங்களை கொணர்ந்தான். அவன் வலது கையால் எடுத்து வந்த லிங்கம் தான் வைக்கத்தில் உள்ள சிவபெருமான். இந்த லிங்கத்தை வியாக்ரபாதர் பூஜை பண்ணி வந்தார்.பரசுராமன் வான் வழியாக வரும் பொழுது வைக்கத்தில் உள்ள லிங்கம் நாவல் பழம் நிறத்தில் காட்சியளித்தது. இந்த லிங்கத்தை பரசுராமர் வணங்கி இரண்டு அடி பீடமும் நாலடி லிங்க வடிவமும் ஏற்படுத்தி வழிபட்டார் என்று பார்க்கவ புராணம் கூறுகிறது.

  கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் வன போஜனமும் ஊர் ஒற்றுமைக்காகவும் விருட்சங்களை காக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையிலும் கொண்டாட படுபவை.

  இன்று கார்த்திகை ஞாயிறு எங்கள் கீழாம்பூர் கிராமத்தில் வன போஜனம் வைபவம் நடைபெறுகிறது.என் இனிய நண்பர்கள் திரு பி எஸ் குமார் அவர்களும் மற்றும் பத்து என்கிற பத்மநாபன் அவர்களும் இதற்கான ஏற்பாடுகளை முனைந்து செய்துள்ளார்கள். வைக்கம் வடக்குநாதரைத்தான் மேலே படத்தில் தரிசிக்கிறீர்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,187FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-