ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை… பாடலும் விளக்கமும்
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். (28)
பொருள்
நாங்கள் ஆயர் குலத்தவர்கள். மாடுகளை மேயவிட்டபடி ஆங்காங்கே உட்கார்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். எங்களுக்குப் படிப்பறிவெல்லாம் கிடையாது. ஆனாலும், முழுமைப்பொருளான கோவிந்தா, நீயே எங்கள் மத்தியில் மாடு மேய்ப்பவனாகப் பிறக்கும் அளவு நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். நாங்கள் அறிவு இல்லாதவர்கள், அப்பாவிச் சிறுவர்கள். உன்னை முறைப்படி எவ்வாறு வழிபடுவது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் பரிசுத்தமான அன்பினால் நாங்கள் உன்னை எந்தப் பெயரிட்டு எந்த விதத்தில் அழைத்தாலும், அதில் உள்ள அன்பை மட்டும் ஏற்றுக்கொள், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாதே. உனக்கும் எங்களுக்கும் உள்ள இந்த உறவு எங்களது எல்லாப் பிறவிகளிலும் தொடர வேண்டும். இந்த வரத்தை எங்களுக்கு அருள்வாயாக.
அருஞ்சொற்பொருள்
கறவை – மாடு
கானம் – கானகம்
கானம் சேர்ந்து – காட்டை அடைந்து
அறிவொன்றும் இல்லாத – சாஸ்திர அறிவு இல்லாத
குறை ஒன்றும் இல்லாத – குறைகள், பாவங்கள், அசுத்தம் எதுவும் இல்லாத தூயவன்
உறவேல் – உறவு (அடிபணிந்து சேவை செய்யும் நிலை)
ஒழிக்க ஒழியாது – எந்தப் பிறவியிலும் மாறாமல் தொடர்வது, சாசுவதமானது
சிறுபேர் – மரியாதையின்றி அழைப்பது
குறையொன்றும் இல்லாத கோவிந்தன் –
இயல்புக்கு விரோதமானது குறை. மாயையால் மூடப்பட்ட ஜீவாத்மா தனது இயல்பை அறியாதவனாõக இருக்கிறான். பரமாத்மனுக்கு அத்தகைய தோஷங்கள் இல்லை. அவன் மெய்ப்பொருள். அவனுக்குப் புறம்பே எதுவும் இல்லை. எனவே, அவன் விமலன் – குறையொன்றும் இல்லாதவன்.
மொழி அழகு
உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் –
எங்கள் குலத்தில் உன் அவதாரம் நிகழுமளவு புண்ணியம் கொண்டவர்கள் நாங்கள்;
எங்கள் குலத்தில் உன் அவதாரம் நிகழ்ந்ததால் நாங்கள் புண்ணியம் அடைந்தோம்;
புண்ணியனான உன்னையே எங்களில் ஒருவனாகப் பெற்றிருக்கும் புண்ணியவான்கள் நாங்கள்.
***
சீறியருளாதே –
திருப்பாவையில் காணப்படும் முரண்தொடைகளின் சிகரமாகத் திகழ்வது இதுதான். அதென்ன சீறி அருளுதல்?
(வைணவப் பெரியோர் சம்பாஷணைகளில் ‘கோபித்தருளாமல்’ என்று சொல்லும் வழக்கம் உண்டு என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.)
ஆன்மிகம், தத்துவம்
உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் –
புண்ணியனான உன்னையே எங்களில் ஒருவனாக வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் என்பது மகாபாரத வாக்கு. முக்காலத்துக்கும் பொதுவான தர்மத்தின் மனித வடிவுதான் கிருஷ்ணன் என்பது இதன் பொருள். அவனை மட்டுமே பற்றி நின்றவர்கள் கோபிகைகள்.
***
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து –
இங்கு ஆண்டாள் சொல்லும் தகுதியின்மைதான் பக்திக்கான மேலான தகுதியாகும். நான் என்கிற எண்ணம் இருந்தால்தானே எனது அறிவு, எனது தகுதி முதலானவை தோன்றவே முடியும்? அந்த எண்ணம் அறவே இல்லாது ஒழிந்த நிலையே கோபிகைகளின் பக்தி என்பது பாகவதம் கூறும் செய்தி.
”மிக்க வலுவான இல்லறச் சங்கிலிகளை அறுத்துவிட்டு வந்து என்னைச் சேவித்தவர்களும், களங்கமற்ற பக்தி உடையவர்களுமாகிய உங்களுக்கு தேவர்களின் ஆயுட்காலத்திலும் நான் பிரதி உபகாரம் செய்யச் சக்தியற்றவன்.”
– கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் சொன்னது
(ஸ்ரீமத் பாகவதம்)