spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்தி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்!

தி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்!

- Advertisement -
the great indian kitchen

அமேசான் பிரைமில் ஜோ பேபி இயக்கத்தில் வெளியான  தி கிரேட் இந்தியன் கிச்சன் மூவி பார்த்தேன். முதல் 40 நிமிடங்களுக்கு கதாநாயகி பாத்திரம் தேய்ப்பதிலையே  பொழுது போய் விடுகிறது.

கதாநாயகன் புதிதாக திருமணம் ஆனவன். ஆனால் ஹீரோவைப் பார்த்தால் நடுத்தர வயதானவன் போல் தாடி மீசையோடு இருக்கிறான். ஒருவேளை மலையாளத்தில் இப்படித்தான் இருப்பார்களோ என்னவோ! பெண்ணும் நல்ல வளர்ந்தவளாக இருக்கிறாள்.  ஆனால் நல்ல அழகான குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கிறாள்.

இந்த சினிமாவில் மலையாளம் எனக்கு சரியாகப் புரியாவிட்டாலும் சப் டைட்டில் இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

இது பொதுவாக எல்லா பெண்களும் அனுபவிக்கும் விஷயங்கள் தான். வீட்டு வேலைகளை கவனிக்காமல் மனைவியின் தேவைகள் புரியாமல் யோகா செய்யும் கணவன். வெளிநாட்டில் இருக்கும் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க போயிருக்கும் மாமியார்.  விறகு அடுப்பில் தான் சாதம் வடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மாமனார்.

the great indian kitchen1

இரவு சப்பாத்தி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் கணவன். தன்னுடைய துணிகளை வாஷிங் மெஷினில் போடக்கூடாது… கையால்தான் துவைக்கும் கல்லில் துவைக்க வேண்டும் என்று அதிகாரம் செய்யும் மாமனார், மருமகள் மீது மகனிடம் கோள் மூட்டுவதில் வல்லவராக இருக்கிறார்.

வீட்டில் சமையலறை  சிங்க் ஒழுகுகிறது. சாக்கடை தண்ணீர் கிச்சனில் வருகிறது. அதை துடைப்பதும் வெளியில் எடுத்து ஊற்றுவதும் அவளுக்குப் பிடிப்பதில்லை. அதை பற்றி கணவரிடம்  பிளம்மரை அழைத்து ரிப்பேர் செய்யும்படி பலமுறை கூறுகிறாள். அவன் துளியும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவளுக்கு அருவருப்பாக இருக்கிறது. அந்த வேலைகள் எல்லாம் ஆரம்பத்திலேயே அவளுக்குப் பிடிப்பதில்லை.
அவள் கணவனும் மாமனாரும் டைனிங்க் டேபிளில் உணவு பரிமாறும் போது காய்கறித் துண்டுகள் பச்சைமிளகாய் முருங்கைக்காய் போன்றவற்றைக் கடித்து வீசி வீசி டைனிங் டேபிளிலேயே எறிகிறார்கள். அதை  தட்டிலேயே ஒரு மூலையில் வைப்பதோ அல்லது வேறு ஒரு பிளேட்டில் வைப்பதோ செய்வதில்லை. அவள் அருவருப்பாக அவற்றையெல்லாம் கிளீன் செய்கிறாள்.

ஒருமுறை ஹோட்டலுக்கு செல்கிறார்கள் இந்த பெண்ணும் கணவனும். அங்கு அசைவ உணவை உண்டு விட்டு அவன் அந்த எலும்புத் துண்டுகளை ஒரு பிளேட்டில் போடுகிறான். அதைப் பார்த்து அவள் சொல்கிறாள், “பரவாயில்லையே… நீங்கள் வெளியில் வரும்போது மேனர்ஸ் கடைபிடிக்கிறீர்கள்” என்கிறாள். அவனுக்கு சுருக்கென்று ஈகோ எங்கோ உதைக்கிறது.

“என் மேனர்சுல என்ன தப்பு கண்டுபிடித்தாய்?” என்று கேட்கிறான்.

“வீட்டில் அங்கே அப்படி போடுவதில்லையே.. டேபிள் மீது வீசி எறிகிறீர்களே?” என்றாள்.
“அது என் வீடு. என் இஷ்டம். என் கம்ஃபோர்ட்படித்தான் இருப்பேன். நீ எல்லாம் தெரிந்தவளோ” என்று அவளை ஏசுகிறான்.

வீட்டிற்கு வந்த பின் படுக்கை அறையில் அவள் ‘சாரி!’ சொன்னால் தான் ஆயிற்று… மன்னிப்பு கேட்டால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்கிறான். அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சாரி சொல்கிறாள்.

the great indian kitchen2

அதோடு ஒருநாள் இரவில் அவர்கள் தாம்பத்தியத்தில் கூட அவள் அவனுக்கு ஒரு சின்ன சஜஷன் கொடுக்கிறாள். அவனுக்கு இன்னமும் அதிகமாக கோபம் வருகிறது.

இது ஆரம்பத்தில் அமேசான் பிரைமிலும் நெட்ப்ளிக்ஸிலும்  வரவில்லையாம். ஏனென்றால் சபரிமலை குறித்த பிரச்சனை இதில் வருகிறது என்பதாக செய்திகள் படித்தேன். இப்போது அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

மேலும் சபரிமலை குறித்த பிரச்சனையில் இந்த திரைப்படத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதை விட வீட்டுக்கு விலக்கான நேரத்தில் இருக்கும் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பற்றியதாக இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.  பெண்கள் வீட்டுக்கு விலக்கான போது வேறெங்கு செல்ல முடியும்? வீட்டில் தானே இருக்க முடியும்? அவளை பார்க்க கூடாது… அவள் வெளியில் துணி உலர்த்த கூடாது… என்று ஏகப்பட்ட கட்டளைகள்.

 அவனும் அவன் அப்பாவும் சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள். அந்த சமயத்தில் அவள் வீட்டுக்கு விலக்காகிகிறாள். கதவை சாத்திக் கொண்டே  வீட்டிற்குள் இருக்கிறாள்.

வீட்டுப் பெண்கள் வேறெங்கு செல்ல முடியும்? அவன் வேண்டுமானால் அவளைப் பார்க்காமல் இருக்கட்டும். தன்னை அடக்கிக் கொள்ளட்டும். பெண்கள் மீது விதித்துள்ள கட்டளைகள் ஏன்? அவர்கள் எங்கு தான் போவார்கள்? என்ற கேள்விகள் தானாகவே பார்வையாளர்களுக்கு எழுகிறது.

“நீ ஏன் உன்னுடைய உள்ளாடைகளை வெளியில் வெயிலில் உலர்த்தினாய் ஆண்கள் பார்க்கும்படி?” என்று அவர்களுக்கு உதவியாக வந்த  பெண்மணி கேட்கிறாள்.
இந்தப் பெண் சொல்கிறாள், “அவை நன்றாக காயா விட்டால் நோய் வரும். உள்ளாடைகள் நன்றாக காய வேண்டும் என்பதற்காக காய வைத்தேன்” என்கிறாள்.
அதை அவர்கள் ஏற்கவில்லை. இதுபோல் சின்ன சின்ன கட்டளைகள். 
இவள், “நான் டான்ஸ் டீச்சர் வேலைக்கு அப்ளை செய்ய போகிறேன்” என்கிறாள்.

அதற்கு அவள் மாமனார், “நம் வீட்டில் யாரும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. கூடாது” என்று கட்டளை இடுகிறார்.

அவன் சொல்கிறான் அவளிடம் தனிமையில், “இப்போதைக்கு அதை விட்டுவிடு. பார்க்கலாம்” என்று.

அவன்  “பார்க்கலாம்” என்றால் என்ன நடக்கும் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதால் லேப்டாப் எடுத்து அப்ளை செய்து விடுகிறாள்.

ஒரு நாள் அவளுக்கு வேலை உத்தரவு கடிதம் வருகிறது அதை பார்த்துவிட்டு அவள் மாமனார், “நான்தான் உன்னை அப்ளை செய்யக்கூடாது என்று சொன்னேனே. எங்கள் குடும்பத்தில் படித்த பெண்களை கூட நாங்கள் வேலைக்கு அனுப்பவில்லை” என்று அவளுக்கு ஒரு கிளாஸ் எடுக்கிறார்.

அவள் கணவன் வந்தவுடன் தந்தை மகனிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார். அவன் அவளிடம்  கத்துகிறான். அவள் பொறுமையாக இருக்கிறாள்.

கணவனும் அவன் அப்பாவும் ஐயப்பன் மாலை போட்டுக்கொண்டு  வீட்டில் பூஜையில் இருக்கும் போது, டீ போட்டு தர சொல்லி ஆணையிடுகிறான் கணவன்.

இவள் பொறுத்து பொறுத்து பார்த்து ஆத்திரம் அதிகமாகி அந்த சாக்கடை தண்ணீர் இரண்டு கப்புகளில் எடுத்துக்கொண்டு வைத்துவிட்டு வருகிறாள்.

அவள் கணவனும் மாமனாரும் மாலையை கழட்டி வைத்துவிட்டு அவளை அடிப்பதற்காக  ஓடிவருகிறார்கள் சமையலறைக்கு. இவள் அந்த சாக்கடை தண்ணீர் ஒரு வாளியில்  எடுத்து அவர்கள் முகத்தில் வீசி விட்டு சமையலறையைவெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு  செருப்பு மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள்.

பிறந்த வீட்டுக்குச் செல்கிறாள். அவள் அம்மா அவளை திட்டுகிறாள்.

” வா போய் சாரி சொல்லி மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து உன்னை நான் அங்கு விட்டு விட்டு வருகிறேன்” என்கிறாள்.

இவளோ ஆத்திரம் தாங்காமல் அமர்ந்திருக்கிறாள். அந்த சமயத்தில் அவளுடைய சகோதரன் வீட்டிற்கு வந்து இவளுடைய தங்கையிடம், “போய் குடிக்க தண்ணி எடுத்து வா!” என்கிறான்.

“உனக்கு வேண்டிய தண்ணீரை நீயே எடுத்து குடிக்க கூடாதா?” என்று இவள் கத்துகிறாள்.

இவள் வாழ்க்கை என்ன ஆகிறது? கணவன் தவறை உணருகிறானா? என்பதே மீதி கதை.

இதில் கதாபாத்திரங்களுக்கு பெயர் இல்லை. 
இதில் இந்த பெண் படும் அனுபவங்கள் எல்லாமே சென்ற தலைமுறைப் பெண்கள்… பொதுவாக எல்லா பெண்களும் அனுபவிப்பது தான் என்று தோன்றியது.  ஆனால் ஒரு ஹிந்து குடும்பத்தில் மட்டுமேவா இப்படி நடக்கிறது?

குடும்பக் கதை. அதிகம் உரையாடல்கள் இல்லை. கதாநாயகன் முகம் இருக்கமாகவே இருக்கிறது கடைசி வரை. கதாநாயகியும் ஒரே போன்ற உடையில் எளிமையாக வந்து போகிறாள்.

கதாநாயகியின் எதிர்காலம் என்ன? கணவன் திருந்தினானா? இதெல்லாம் மீதி கதை.

விமர்சனம்: ராஜி ரகுநாதன்

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe