spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வீடு வாடகைக்கு தேடறீங்களா? இதோ உங்களுக்காக..

வீடு வாடகைக்கு தேடறீங்களா? இதோ உங்களுக்காக..

- Advertisement -
house
house

பெண்களே வாடகைக்கு வீடு பார்க்க போகும் போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று பாக்கலாம்.

வீடு பார்க்கப் போகும்போது, பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து, அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனெனில், நடந்து சென்றால் தான் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியும். கணவர், கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால், மனைவியோ, குழந்தைகளோ, அடிக்கடி வெளியே செல்ல பஸ் தான் தேவைப்படும்!

முடிந்தவரை, உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி அருகிலேயே, வீடு இருக்கும்படி பாருங்கள். வீட்டைச் சுற்றி இடமிருந்தால், அதன் வழியே நடந்து சுற்றி பாருங்கள். அப்போது தான், எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டை பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.
நீங்கள் குடிபோகும் வீட்டில், ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி செய்யாமல் இருந்தால், நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள்.

யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும் போது தான், வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு, அந்த வீடு போதுமா என்பது தெரிய வரும். தண்ணீர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று, நீங்களே சோதித்து பாருங்கள்.

பாத்ரூமில் தண்ணீர் அடைத்து போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்களை, “லாக்’ பண்ண முடியாமல் இருப்பது என்று, எதுவாக இருந்தாலும், வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சரி செய்ய சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்தபின், அவர் செய்து தர மாட்டார்.

சில இடங்களில், கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு, மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர், நாய் வளர்த்தால், எங்கு கட்டி வைப்பார் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால், அது குரைத்துக் கொண்டே இருப்பது, உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். மேலும், அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், பேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என, ஒரு நோட்டில் குறிப்பிட்டு, உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால், நீங்கள் காலி பண்ணும் போது, ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள் தான் தண்டம் அழ வேண்டி வரும்.

bedroom-1
bedroom 1

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில், எத்தனை வீடுகள் உள்ளன என, கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனெனில், அவர்கள் செல்லும் பாதை, உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ, இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என கவனியுங்கள்.

நீங்கள் வாகனம் ஏதாவது வைத்திருந்தால், வண்டியை நிறுத்த இடம் உள்ளதா என்பதை கவனியுங்கள். வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒரு முறை உயர்த்துவர் என்பதை, தெளிவாக பேசிக் கொள்ளுங்கள்.

தண்ணீருக்கு தனி தொகை, பொது மின் உபயோகத்துக்கு தனி கட்டணம், அது இது என்று பராமரிப்புச் செலவு என்ற பெயரில் கூடுதலான தொகையும், தனி மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மிக அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும்போது வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையிலான முரண்பாடுகள் மிக அதிகமாகும். வேறு வாடகை வீட்டைத் தேட தோன்றும்.

எனவே, வாடகைதாரர் – வீட்டு உரிமையாளர் முரண்பாட்டைத் தவிர்க்க ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, கரண்ட் பில், ஒயிட் வாஷ், அட்வான்ஸ் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது அட்வான்ஸ் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் ஒயிட் வாஷ் அடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் ஒயிட் வாஷ் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்னை இல்லாமல் போய்விடும்.

வாடகை ஒப்பந்தப் பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் – உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்துக்குத்தான் போடுவார்கள். 11 மாதத்துக்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்துக்கு மேற்பட்ட பத்திரப் பதிவுகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் வீட்டு வாடகைப் பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன

வீட்டுக்கான முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் ஐந்து மாத வாடகையை முன்பணமாக வாங்குவர்களும் உண்டு. 10 மாத வாடகை முன்பணமாக வாங்கிபவர்களும் உண்டு. இப்போது லீஸ் என்ற பெயரில் லட்சக்கணக்கில் தொகையும் வசூலிக்கப்படுகிறது. உண்மையில், சாமர்த்தியத்தின் அடிப்படையிலேயே முன்பணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். வாங்கும் சம்பளத்தில் பாதித் தொகையை வீட்டு வாடகைக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் சிலர் இருக்கிறார்கள். இப்படி, உங்கள் வாடகை தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10,000 ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.

அதுபோல வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது புத்தகங்கள் ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கின்றன. வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்றால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்தில் உள்ளவர்கள், முன்ஸிப் நீதி மன்றங்களை நாடலாம்.

தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும்.

இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும் என்பதே நிஜம். ஆனால், வீட்டு உரிமையாளர்களில் சிலர் மிக நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இருந்தாலும், வாடகை ஒப்பந்தம் இன்றைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று என்பதை மறுக்க முடியாது.

வீட்டு உரிமையாளர்கள், ஆயிரம் கண்டிஷன்கள் போட்டு, டென்ஷன் ஏற்படுத்திவிடுவர். நாமும் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe